Tuesday, 22 March 2016

சிறுதானிய வற்றல், வடாகம் வகைகள்

வரகுக் கூழ் வற்றல்  

குதிரைவாலி முறுக்கு வற்றல் 
 
தினைத் தக்காளி வற்றல்  

சாமை கறிவேப்பிலை வற்றல் 
 
வரகு பச்சைமிளகாய் வற்றல்  

மக்காச்சோள கூழ் வற்றல் 
 
கம்பு-பாலக் கீரை வடாகம்  

வரகு முறுக்கு வற்றல்
வற்றல், வடாகம் போடும் முன் கவனிக்க வேண்டியவை

*  காலை இளம்வெயிலில் பிழியவும்.

*  காகம் கொத்தாமல் இருக்க, கறுப்புத்துணி அல்லது குடையை, குச்சியில் கட்டி வைக்கவும்.

*  வடாகத்துகுரிய  மாவை மெஷினில் அரைக்கும்போதே, ஜவ்வரிசி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

*  புளித்த மோர் அல்லது எலுமிச்சைச் சாறு விடலாம்.

*  மாவு புளித்த பிறகு வற்றல் இட்டால், சுவை கூடும்.

  துணியில் வற்றல் பிழிந்தால், காயவிட்டு, நீர் தெளித்து, துணியில் இருந்து எடுக்கவும்.

  2 அல்லது 3 நாட்கள் நன்கு காய விடவும். சரியாக காயவில்லை என்றால், பூஞ்சை பிடித்து விடும்.

*  வற்றல் போட ஏற்ற காலம் மார்ச், ஏப்ரல் மாதங்கள்.

  வற்றல் வகைகளை மைக்ரோவேவ் அவனிலும் பொரிக்கலாம்.

-கிருஷ்ணகுமாரி ஜெயகுமார்

வரகுக் கூழ் வற்றல்

தேவையானவை:

 வரகரிசி - 500 கிராம்
 ஜவ்வரிசி - 100 கிராம்
 சீரகம் - 2 டீஸ்பூன்
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 புளித்த மோர் - ஒரு கப்
 உப்பு - தேவையான அளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 பச்சைமிளகாய் - 4
செய்முறை:
வரகரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைத்துக் கொள்ளவும். உப்பு சேர்த்துக் கலக்கி புளிக்க விடவும். மறுநாள் பெரிய குக்கரில் 4 லிட்டர் தண்ணீர் விட்டு அரைத்த மாவை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். புளித்த மோர், பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து நன்கு கலக்கி கொதிக்க விடவும். இதனுடன் ஜவ்வரிசியையும் சேர்த்துக் கிளறவும். கெட்டியாக கூழ் காய்ச்சி, ஸ்பூனால் எடுத்து, பாலிதீன் ஷீட்டில், வட்ட வட்டமாக ஊற்றவும். நன்கு காய வைத்து எடுத்து, தேவைப்படும் போது பொரிக்கவும். வரகுக் கூழ் வற்றல் தயார்.

திரைவாலி முறுக்கு வற்றல்

தேவையானவை:
 குதிரைவாலி மாவு - 500 கிராம்
 ஜவ்வரிசி - 100 கிராம்
 உப்பு - தேவையான அளவு
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
ஜவ்வரிசியை முதல்நாள் இரவு ஊற விடவும். காலையில் பச்சைமிளகாய் விழுது, பெருங்காயம் சேர்த்து அரைத்து, தண்ணீரில் கலக்கவும் இதனுடன் குதிரைவாலி மாவு சேர்த்துக் கலக்கவும். 3 மடங்கு நீர் சேர்த்துக் கொதிக்க விட்டுக் கிளறவும். வெந்து, கெட்டியானதும் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கி ஆறவிட்டு, முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து நன்றாகக் காயவிட்டு எடுத்தால். குதிரைவாலி முறுக்கு வற்றல் ரெடி.

தினைத் தக்காளி வற்றல்

தேவையானவை:
 தினை மாவு - 2 கப்
 ஜவ்வரிசிமாவு - அரை கப்
 தக்காளிச்சாறு - ஒன்றரை கப்
 மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தக்காளிச்சாறு உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், தேவையான அளவு நீர் விட்டு கொதிக்க விடவும். கொதிவரும் போது கலந்து வைத்துள்ள தினைமாவு, ஜவ்வரிசி மாவு சேர்த்து கெட்டியாகக் கிளறவும். பிறகு ஆறவிட்டு சிறிது, சிறிதாக கிள்ளி வைத்து நன்கு காய விடவும். நன்கு காய்ந்ததும் சேர்த்து வைக்கவும். தேவையான போது எடுத்துப் பொரிக்கவும்.

சாமை கறிவேப்பிலை வற்றல்

தேவையானவை:
 சாமை மாவு - 2 கப்
 ஜவ்வரிசி மாவு - அரை கப்
 கறிவேப்பிலை, பச்சைமிளகாய் அரைத்த விழுது - அரை கப்
 உப்பு - தேவையான அளவு
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
செய்முறை:
சாமை மாவு, ஜவ்வரிசி மாவு, பெருங்காயம், உப்பு சேர்த்துக் கலக்கவும். கறிவேப்பிலை, பச்சைமிளகாய் விழுதுடன் 2 மடங்கு நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதி வரும் போது கலந்த மாவைக் கொட்டிக் கிளறி, கெட்டியானதும் ஆறவிட்டு, ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டுப் பிழிந்து காய விடவும் தேவையான போது எடுத்துப் பொரிக்கவும்.

வரகு பச்சைமிளகாய் வற்றல்

தேவையானவை:
 வரகு மாவு - 2 கப்
 ஜவ்வரிசி - அரை கப்
 பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வரகு மாவு, ஜவ்வரிசி (ஒரு மணி நேரம் ஊற வைத்தது) பச்சைமிளகாய் விழுது, சீரகம், பெருங்காயம், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலந்து நீரில் கலக்கவும். அடுப்பில் வைத்து கிளறி, வெந்ததும் இறக்கி ஸ்பூனால் எடுத்து, பிளாஸ்டிக் ஷீட் அல்லது சுத்தமான வெள்ளைத் துணியில் ஊற்றிக் காய விடவும். தேவையான போது எடுத்துப் பொரிக்கவும்.

மக்காச்சோள கூழ் வற்றல்

தேவையானவை:
 மக்காச்சோள மாவு - ஒரு கப்
 அரிசி மாவு - அரை கப்
 உப்பு - தேவையான அளவு
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 பிரண்டைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
மக்காச்சோள மாவு, அரிசி மாவு, உப்பு, சீரகம், பிரண்டைச்சாறு, பெருங்காயம், பச்சைமிளகாய் விழுது சேர்த்துக் கலக்கவும். ஒரு கனமான பாத்திரத்தில் 5 கப் நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் மாவைக் கொட்டி கிளறி, வெந்ததும் இறக்கி, ஆறவிட்டு, ஸ்பூனால் எடுத்து துணியில் ஊற்றிக் காயவிடவும். தேவையான போது எடுத்துப் பொரித்தெடுக்கவும்.

கம்பு-பாலக் கீரை வடாகம்

தேவையானவை:
 கம்பு மாவு - 2 கப்
 அரிசி மாவு - அரை கப்
 ஜவ்வரிசி - அரை கப்
 பாலக்கீரை, பச்சைமிளகாய் அரைத்த விழுது - ஒரு கப்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 புளித்த மோர் - ஒரு கப்
செய்முறை:
கம்பு மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயம், சீரகம் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் பாலக் கீரை, பச்சைமிளகாய் அரைத்த விழுது புளித்த மோர் தேவையான நீர் சேர்த்துக் கலக்கிக் கொதிக்க விடவும். நன்கு வெந்ததும் இறக்கி, இதனுடன் முதல் நாள் இரவே ஊற வைத்த ஜவ்வரிசியைக் கலக்கவும். வாழை இலை அல்லது மந்தார இலையை எடுத்துக் கொள்ளவும். இந்த மாவை கைகளில் வைத்து தட்டவும் (வாழை இலை என்றால், தேவைக்கேற்ற மாதிரி வெட்டி நன்கு படிய வைத்துக் கொள்ளவும். இலை வடாகம் போடுவதற்கேற்ற தட்டுகள் இருந்தால், இதையும் எடுத்துக் கொள்ளலாம்.) சிறிதளவு எண்ணெய் தடவி, ஆவியில் வேகவிட்டு எடுத்து, நன்கு காய விடவும். பிறகு பொரித்தெடுக்கவும்.

வரகு முறுக்கு வற்றல்

தேவையானவை:
 வரகரிசி மாவு - 2 கப்
  பொடித்த ஜவ்வரிசி - அரை கப்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்கி, தேவையான நீர் சேர்த்துக் கலக்கி, கொதிக்க விடவும். நன்கு வெந்ததும், ஆற விட்டு ஓமப்பொடி பிழியும் அச்சில் மாவைச் சேர்த்துப் பிழிந்து காய விடவும். காய்ந்ததும் எடுத்து, தேவைப்படும் போது பொரித்தெடுக்கவும்.

சமையல் சந்தேகங்கள்: சீஸ் சேர்த்து சப்பாத்தி செய்யலாமா?

சீஸ் சேர்த்து சப்பாத்தி செய்யலாமா?

சீஸில் புரதச்சத்து நிரம்பி உள்ளதால், தாராளமாக உபயோகப்படுத்தலாம். கடைகளில் கிடைக்கும் சிறிய க்யூப் சீஸ்களை வாங்கி, மெல்லிய சீஸ் துருவியின் உதவியால் துருவி, மாவுடன் கலந்து சப்பாத்தி இடலாம். சமைக்கும் சீஸை (குக்கிங் சீஸ்) இதற்கு உபயோகப்படுத்த வேண்டாம். பதப்படுத்தப்பட்ட சீஸ் க்யூப்ஸ் உபயோகிக்கவும். ஓர் ஆழாக்கு மாவுக்கு 25 கிராம் (ஒரு க்யூப்) உபயோகப்படுத்தவும்.

ஊறுகாய் கெடாமல் இருக்க, என்ன சேர்க்க வேண்டும்?

ஊறுகாய் கெடாமலிருக்க, வினிகர் மற்றும் சோடியம்-பென்சோவேட் சேர்க்கலாம். தயாரித்து விற்பனை செய்வதாக இருந்தால், மட்டும் இவ்வித பிரிசர்வேட்டிவ் உபயோகப்படுத்தவும். முடிந்தவரை வீட்டில் தயார் செய்த கடுகுப்பொடி, வெந்தயப்பொடி தூவி, சரியான பக்குவத்தில் தயார் செய்து, உலர்ந்த பாட்டிலில் வைத்தால் ஊறுகாய் நீண்ட நாட்களுக்குக் கெடாது.
காலிஃபிளவர் வறுவலை முறுகலாகச் செய்வது எப்படி?

காலிஃபிளவரை பெரிய பூக்களாகப் பிரித்தெடுத்து புழுக்கள் இல்லாமல் நன்கு கழுவவும். பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். அடுப்பில் வைத்து தண்ணீர் கொதித்துவரும் போது காலிஃபிளவரைச் சேர்த்து உடனே அடுப்பை அணைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, தண்ணீரை வடிகட்டவும். 

ஒரு கிண்ணத்தில் மைதா மாவுடன் சிறிது உப்பு, மிளகாய்த்தூள், சிறிது பேக்கிங் பவுடர் சேர்த்து கெட்டியான தோசை மாவு பக்குவத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் உலர்ந்த ரொட்டித்தூளை வைத்துக் கொள்ளவும். காலிஃபிளவரை மைதா மாவுக் கலவையில் முக்கியெடுத்து, பிரெட் தூளில் புரட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சூடான தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

தயிர் உறை ஊற்ற மண் கிண்ணத்தை உபயோகிக்கலாமா? இதை சுத்தம் செய்வது எப்படி?

தயிர் உறை ஊற்ற தாராளமாக மண் கிண்ணத்தை உபயோகிக்கலாம். வெயில் காலத்துக்கு மிகவும் குளிர்ச்சியைக் கொடுக்கும். இந்தப் பாத்திரத்தை ‘லிக்விட்’ சோப் கொண்டு கழுவி உபயோகப்படுத்தவும்.

கடைகளில் கிடைக்கும் சோயா உருண்டைகள் மற்றும் சோயா துகள்களை எப்படி உபயோகப்படுத்துவது? எதற்கெல்லாம் உபயோகப்படுத்தலாம்?

சோயாவை அரைத்துப் பதப்படுத்தி சுலபமாக ஜீரணிக்கும். அளவுக்கு மாற்றப்பட்டு, உலர வைத்துச் செய்யப்படுவதே சோயா உருண்டைகள். உங்கள் சமையலில் காய்கறிகள் உபயோகப்படுத்திச் செய்யும் எந்தப் பொரியலோடும் இதைச் சேர்த்துக் கொள்ளலாம். பிரஷர் குக்கரில் சோயா உருண்டைகளைச் சேர்த்து, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, வெயிட் வைத்த பிறகு ஒரே ஒரு விசில் வந்தவுடன் அணைத்து விடவும். ஆறிய பிறகு தண்ணீரை வடித்து உருண்டைகளைப் பிழிந்து விட்டு, மறுபடியும் ஒருமுறை குளிர்ந்த நீரில் போட்டுப் பிழிந்தெடுத்து உபயோகப்படுத்தினால், சோயாவின் வாடை வராது.

பொடியாகக் கிடைக்கும் சோயாவைப் பொரியலுக்கும் உருண்டைகளாகக் கிடைப்பதை பிரியாணி, மசாலா, குருமா, கட்லெட், குழம்பு சூப் வகைகள் போன்ற பலவற்றுக்கும் காய்கறிகளோடு சேர்த்து உபயோகப்படுத்தப் பழகவும். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு, இது சிறந்த புரதச்சத்து உள்ள உணவாக அமையும்.

பதப்படுத்திய அரிசி மாவு தயாரிப்பது எப்படி?

பச்சரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக வடிய விடவும். தண்ணீர் முழுவதும் வடிந்ததும் ஒரு துணியின் மீது பரப்பி நிழலில் ஆற விடவும். இதை மெஷினில் கொடுத்து நைசாகத் திரித்து ஒரு பெரிய தட்டில் பரவ விட்டு ஆற வைக்கவும். பிறகு சலித்து பாட்டிலில் சேர்த்து வைக்கவும். தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கலாம். இதுதான் பதப்படுத்திய அரிசி மாவு செய்யும்முறை.
இனிப்பு கலந்த குழிப்பணியாரம் தயாரிப்பது எப்படி? எவ்வளவு மாவுக்கு எவ்வளவு வெல்லம் சேர்க்க வேண்டும்? 

ஓர் ஆழாக்கு பச்சரிசிக்கு அரை ஆழாக்கு அவல் என்ற விகிதத்தில் எடுத்து தனித்தனியே கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். அரைக்கும் போது இரண்டையும் ஒன்றாக அரைத்து, கடைசியில் ஓர் ஆழாக்கு துருவிய வெல்லம் சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும். இதில் ஏலக்காய்த்தூள் மற்றும் கால் டீஸ்பூன் சமையல் சோடா சேர்த்துக் கலக்கவும். பணியாரக் கல்லைச் சூடாக்கிக் குழிகளில் நெய் விட்டு மாவை ஊற்றி சுட்டெடுக்கவும். மாவு அரைத்த உடனேயே பணியாரம் சுடலாம்.

பேக்கிங் பவுடர் மற்றும் ஆப்ப சோடா இரண்டும் ஒன்றா? 

ஆப்ப சோடா என்பது சமையல் சோடா எனப்படும் சோடியம்-ைப-கார்பனேட் (sodium-bi-corbonate) பேக்கிங் பவுடர் என்பது இதே சோடியம்-பை-கார்பனேட்டுடன் சிறிது ஸ்டார்ச் மற்றும் டார்டாரிக் ஆஸிட் கலந்து தயாரிக்கப்படுவது. கேக் மற்றும் பிஸ்கட்டுகளில் பேக்கிங் பவுடர் சேர்க்கும் போது சிறிது சிறிதாக கார்பன்-டை-ஆக்ஸைடு வெளிவருகிறது. இதனால் கேக் உப்பி பெரிதாக வரும்.

பலவகை சாதங்கள் செய்யும் போது கையால் பிசையலாமா? அப்படிக் கையால் பிசைந்தால் சாதம் கெட்டுப் போய்விடுமா?


சமைத்த உணவுகள் எதுவாக இருந்தாலும் கைகள் பட்டால், பெரும்பாலும் கெட்டுப்போய்விடும். எனவே எதையுமே கைகள் படாமல் பயன்படுத்துவதே நல்லது.
மைக்ரோவேவ் அவனில் சமைக்கும் போது காய்கறிகளில் உப்பு எப்போது சேர்க்க வேண்டும்?

காய்கறிகளைச் சமைக்கும்போது அவற்றில் சிறிதளவு (2 டேபிள்ஸ்பூன்) தண்ணீர் தெளித்து மூடி, வேகும் வரை சமைக்க வேண்டும். பொரியல் செய்யும் போது எண்ணெய், உப்பு அதற்கு வேண்டிய காரம் (தேங்காய், மிளகாய் விழுது) எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அவனில் வைக்கலாம்.

குழம்புக்குச் செய்யும்போது காய்கறி வெந்த பிறகு, வேகவைத்து மசித்த பருப்பு, புளிக்கரைசல், சாம்பார்பொடி எல்லாவற்றையும் சேர்க்கும் போது உப்பையும் சேர்க்கலாம். உப்பைக் குறைத்துச் சேர்க்க வேண்டும். அவனில் வேகவைக்கும்போது உப்பு, காரம் போன்றவை அதிகமாகி விடும். எனவே, கவனமாக சமைக்க வேண்டும்.
‘காஸ் அடுப்பில் சமைக்கும் போது சிம்மில் வைத்தால், காஸ் வீணாகி விடும்’ என்று என் வீட்டில் உள்ளவர்கள் கூறுகிறார்கள் சரியா?

‘சிம்மில்’ வைத்தாலும் காஸ் வீணாகும் என்பது தவறு. எந்தெந்த சமையலுக்கு எப்படி உபயோகப்படுத்த வேண்டுமென்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

சிறிய பாத்திரங்கள், காப்பர் பாட்டம் பாத்திரங்கள், நான்-ஸ்டிக் பாத்திரங்கள் போன்றவற்றுக்கு முடிந்தவரை மிதமான தணலில் வைப்பது நலம். குக்கர் போன்றவற்றை உபயோகப்படுத்தும்போது முழு பிரஷர் வந்த பிறகு, குறைந்த தணலில் வைப்பது நலம். அதிக தணல்தான் காஸ் வீணாவதற்கு வழி வகுக்கும்.

மேலும் எந்தப் பாத்திரத்தை வைத்தாலும், பாத்திரத்தின் அடிபாகத்துக்கு உள்ளாகவே தணல் இருக்க வேண்டும். பக்கங்களில் மேலே வருவது போல வைக்கக் கூடாது. சமையல் பண்டங்களில், சரியான தண்ணீரும் அளவுக்கு தகுந்த பாத்திரமும் வைக்கும் போது கேஸ் மிச்சப்படும்.
ஒரு கிலோ சாதாரண சர்க்கரையைப் பொடி செய்தால் எவ்வளவு சர்க்கரைப் பொடி கிடைக்கும்? கேக் பிஸ்கட் செய்யும் போது சாதாரண சர்க்கரை அளவு எடுக்க வேண்டுமா? பொடித்த சர்க்கரை அளவு எடுத்துக் கொள்ள வேண்டுமா என்பதைத் தெரிவிக்கவும்.

பொதுவாக சர்க்கரையை ஆழாக்கில் அளந்தால் ஒரு கிலோவுக்கு 5 ஆழாக்கு வரும். அதாவது ஒரு ஆழாக்கு என்பது 200 கிராம் என்ற அளவு சரியாக இருக்கும். அதுவே பொடி செய்த சர்க்கரையானால் ஒரு ஆழாக்கு தலைதட்டி அளந்தால், 150 கிராம் அளவு வரும். கேக், பிஸ்கட் போன்றவைகளில் பொதுவாக பொடித்த சர்க்கரைதான் உபயோகப்படுத்தப்படுகிறது. வெயிட் போட்டு அளப்பதென்றால் எல்லோர் வீடுகளிலும் வெயிட் மிஷின் இருக்காது என்பதால், இந்தக் கணக்கை எடுத்துக் கொள்ளலாம்.
வடநாட்டில் ‘ஜல்ஜீரா’ என்ற பானம் கோடையில் தயாரிக்கப்படுகிறது. அதை வீட்டில் செய்வது எப்படி? 

சிறிது புளியை ஊற வைத்து, நீர்த்த புளிக் கரைசலாகக் கரைத்து வடிகட்டி 3 டம்ளர் எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ருசிக்கேற்ப உப்பு 2 டீஸ்பூன், சர்க்கரை 3 டீஸ்பூன், அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், ஒரு சிட்டிகை சிவப்பு மிளகாய்த்தூள், துருவிய இஞ்சி, வறுத்துப்பொடி செய்த சீரகத்தூள் 2 டீஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய புதினா இலை, எலுமிச்சைத் துண்டுடன் மேலே ஐஸ்கட்டிகளைக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால், சிறிது உலர்ந்த மாங்காய்த்தூளை (அம்சூர் பொடி) கலந்து கொள்ளலாம்.

மாங்காயை வைத்து செய்யப்படும் ஊறுகாய்களுக்குத்தான் கடுகு எண்ணெய் உபயோகிக்க வேண்டுமா?

எந்தவித ஊறுகாய்க்கும் கடுகு எண்ணெய் உபயோகப்படுத்தலாம். பச்சையாக ஊற்றாமல் சூடு செய்து ஆறவிட்டு, அதற்கு பிறகு ஊறுகாயில் உபயோகப்படுத்தலாம். வதக்கி செய்யும் (பச்சைமிளகாய் போன்றவை) ஊறுகாய் வகைகளுக்கும் உபயோகப்படுத்தலாம்.

அவல் வடாகமும், ஜவ்வரிசி வடாகமும் பொரிக்கும் போது சிவந்து விடுகிறது. பளிச்சென்று வெண்மையாக வருவதில்லை ஏன்?

பொதுவாக ஜவ்வரிசி வடாகத்தில் புளித்த மோர் சேர்ப்பதால் சிவக்கும். வடாகம் செய்ய ஜவ்வரிசியை, தயாரித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது ஆறியதும், இத்துடன் எலுமிச்சை ஜூஸ் எடுத்துச் சேர்த்துக் கலக்கவும். பிறகு காய வைத்துப் பொரித்தெடுத்தால் வடாகம் அவ்வளவாக சிவக்காது. அவல் வடாகம் போன்றவை எப்படியும் சிவக்கத்தான் செய்யும்.