Monday 18 November 2013

சச்சின்... சச்சின்.. உயிருள்ளவரை மறக்கமாட்டேன் - உருக்கம்!


சச்சின் டெண்டுல்கர் என்ற மகா சகாப்தம், கிரிக்கெட் உலகின் பெரு நிகழ்வு முடிவுக்கு வந்தது. மைதானத்தில் முடிவுக்கு வந்துள்ளது. முடிவில் அவர் நெகிழ்ச்சியுடன் ஒருவரையும் விட்டு விடாமல் நினைவில் வைத்து நன்றியைப் பதிவு செய்தார். மைதானமே ஏன் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்குமே இது ஒரு உணர்ச்சிகரமாந்ன நாள், தருணம்!

குறிப்பாக கடைசியாக அவர் "24 ஆண்டுகளாக சச்சின்... சச்சின்... என்று நீங்கள் கத்துவது என் காதுகளில் நான் உயிருள்ளவரை கேட்டுக் கொண்டேயிருக்கும்" என்று கூறியவுடன் அனைவரும் மீண்டும் ஒரு முறை சச்சின்... சச்சின் என்று கத்தினர். மைதானத்தில் ரசிகர்களது கண்களில் கண்ணீர்.

கடைசியில்...

பிட்சில் வந்து குட்லெந்தில் குனிந்து மண்ணைத் தொட்டு கண்களில் ஒத்திக் கொண்டு கண்களை துடைத்தபடியே சச்சின் டெண்டுல்கர் பெவிலியனின் ஓய்வறைக்குள் சென்றார்.

சச்சின் டெண்டுல்கரின் உருக்கமான பேச்சு இதோ:

"நண்பர்களே, செட்டில் ஆகுங்கள், நீங்கள் கத்தினால் நான் மேலும் உணர்ச்சிவசப்பட்டுவிடுவேன். என்னுடைய இந்த 24 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் இன்றுடன் முடிவடைகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. யாரையும் மறக்கக்கூடாது என்பதற்காக பட்டியலுடன் வந்துள்ளேன். அப்படியும் பெயர் ஏதாவது விடுபட்டுவிட்டால் என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

முதலில் எனது தந்தை. 1999ஆம் ஆண்டு மறைந்தார். அவர் இல்லையெனில் நான் உங்கள் முன் நின்று கொண்டிருக்க முடியாது. உனது கனவுகளை துரத்து விட்டு விலகாதே என்று கூறிய அவர் குறுக்கு வழியை ஒருநாளும் பின்பற்றாதே என்றார். என்னுடைய அம்மா, மிகவும் குறும்புத்தனமான என்னை எப்படி பொறுத்துக் கொண்டார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது. என்னை கட்டுப்படுத்துவது மிக கடினம். நான் 11 வயதில் மட்டையைப் பிடிக்கத் தொடங்கினேன் அப்போது முதல் எனக்காக பிரார்த்தனை செய்துவந்தார் என் அம்மா.

என்னுடைய...மாமா மற்றும் அத்தையுடன் நான் 4 ஆண்டுகள் இருந்துள்ளேன், பள்ளி நாட்களில். அவர்கள் என்னை தங்களது மகன் போலவே நடத்தினர், இப்பவும் கூட அப்படித்தான். என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்று அழைத்து வந்தது முக்கியமானதாகும். என் பெரிய அண்ணன் நிதின் அதிகம் பேசமாட்டார், ஆனால் ஒருமுறை அவர் என்னிடம் கூறினார் நீ எது செய்தாலும் அது 100% பங்களிப்புடன் இருக்கும் என்பதை நான் அறிவேன் என்றார். என் மீது அவர் வைத்த நம்பிக்கைக்கு நான் நன்றிக் கடம் பட்டிருக்கிறேன்.

என்னுடைய முதல் கிரிக்கெட் பேட்டை எனக்கு அளித்தவர் என் சகோதரி சவிதா. நான் பேட் செய்யும்போதெல்லாம் உண்ணா நோன்பு இருந்து பிரார்த்தனை செய்த நல்ல உள்ளம். அஜித் டெண்டுல்கர் பற்றி நான் கூற என்ன இருக்கிறது. இந்தத் தருணம் அவருக்குச் சொந்தமானது நாங்கள் இருவருமே இந்தக் கனவை சேர்ந்தெ வாழ்ந்திருக்கிறோம். எனது கிரிக்கெட் வாழ்க்கைக்காக அவர் தன் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளார்.

அவர்தான் 11 வயதில் பயிற்சியாளர் அச்ரேக்கரிடம் என்னை அழைத்துச் சென்றார். நாங்கள் இருவரும் கிரிக்கெட் உத்திகளை நிறைய விவாதிப்போம், அவரது உத்திகள் மீது எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. நேற்று இரவு கூட நான் அவுட் ஆனது பற்றி என்னுடன் விவாதித்தார் அஜித் டெண்டுல்கர், நான் இனி விளையாடாத காலங்களில் கூட அவர் கிரிக்கெட் உத்திகளையே என்னுடன் விவாதிப்பார் என்று நம்புகிறேன். அவருடனான விவாதங்கள் இல்லையெனில் நான் ஒரு குறைபட்ட கிரிக்கெட் வீரனாகவே இருந்திருப்பேன்.

1990 ஆம் ஆண்டு என் வாழ்வில் நிகழ்ந்த அழகான தருணம் நான் என் மனைவியை அஞ்சலியை சந்தித்ததுதான். ஒரு டாக்டராக அவருடைய கரியர் மிகப்பெரிதாக இருந்தது. ஆனால் என் கிரிக்கெட்டிற்காக அவரது கரியரை தியாகம் செய்து குடும்பத்தைப் பார்த்துக் கொண்டார். எனது கிரிக்கெட்டை ஊக்குவித்தார். நான் அவரிடம் நிறைய முட்டாள்தனமான விஷயங்களை பேசியிருக்கிறேன், அவர் அதை பொறுத்துக் கொண்டதற்கு நன்றி. (இதக்கூறும்போது அஞ்சலி கண்ணீரை துடைத்துக் கொண்டார்).

பிறகு எனது மகன் அர்ஜுன் மகள் சாரா இர்வரும் இரு வைரங்கள். அவர்களது பிறந்த நாட்கள் பலவற்றை நான் இழந்திருக்கிறேன், 14 16 ஆண்டுகள் உங்களுடன் நான் அதிக நேரம் செலவழிக்கவில்லை. ஆனால் அடுத்த 16 ஆண்டுகள் உங்களுடன்தான் அதிக நேரம் இருக்கப்போகிறேன்.

கடந்த 24 ஆண்டுகள் என்னுடைய நண்பர்கள் நிறைய பங்களிபு செய்துள்ளார்கள். குறிப்பாக காயங்களினால் எனது கரியர் முடிவுக்கு வந்து விடுமோ என்று நான் அஞ்சிய வேளையில் என்னுடன் காலை 3 மணியிலிருந்தே கூட இருப்பார்கள். அப்படியெல்லாம் ஆகாது என்று ஆறுதல் கூறுவார்கள்.

என்னுடைய கிரிக்கெட் வாழ்வு...

11 வயதில் துவங்கியது. என் பயிற்சியாளர் அச்ரேக்கர் தற்போது மைதானத்தில் இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அவர் என்னை தன் ஸ்கூட்டரில் மும்பையில் உள்ள மைதானங்களுக்கெல்லாம் கூட்டிச்சென்றுள்ளார். எனக்கு மேட்ச் பிராக்டீஸ் தேவை என்பதால் அவர் மிகவும் பாடுபட்டுள்ளார். அவர் என்னிடம் ஒரு முறை கூட 'நன்றாக விளையாடினாய்' 'வெல் டன்' என்றெல்லாம் கூறியதில்லை. ஏனெனில் எனக்கு அலட்சியம் ஏற்பட்டு விடக்கூடாது என்று. இப்போது என் கரியர் முடிவுக்கு வந்தது இப்போது கூறுவார் என்று நினைக்கிறேன்.

மும்பை கிரிக்கெட் சங்கத்தை மறக்க முடியாது, நான் கூப்பிடும்போதெல்லாம் வேலையை விட்டு விட்டு வந்து எனக்கு வலையில் பந்து வீசிய பவுலர்களை மறக்க முடியாது. 16 வயதில் என் மீது நம்பிக்கை வைத்து என்னை டெஸ்டில் தேர்வு செய்த அணித் தேர்வாளர்கலுக்கு நன்றி. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மிக்க நன்றி.

என்னுடன் விளையடிய அனைத்து...

மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கும் நன்றி. திரையில் ராகுல், சவ்ரவ், லஷ்மண் ஆகியோரை பார்க்கிறேன் அனில் கும்ளே வரவில்லை. தோனி இந்த டெஸ்டின் போது 200வது டெஸ்டிற்கான தொப்பியை என்னிடம் கொடுக்கையில் நான் அணிக்காக ஒரு மெசேஜை கூறினேன், அதை இப்போதும் கூறுகிறேன், நாம் அனைவரும் நம் நாட்டிற்காக விளையாடுகிறோம் என்பதில் பெருமையடையவேண்டும் இதேபோல் நாட்டிற்காக மேலும் பல பெருமைகளை பெற்று தரவேண்டும்' என்று கூறினேன். நாட்டிற்காக நீங்கள் சரியான உணர்வுடன் சேவை ஆற்றுவீர்கள் என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன்.

எனது கடினமான உடலை தகுதியுடன் ஃபிட்டாக இருக்க கடும் முயற்சிகளை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு நான் நன்றி கூறாமல் போனால் அது முறையாகாது.

என்னுடைய பள்ளி நாட்கள் முதல் இன்று வரை என்னை ஆதரித்த ஊடகங்களுக்கு நன்றி. எனது ஆட்டத்தின் அரிய புகைப்படங்களை பிடித்து வைத்துள்ள புகைப்பட கலைஞர்களுக்கு நன்றி.

எனது பேச்சு நீண்டுகொண்டே போகிறது என்று நினைக்கிறேன், எனது ஆட்டத்தைப் பார்க்க உலகெங்கிலும் வந்திருக்கும் பார்வையாளர்களுக்கு நன்றி. என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய இதய பூர்வமான நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். சச்சின் சச்சின் என்று நீங்கள் கத்துவது என் உயிர் பிரியும் வரை என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

இவ்வாறு பேசினார் சச்சின்.
அவசியத் தேவையாகிவிட்ட ஆங்கிலம்!

ஆங்கிலம்தான், அறிவின் அடையாளம் என்பது நடைமுறை நிஜம். எனவே, கல்வி அறிவுபெற படிக்க மட்டுமல்ல, கார்ப்பரேட் உலகில் ஜெயிக்க மட்டுமல்ல, எந்தத் துறையில் சிகரம் தொடவும், எழுதுவதிலும், பேசுவதிலும் ஆங்கிலத் திறமை அவசியம்.

பள்ளிக் கூடமே போகாத எத்தனையோ பேர் பிசினஸில் ஜெயித்திருக்கிறார்களே என்று கேட்கலாம். பிசினஸ் நடத்த ஆங்கிலப் புலமைத் தேவையில்லை. ஆனால், இன்றைய கல்வியில் படிப்பதற்கு ஆங்கிலத் தேர்ச்சி அவசியமாகிவிட்டது.

இன்ற இணையதளமும், மின்னஞ்சலும், பிசின¬ஸ் உலகமயமாக்கிவிட்டன. இதனால் உலகத்தில் உள்ள அனைத்து நாட்டினரும் ஆங்கிலத்தைக் கற்று வருகின்றனர்.

ஆங்கிலத்தைக் கண்டு பயப்படாதீர்கள். தினமும் நூல் நிலையம் செல்லவேண்டும். ஆங்கில நாளிதழ் படிக்கவேண்டும். ஐந்து புதிய வார்த்தைகளின் அர்த்தங்களை கண்டுபிடிக்க வேண்டும். பின்னர் அதனை மனப்பாடம் செய்யவேண்டும்.

சுமாராக ஒரு வருடத்திற்கு 1,500 வார்த்தைகளைக் கற்க முடியும். ஐந்தே வருடங்களில் 7,500 வார்த்தைகளை கற்கலாம். இவ்வாறு கற்றுக்கொள்ளும்போது ஆங்கில ஞானம் பிரமாதமாக வளரும். இந்த டெக்னிக்கை பின்பற்றி ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் திறமையை வளர்த்தால் வாழ்க்கையில் கற்பனை செய்து பார்த்தேயிராத மாற்றங்கள் வரும் என்பது உண்மை.

தமிழை மறக்காதீர்கள். தமிழை மறப்பது தாயை மறப்பதற்கு சமம். ஆனால், மாறிவரும் உலகில் ஆங்கில அறிவு அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது.
சிக்கன திருமணத்துக்கு சிறப்பான நிதி ஆலோசனைகள் !

திருமண வயதில் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்களின் கனவு, என் பிள்ளையின் கல்யாணத்தை இந்த ஊரே வியக்கும்படி நடத்த வேண்டும் என்பதே.
இப்படி கனவு காணும் பலரும் அந்தக் கனவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தங்களுடைய வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்து திருமணத்தை விமரிசையாக நடத்திவிட்டு கடைசியில் தங்களுடைய எதிர்காலத் தேவைக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நிற்பார்கள்.

இன்றைய சூழ்நிலையில் திருமணம் என்பது ஆடம்பரமாகவே இருக்கிறது. அளவுக்கு அதிகமாக பணம் வைத்திருப்பவர்கள் கல்யாணத்தைத் திருவிழா மாதிரி நடத்தினால் கவலை இல்லை. ஆனால், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும்  இதில் சிக்கி சித்ரவதைக்குள்ளா கிறார்கள்.  கௌரவத்துக்காகவும், அவங்க செஞ்ச மாதிரி நாமும் செய்யணும் என்று கடன் வாங்கி அல்லது சொத்தை விற்று செய்வதுதான் தவறு.
முன்பெல்லாம் திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே சொந்தபந்தங்கள் அனைவரும் வந்துவிடுவார்கள். ஆளுக்கு ஒரு வேலை என பிரித்துக்கொண்டு செய்வார்கள். ஆனால், இன்றைய சூழ்நிலை அப்படியல்ல. மேலும், பெரும்பாலான குடும்பங்கள் தனித்தனி குடும்பங்களாகச் சிதறிவிட்டன. எனவே, குடும்பத்தில் உள்ள நான்கு பேர் மட்டுமே அத்தனை வேலைகளையும் செய்ய வேண்டும்.

இந்நிலையில் திருமணத்தை நல்லபடியாக நடத்துவதற்காக இவர்கள் தேடிச் செல்வது கல்யாண கான்ட்ராக்டர்களைத்தான். இவர்களிடம் என்ன சேவைகள் கிடைக்கும், அவற்றை சிக்கனமாக தேர்வு செய்வது எப்படி என்பதைச் சொன்னார் சுபம் கணேசன்.
''முன்பெல்லாம் சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்து சமைப்பதற்கு மட்டும் ஆள் வைப்பார்கள். தற்போது  சமையலோடு, வரவேற்பு, பத்திரிகை அடிப்பது, மணப்பெண்ணுக்குத் தேவையான மேக்கப், ஷாப்பிங், பட்டுப்புடவை, அலங்கார நகைகள், அலங்காரம், வீடியோ மற்றும் புகைப்படம், கச்சேரி, டிராவல்ஸ், ரூம் புக் செய்வது, மண்டபம் புக் செய்வது, மணமக்களின் தேனிலவுக்கான ஏற்பாட்டை செய்து தருவது என அனைத்து வேலைகளையும் செய்து தருகிறார்கள்.  
கான்ட்ராக்டர்களைத் தேர்வு செய்யும்போது அவர்களின் சேவை பற்றி ஒருசிலரிடமாவது விசாரிப்பது நல்லது. அடுத்து, அவர்கள் வசூலிக்கும் கட்டணம் நியாயமானதுதானா என்பதை, மற்ற கான்ட்ராக்டர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்'' என சில உஷார் விஷயங்களை பட்டியல்போட்டு எடுத்துச் சொன்னார் அவர்.
திருமணத்தைச் சிக்கனமாகச் செய்வது எப்படி? என்கிற கேள்விக்கு விளக்கமாக பதில் சொன்னார் ஸ்ரீ ரமணா கேட்டரிங் நிறுவனர் ஸ்ரீதர்.
''திருமணங்களில் சாப்பாடு முக்கியம்தான். ஆனால், இதிலும் தங்களுடைய பெருமையைக் காட்டவேண்டும் என 40, 45 வகை உணவுகளை வழங்கச் சொல்கிறார்கள். வருகிறவர்கள் இத்தனை அயிட்டத்தையும் சாப்பிட முடியுமா என யாரும் யோசிப்பதில்லை. இதனால் அதிக அளவு சாப்பாடு வீணாகும். ஒரு சாப்பாட்டுக்கு குறைந்தபட்சம் 250-300 ரூபாய் வரை செலவாகும்.  எனவே, பப்ஃபே சிஸ்டம் வைத்தால் சாப்பாடு வீணாவதைக் குறைக்கலாம். அதேபோல, திருமணத்துக்கு எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைத் தெளிவாகத் திட்டமிடுவது அவசியம்.
ரிசப்ஷனுக்கு பூ அலங்காரம் செய்ய கூடுதலாக 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை செலவாகும். ஆனால், செயற்கை பூ அலங்காரம் செய்தால் நிறைய பணம் மிச்சமாகும். மாப்பிள்ளை அழைப்புக்கு சினிமாக்களில் வருவதுபோல சாரட் வண்டியை வைக்கிறார்கள். இதற்கு மட்டுமே குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் செலவாகும்.
அடுத்து, கேளிக்கை என்ற பெயரில் கிளி ஜோசியம், சுகர் கேண்டி, கோலா ஐஸ், மெகந்தி திருவிழா என பல ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். இதிலும் 20-30  வகை என வைக்கிறார்கள். இது ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரை செலவாகும். இதேபோல, மெகந்தி திருவிழா என்று ஒன்றை வைத்து, இதற்கு மட்டும் 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்கிறார்கள்.
ஆயிரம் ரூபாயில் நல்ல மல்லிகைப்பூ மாலை கிடைக்கும்.  ஆனால், லைட்வெயிட், சூர்யா - ஜோதிகா மாலை, வாடாத மாலை என ஒரு ஜோடி மாலைக்கு 3 - 10 ஆயிரம் வரை செலவழிக்கிறார்கள்.

பத்திரிகை என்பது திருமணம் நடைபெறும் விஷயத்தைத் தெரிவிக்க  மட்டுமே. இதிலும் பலர் தங்களுடைய அந்தஸ்தைக் காட்ட ஒரு பத்திரிகைக்கு 300- 500 ரூபாய் வரை செலவழிக்கிறார்கள். சிலர் திருமணத்துக்கு சீர்தரும் பொருட்களைத் தர விலை உயர்ந்த டப்பாக்களைத் தேர்வு செய்கிறார்கள். இதற்கு மட்டுமே 50 ஆயிரம் வரை கூடுதலாகச் செலவாகும்.  
நிச்சயதார்த்தத்தைத் திருமணத்துடன் சேர்த்து வைக்கும்போது கணிசமான தொகை மிச்சமாகும். இதற்கு 1-2 லட்சம் ரூபாய் வரை செலவாகும். பெரும்பாலும் இதை பெண் வீட்டார்தான் செய்வார்கள். திருமணத்துடன் சேர்த்து வைக்கும்போது, அந்தப் பணத்தைத் திருமணத்துக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அடுத்து, திருமணத்தில் புகைப்படம், வீடியோ எடுக்க தனித்தனியாக ஆட்கள் வைப்பதற்கு பதில், இருவீட்டாரும் சேர்ந்து செலவை பகிர்ந்துகொள்ளலாம். சிக்கனமாக செலவழிப்பதன் மூலம் 15 லட்சம் ரூபாய் செலவாகும் திருமணத்தை 10- 12 லட்சத்துக்குள் முடித்துவிடலாம்'' என்றார் ஸ்ரீதர்.

குறைந்தபட்சம் 3 லட்சம் சேமித்து அதை மணமக்கள் பெயரில் 30 வருடங்களுக்கு டெபாசிட் செய்து வந்தால், 9 சதவிகித வட்டி வருமானத்தில் அவர்கள் ஓய்வு பெறும்போது சுமார் 43 லட்சம் கிடைக்கும். இதை அவர்கள் மாத வருமானம் கிடைக்கும் திட்டங்களில் முதலீடு செய்தால், குறைந்தது அவர்களுக்கு மாத வருவாய் 30,000 கிடைக்கும். இதைவிட சிறந்த அன்பளிப்பைப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்துவிட முடியுமா! 
  
பெருமைக்காகச் செய்யப்படும் விஷயங்கள் கூடுதல் செலவையே வைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்!
- இரா.ரூபாவதி,
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்,
ர.சதானந்த்.

 முன்கூட்டியே திட்டமிடுங்கள்!
''அடுத்த இரண்டு, மூன்று வருடங்களில் திருமணத்துக்கு தயாராக இருக்கும் பிள்ளைகளின் திருமண செலவுகாக பெரிய திட்டம் தேவையில்லை. குறுகிய காலத்தில் அதிகமான தொகையைச் சேமிக்க முடியாது. இவர்கள் அதிக ரிஸ்க் இல்லாத கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் 8-9% வரை மட்டும்தான் வருமானம் கிடைக்கும். தவிர, குறுகிய காலம் என்பதால் அதிக முதலீடு செய்யவேண்டியிருக்கும்.
தற்போது 5 அல்லது 10 வயதில் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் நீண்ட கால நோக்கில் பிள்ளைகளின் திருமணத்துக்கு தேவையான சேமிப்பை இப்பவே தொடங்குவது நல்லது. முன்கூட்டியே சேமிக்கத் தொடங்கும்போது குறைவான தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால் போதும்.
தற்போது 5 வயது குழந்தைக்கு 23 வயதில் திருமணம் செய்யும் திட்டம் இருக்கும். திருமணத்துக்கு இன்னும் 18 வருடங்கள் உள்ளன. இன்றைய நிலையில் திருமணத்துக்கு குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் தேவை. 18 வருடம் கழித்து 30.38 லட்சம் ரூபாய் தேவை. இதற்கு இப்போதே நீங்கள் 12 சதவிகிதம் வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் 4,460 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அதை மொத்தமாக முதலீடு செய்வது என்றால் 4.40 லட்சம் ரூபாய் தேவை.
10 வயதில் குழந்தை இருந்தால் உங்களின் இலக்கை அடைய இன்னும் 13 வருடங்கள் உள்ளன. இன்றைய நிலையில் 10 லட்சம் ரூபாயும், பிள்ளையின் திருமணத்தின்போது 24.10 லட்சம் ரூபாயும் தேவைப்படும். இந்தத் தொகை கிடைக்க 12 சதவிகித வருமானம் கிடைக்கும் வகையில் மாதம் 6,474 ரூபாய் முதலீடு செய்யவேண்டியிருக்கும்.
ஒரேமுறை மொத்தமாக முதலீடு செய்ய விரும்பினால் 5.52 லட்சம் ரூபாய் முதலீடு செய்யவேண்டியிருக்கும். நீங்கள் இப்படி முதலீடு செய்யும்போது பணவீக்க விகிதத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 7 சத விகிதமாக வைத்துக்கொள்ளலாம்.
திருமணத்துக்காக முதலீடு செய்யும்போது உங்களின் முதலீட்டை தேவைகளுக்கு ஏற்ப பிரித்துக்கொள்வது நல்லது. அதாவது, நீங்கள் முதலீடு செய்யும் தொகையில் 50-60% வரை ஈக்விட்டி ஃபண்டுகளிலும், 20-30% வரை கடன் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். திருமணத்துக்கு தங்கம் தேவை என நினைப்பவர்கள் 10-15% வரை கோல்டு ஃபண்டுகள் அல்லது இ.டி.எஃப்.-ல் முதலீடு செய்யலாம்.
திருமண தேவைகளுக்காக முதலீடு செய்பவர்கள் சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் பெரிதுபடுத்தாமல் தொடர்ந்து முதலீடு செய்வது அவசியம். அதேபோல, திருமணத்துக்கு ஓர் ஆண்டுக்கு முன்பு முதலீடு செய்த பணத்தை எடுத்து, லிக்விட் அல்லது கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யவேண்டும். மேலும், பிள்ளைகளின் திருமணத்துக்காக முதலீட்டை மேற்கொள்பவர்கள் ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியும் எடுத்து வைப்பது முக்கியம்!'
thanks nv