Saturday, 6 May 2017

குழந்தைகளிடம் சொல்லக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள்! #GoodParenting


குழந்தை
குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. இதுதான் அதன் எல்லை என வரையறுக்க முடியாது. குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். நம்மையே அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். நாம் என்ன பேசுகிறோமோ, அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாகப் பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள் பற்றி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர், காயத்ரி அருண். 
1. எந்தச் சூழ்நிலையிலும் 'நீ ஒரு கெட்ட பையன் (பெண்)' என்ற வார்த்தையைப் பயன்படுத்த கூடாது. குழந்தைகள் எதையும் முழுமையாக நம்பும் மனநிலைகொண்டவர்கள். அவர்கள் தவறே செய்துவிட்டாலும், குற்றவாளியாக்கும் வார்த்தைகளைச் சொல்லக் கூடாது. அதற்கு மாறாக, ''நீ ரொம்ப நல்ல பையனாச்சே. இப்படி நடந்துக்கலாமா? இதனால் மற்றவர்கள் என்ன நினைப்பாங்க தெரியுமா?'' என பக்குவமாகப் பேசி நல்லது, கெட்டதைப் புரியவைக்க வேண்டும். 
2. 'நீ உன் சகோதரன் / சகோதரி மாதிரி இல்லை' என்ற ஒப்பீடும் வேண்டாம். உலகில் யாருமே பயனற்றவர்கள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். மற்றவர்களோடு ஒப்பீடு செய்யும்போது, சகோதர, சகோதரிகளின் மீது வெறுப்பும் பொறாமையும் ஏற்படும். வாழ்வில் பெரிதாக தோல்வி அடைந்ததாக நினைப்பார்கள். இது, சக குழந்தைகளிடையே பிரச்னையை ஏற்படுத்தும். 
3. எதற்கெடுத்தாலும் ‘நோ’ சொல்லாதீர்கள். ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, 'இல்லே, முடியாது, நோ' போன்ற வர்த்தைகளை சட்டெனப் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் பெற்றோர் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். குழந்தை கேட்கும் விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால், 'அப்புறம் பார்க்கலாம், இது ஏன் தேவையற்றது' என விளக்குங்கள். 
குழந்தைகள்
4. 'நீயெல்லாம் இதைச் செய்யக் கூடாது? உன்னால இதைச் செய்ய முடியாது’ என்பது போன்ற தன்னம்பிக்கையைக் குறைக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். தங்கள் சக்திக்கு மீறிய செயலை செய்ய முயலும்போது உடனிருந்து உதவுங்கள். கடினமானதைப் புரியவையுங்கள். முயற்சி மற்றும் தோல்விகளில் இருந்தே நிறைய கற்றுக்கொள்கிறார்கள். ஆரம்பத்திலேயே தடுக்கும்போது, புதிதாக செய்வதையே நிறுத்திவிடுவார்கள். 
5. 'என்னோடு பேசாதே' என்ற வார்த்தை வேண்டாம். பேசுதல், அரவணைத்தல் மூலமே பெற்றோர் - குழந்தைகள் பிணைப்பு பலப்படுகிறது. எனவே, ‘‘என்னோடு பேசாதே’’ என முகத்தில் அடிப்பது போல பேச்சைத் துண்டிக்காதீர்கள். குழந்தைகள் மனதில் உள்ள விஷயங்களைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளவும் விவாதிக்கவும் அனுமதியுங்கள். அதில் உடன்பாடில்லாத விஷயங்களை உங்கள் பேச்சு, வார்த்தை, முகபாகங்களால் வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரை குழந்தைகளிடம் பேசுங்கள். குழந்தைகள் பேசுவதை கவனியுங்கள். குழந்தைகளுடன் கோபமாக பேசுவது, விவாதிப்பதைத் தவிர்த்து, 'உன் வார்த்தைகளால் ’அப்செட்’ ஆகிவிட்டேன்' என சொல்லுங்கள். இதன் மூலம், உங்களுடன் எப்படிப் பேச வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார்கள். 
6. பையன்கள் இதைச் செய்ய கூடாது? பெண்கள் அதைச் செய்ய கூடாது என சொல்லக் கூடாது. குழந்தைகள் பாலின வேறுபாடின்றி வளர்வது பல சமூகப் பிரச்னைகளை குறைக்கும். வளரும் பருவத்தில் பாலின ரீதியான விதிமுறைகளை வகுக்கக் கூடாது. இருபாலின குழந்தைகளையும் சமமாக பாவிக்க வேண்டும். இது, பெண்களுக்கான வேலை, இது பையன்களுக்கான வேலை எனப் பிரிக்க கூடாது. வீட்டு வேலையில் ஆரம்பித்து அனைத்தையும் இருபாலினத்தவரும் கற்றுக்கொள்ள, தெரிந்துகொள்ள வாய்ப்பளியுங்கள். 
7. 'என்னைத் தனியாக விடு, நிம்மதியாக விடு' என்பது போன்ற வார்த்தைகளைப் பிரயோகிக்க கூடாது. பெற்றோர்கள் மன அழுத்தத்திலோ, குழப்பமான சூழலிலோ இருக்க நேர்ந்தாலும், உங்கள் சூழலைப் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த மாதிரியான எதிர்மறையான வார்த்தைகளைக் கேட்கும் குழந்தைகள், 'பெற்றோருக்கு நம் மீது அன்பு இல்லை' என்று நினைப்பார்கள். நீங்கள் பெரிய துயரத்தில் இருப்பது போல காட்டிக்கொள்ளாமல், பக்குவமாகப் பேசி திசை திருப்ப வேண்டும். 
குழந்தை
8. 'அப்பா வரட்டும் உனக்கு இருக்கு, உங்க மிஸ்கிட்டே சொல்லிடறேன்' போன்ற வார்த்தைகள் கூடாது. குறிப்பாக, அம்மாக்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார்கள். இது தாயின் இயலாமையின் வெளிப்பாடே. ஆசிரியரையும் அப்பாவையும் பயமுறுத்தும் பிம்பமாக உருவாக்குவது அவர்கள் மீது பயத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். ஒவ்வொரு நாளும் பயத்துடன் கழிக்கும் சூழலை குழந்தைகளுக்கு உருவாக்காதீர்கள். குழந்தைகள் தவறு செய்யும்போது, அந்த விஷயத்தை அப்பாவிடம் அவர்களே தெரியப்படுத்தி திருத்திக்கொள்ள அனுமதியுங்கள். 
9. 'உன்னை மாதிரி ஒரு பிள்ளையை யாருக்குமே பிடிக்காது. யாருமே உன்னை வெச்சுக்க மாட்டங்க' போன்ற வார்த்தைகள் கூடவே கூடாது. எடுத்துக்காட்டாக, குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது அதிக சத்தத்தை ஏற்படுத்தினால், 'கத்தாதே... வெளியே போ!' என்று நாமும் கத்தாமல், 'மெதுவாகப் பேசுங்கள். அல்லது வெளியே விளையாடுங்கள்' என்று கூறலாம். உங்கள் குழந்தை சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால், எதனால் என்பதை ஆராய்ந்து சரிசெய்யுங்கள்.
10. 'இவ்வளவு பெரியவனா இருந்தும் இப்படி செய்யுறியே, ஆள்தான் பெருசா வளர்ந்திருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். குழந்தைகள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் மகிழ்ச்சி, துக்கத்தை அவர்கள் வழியில் வெளிப்படுத்த அனுமதியுங்கள். குழந்தை விரும்பும் கிரிக்கெட் வீரர் சதம் அடிக்கும்போது படுக்கையில் ஏறிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினால், நீங்களும் கொண்டாடுங்கள். மாறாக, நீங்கள் கோபப்படுவதால், அவர்கள் மனதில் தாழ்வுமனப்பான்மை உண்டாகும். ஒரு பெற்றோராக உங்கள் குழந்தையைத் தன்னம்பிக்கையுடன், மகிழ்ச்சியாக உலகத்தை எதிர்கொள்ள உறுதுணையாக இருங்கள்

குழந்தைகள் முன்பு சண்டையிடுவது தவறு... ஏன் தெரியுமா?



குழந்தைகள்

திகபட்ச அன்பும் உரிமையும்கொண்டது தம்பதியரின் உறவு. ஆனால், இருவரில் ஒருவர் சிறு தவறு செய்யும்போது, 'அது எனக்குத் தெரிந்துவிட்டது. அதை உனக்குப் புரியவைக்கிறேன் பார்' என்று உடனடியாக வரிந்துகட்டி இறங்கும்போதுதான் சண்டை ஆரம்பிக்கிறது. அடுத்தடுத்து வார்த்தைகள் தடித்து விழுகிறபோது, பெருங்கோபமாக உருவெடுக்கிறது. பெற்றோரின் சண்டையால், அதில் தொடர்பற்ற குழந்தைகள் மனவேதனை அடைகிறார்கள். 'அப்பா, அம்மா பிரிஞ்சுபோய் நம்மளையும் கைவிட்ருவாங்களோ' என்ற பய உணர்வுக்கு ஆளாகிறார்கள். ''எந்தச் சூழ்நிலையிலும் குழந்தைகளின் முன்னிலையில் பெற்றோர், தங்களுக்குள் மிதமிஞ்சிய கோபத்தை வெளிப்படுத்திக்கொள்ளக் கூடாது'' என்கிறார் குழந்தைகள் நல ஆலோசகர் சுகன்யா. இதுபோன்ற சூழலில் குழந்தைகள் முன்பு தம்பதியர் நடந்துகொள்ள வேண்டிய வழிமுறைகளையும் சொல்கிறார். 
* முழுமையாகப் பேசத் தெரியாத காலத்திலேயே குழந்தைகள், பெற்றோரின் முகங்களைப் பார்த்து உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். பெற்றோர் கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்துதான் அவர்களும் கற்றுக்கொள்கின்றனர். பெரிதாக கத்துவது, பேசாமல் புறக்கணிப்பது போன்ற செயல்களை பெற்றோரிடமிருந்தே கற்றுக்கொள்கிறார்கள். எனவே, காமம், கோபம் இரண்டையும் குழந்தைகள் முன்னிலையில் வெளிப்படுத்திக்கொள்ளாதீர்கள். 
குழந்தைகள்
* தம்பதியருக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டாலும், அதை அறிவுப்பூர்வமாகப் புரியவைக்க முயற்சியுங்கள். முரண்பாடுகளை எப்போதும் எதார்த்தமாக அணுகுங்கள். இணையிடம் எதையும் மறைக்க வேண்டாம். ஒரு விஷயம் ஏன் இணைக்கு அவசியமில்லை என்பதை தெளிவாகப் புரியும்படி சொல்லும் பொறுப்பு உள்ளது. இணையோடு ஆரோக்கியமாக விவாதித்து, உண்மை நிலையைப் புரியவைக்கலாம். வார்த்தைகளால் அடக்க முயற்சிப்பதும், கோபத்தைக் காட்டுவதும் தவறான அணுகுமுறை. 
* யாரும் தனக்கான தேவையைப் போராடித்தான் பெறவேண்டியுள்ளது. தனது கருத்தை எதிராளிக்குப் புரியவைக்க உரையாடலும், விவாதமும் அவசியம். எது நடந்தாலும் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இணையை அடக்குவது இயல்புக்கு எதிரானது. உங்களுக்குள் சிறிய விஷயங்களில் பிரச்னை ஏற்படும்போது, குழந்தையை நீதிபதியாகப் பாவித்து, அவர்களிடம் சொல்லி கருத்தைக் கேளுங்கள். பிரச்னைகளால் என்னென்ன விளைவுகள் ஏற்படும், அதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்றும் விளையாட்டாக குழந்தைகளோடு விவாதியுங்கள். இதனால், பிரச்னையின் டென்ஷன் குறையும். குழந்தைக்கும் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொடுத்ததாக இருக்கும். 
* தனிமனித சுதந்திர எல்லைகளை மதிக்காமல் ஊடுருவும்போதுதான் இருவருக்கும் இடையில் முரண்பாடு, கசப்பு எல்லாம் உருவாகின்றன. அன்பு, காதல், பாசம் எதுவாக இருப்பினும் இணையின் சுதந்திரத்தை பறிக்கும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தும்போது வெறுப்பு உண்டாகிறது. இருவருக்குமான பிரைவசியை மதித்து சுதந்திரத்தை அனுமதிக்கலாம். பெற்றோர் விவாதிக்கும்போது, சம்பந்தமின்றி குழந்தைகள் தலையிடத் தேவையில்லை என்பதைப் புரியவையுங்கள். பரஸ்பரம் எவர் மனதையும் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள். 
* சிறிய பிரச்னைகளும் ஈகோவால் பெரிதாக உருவெடுக்கிறது. குழந்தைகள் முன்பு கத்துவது, கடுமையான வார்த்தைகள் பேசுவதைத் தவிர்க்கவும். ‘நீ தேவையில்லை’’ என்று இணையைப் புறக்கணிப்பதும், குழந்தைகளிடம் ‘‘நீ யார் பக்கம்’’ என்று கேட்பதும் மிகப்பெரிய தவறு. இதுபோன்ற தம்பதியரை குழந்தைகள் மதிப்பதில்லை. தம்பதியருக்குள் ஒற்றுமை இல்லாதபோது, குழந்தைகள் வழி தவறுவது எளிதாகிறது. தம்பதியருக்குள் நடக்கும் இணக்கமற்ற சூழல், குழந்தைகளின் நம்பிக்கையையும் லட்சியத்தையும் சிதைக்கும். 
* பெற்றோர் சண்டையிடும் வீடுகளில், குழந்தைகள் அதைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்வதும் உண்டு. குழந்தைகள் அதிகம் செலவழிக்கவும், பொறுப்பின்றி நடந்துகொள்ளவும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் தவறு செய்யும்போது அதைக் கண்டறியவும் பெற்றோருக்கு நேரம் இருக்காது. அவர்கள் மனம் முழுக்க இருவருக்குள்ளான பிரச்னை பற்றியே யோசித்துக்கொண்டிருக்கும். இதுபோன்ற சூழலில் பொய் சொல்வது, மனம்போன போக்கில் செல்வது போன்ற நடத்தை மாற்றங்களுக்கும் குழந்தைகள் ஆளாகின்றனர். 
எனவே, தம்பதியர்களுக்குள் நடக்கும் சண்டையால் பாதிக்கப்படுவது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களையே நம்பியிருக்கும் குழந்தைகளின் எதிர்காலமும்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 
* மனிதர்கள் நிறையும் குறையும் நிறைந்தவர்கள். அவரவருக்கென்று சில பிரத்தியேக குணங்கள் இருக்கும். தம்பதியர் பாசிட்டிவான விஷயங்களைக் கண்டுபிடித்து பாராட்டிக்கொள்வதன் வழியாக, நெகட்டிவ் விஷயங்கள் காணாமல்போகும். நல்ல விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கொண்டாடுவது என்று குடும்பத்தின் மகிழ்வைத் தக்கவைத்துக்கொள்வது அவசியம். இதன் மூலமே குழந்தைகள் வளர ஆரோக்கியமான சூழலை உருவாக்கித்தர முடியும்