Monday, 18 November 2013

சச்சின்... சச்சின்.. உயிருள்ளவரை மறக்கமாட்டேன் - உருக்கம்!


சச்சின் டெண்டுல்கர் என்ற மகா சகாப்தம், கிரிக்கெட் உலகின் பெரு நிகழ்வு முடிவுக்கு வந்தது. மைதானத்தில் முடிவுக்கு வந்துள்ளது. முடிவில் அவர் நெகிழ்ச்சியுடன் ஒருவரையும் விட்டு விடாமல் நினைவில் வைத்து நன்றியைப் பதிவு செய்தார். மைதானமே ஏன் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்குமே இது ஒரு உணர்ச்சிகரமாந்ன நாள், தருணம்!

குறிப்பாக கடைசியாக அவர் "24 ஆண்டுகளாக சச்சின்... சச்சின்... என்று நீங்கள் கத்துவது என் காதுகளில் நான் உயிருள்ளவரை கேட்டுக் கொண்டேயிருக்கும்" என்று கூறியவுடன் அனைவரும் மீண்டும் ஒரு முறை சச்சின்... சச்சின் என்று கத்தினர். மைதானத்தில் ரசிகர்களது கண்களில் கண்ணீர்.

கடைசியில்...

பிட்சில் வந்து குட்லெந்தில் குனிந்து மண்ணைத் தொட்டு கண்களில் ஒத்திக் கொண்டு கண்களை துடைத்தபடியே சச்சின் டெண்டுல்கர் பெவிலியனின் ஓய்வறைக்குள் சென்றார்.

சச்சின் டெண்டுல்கரின் உருக்கமான பேச்சு இதோ:

"நண்பர்களே, செட்டில் ஆகுங்கள், நீங்கள் கத்தினால் நான் மேலும் உணர்ச்சிவசப்பட்டுவிடுவேன். என்னுடைய இந்த 24 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் இன்றுடன் முடிவடைகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. யாரையும் மறக்கக்கூடாது என்பதற்காக பட்டியலுடன் வந்துள்ளேன். அப்படியும் பெயர் ஏதாவது விடுபட்டுவிட்டால் என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

முதலில் எனது தந்தை. 1999ஆம் ஆண்டு மறைந்தார். அவர் இல்லையெனில் நான் உங்கள் முன் நின்று கொண்டிருக்க முடியாது. உனது கனவுகளை துரத்து விட்டு விலகாதே என்று கூறிய அவர் குறுக்கு வழியை ஒருநாளும் பின்பற்றாதே என்றார். என்னுடைய அம்மா, மிகவும் குறும்புத்தனமான என்னை எப்படி பொறுத்துக் கொண்டார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது. என்னை கட்டுப்படுத்துவது மிக கடினம். நான் 11 வயதில் மட்டையைப் பிடிக்கத் தொடங்கினேன் அப்போது முதல் எனக்காக பிரார்த்தனை செய்துவந்தார் என் அம்மா.

என்னுடைய...மாமா மற்றும் அத்தையுடன் நான் 4 ஆண்டுகள் இருந்துள்ளேன், பள்ளி நாட்களில். அவர்கள் என்னை தங்களது மகன் போலவே நடத்தினர், இப்பவும் கூட அப்படித்தான். என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்று அழைத்து வந்தது முக்கியமானதாகும். என் பெரிய அண்ணன் நிதின் அதிகம் பேசமாட்டார், ஆனால் ஒருமுறை அவர் என்னிடம் கூறினார் நீ எது செய்தாலும் அது 100% பங்களிப்புடன் இருக்கும் என்பதை நான் அறிவேன் என்றார். என் மீது அவர் வைத்த நம்பிக்கைக்கு நான் நன்றிக் கடம் பட்டிருக்கிறேன்.

என்னுடைய முதல் கிரிக்கெட் பேட்டை எனக்கு அளித்தவர் என் சகோதரி சவிதா. நான் பேட் செய்யும்போதெல்லாம் உண்ணா நோன்பு இருந்து பிரார்த்தனை செய்த நல்ல உள்ளம். அஜித் டெண்டுல்கர் பற்றி நான் கூற என்ன இருக்கிறது. இந்தத் தருணம் அவருக்குச் சொந்தமானது நாங்கள் இருவருமே இந்தக் கனவை சேர்ந்தெ வாழ்ந்திருக்கிறோம். எனது கிரிக்கெட் வாழ்க்கைக்காக அவர் தன் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளார்.

அவர்தான் 11 வயதில் பயிற்சியாளர் அச்ரேக்கரிடம் என்னை அழைத்துச் சென்றார். நாங்கள் இருவரும் கிரிக்கெட் உத்திகளை நிறைய விவாதிப்போம், அவரது உத்திகள் மீது எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. நேற்று இரவு கூட நான் அவுட் ஆனது பற்றி என்னுடன் விவாதித்தார் அஜித் டெண்டுல்கர், நான் இனி விளையாடாத காலங்களில் கூட அவர் கிரிக்கெட் உத்திகளையே என்னுடன் விவாதிப்பார் என்று நம்புகிறேன். அவருடனான விவாதங்கள் இல்லையெனில் நான் ஒரு குறைபட்ட கிரிக்கெட் வீரனாகவே இருந்திருப்பேன்.

1990 ஆம் ஆண்டு என் வாழ்வில் நிகழ்ந்த அழகான தருணம் நான் என் மனைவியை அஞ்சலியை சந்தித்ததுதான். ஒரு டாக்டராக அவருடைய கரியர் மிகப்பெரிதாக இருந்தது. ஆனால் என் கிரிக்கெட்டிற்காக அவரது கரியரை தியாகம் செய்து குடும்பத்தைப் பார்த்துக் கொண்டார். எனது கிரிக்கெட்டை ஊக்குவித்தார். நான் அவரிடம் நிறைய முட்டாள்தனமான விஷயங்களை பேசியிருக்கிறேன், அவர் அதை பொறுத்துக் கொண்டதற்கு நன்றி. (இதக்கூறும்போது அஞ்சலி கண்ணீரை துடைத்துக் கொண்டார்).

பிறகு எனது மகன் அர்ஜுன் மகள் சாரா இர்வரும் இரு வைரங்கள். அவர்களது பிறந்த நாட்கள் பலவற்றை நான் இழந்திருக்கிறேன், 14 16 ஆண்டுகள் உங்களுடன் நான் அதிக நேரம் செலவழிக்கவில்லை. ஆனால் அடுத்த 16 ஆண்டுகள் உங்களுடன்தான் அதிக நேரம் இருக்கப்போகிறேன்.

கடந்த 24 ஆண்டுகள் என்னுடைய நண்பர்கள் நிறைய பங்களிபு செய்துள்ளார்கள். குறிப்பாக காயங்களினால் எனது கரியர் முடிவுக்கு வந்து விடுமோ என்று நான் அஞ்சிய வேளையில் என்னுடன் காலை 3 மணியிலிருந்தே கூட இருப்பார்கள். அப்படியெல்லாம் ஆகாது என்று ஆறுதல் கூறுவார்கள்.

என்னுடைய கிரிக்கெட் வாழ்வு...

11 வயதில் துவங்கியது. என் பயிற்சியாளர் அச்ரேக்கர் தற்போது மைதானத்தில் இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அவர் என்னை தன் ஸ்கூட்டரில் மும்பையில் உள்ள மைதானங்களுக்கெல்லாம் கூட்டிச்சென்றுள்ளார். எனக்கு மேட்ச் பிராக்டீஸ் தேவை என்பதால் அவர் மிகவும் பாடுபட்டுள்ளார். அவர் என்னிடம் ஒரு முறை கூட 'நன்றாக விளையாடினாய்' 'வெல் டன்' என்றெல்லாம் கூறியதில்லை. ஏனெனில் எனக்கு அலட்சியம் ஏற்பட்டு விடக்கூடாது என்று. இப்போது என் கரியர் முடிவுக்கு வந்தது இப்போது கூறுவார் என்று நினைக்கிறேன்.

மும்பை கிரிக்கெட் சங்கத்தை மறக்க முடியாது, நான் கூப்பிடும்போதெல்லாம் வேலையை விட்டு விட்டு வந்து எனக்கு வலையில் பந்து வீசிய பவுலர்களை மறக்க முடியாது. 16 வயதில் என் மீது நம்பிக்கை வைத்து என்னை டெஸ்டில் தேர்வு செய்த அணித் தேர்வாளர்கலுக்கு நன்றி. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மிக்க நன்றி.

என்னுடன் விளையடிய அனைத்து...

மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கும் நன்றி. திரையில் ராகுல், சவ்ரவ், லஷ்மண் ஆகியோரை பார்க்கிறேன் அனில் கும்ளே வரவில்லை. தோனி இந்த டெஸ்டின் போது 200வது டெஸ்டிற்கான தொப்பியை என்னிடம் கொடுக்கையில் நான் அணிக்காக ஒரு மெசேஜை கூறினேன், அதை இப்போதும் கூறுகிறேன், நாம் அனைவரும் நம் நாட்டிற்காக விளையாடுகிறோம் என்பதில் பெருமையடையவேண்டும் இதேபோல் நாட்டிற்காக மேலும் பல பெருமைகளை பெற்று தரவேண்டும்' என்று கூறினேன். நாட்டிற்காக நீங்கள் சரியான உணர்வுடன் சேவை ஆற்றுவீர்கள் என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன்.

எனது கடினமான உடலை தகுதியுடன் ஃபிட்டாக இருக்க கடும் முயற்சிகளை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு நான் நன்றி கூறாமல் போனால் அது முறையாகாது.

என்னுடைய பள்ளி நாட்கள் முதல் இன்று வரை என்னை ஆதரித்த ஊடகங்களுக்கு நன்றி. எனது ஆட்டத்தின் அரிய புகைப்படங்களை பிடித்து வைத்துள்ள புகைப்பட கலைஞர்களுக்கு நன்றி.

எனது பேச்சு நீண்டுகொண்டே போகிறது என்று நினைக்கிறேன், எனது ஆட்டத்தைப் பார்க்க உலகெங்கிலும் வந்திருக்கும் பார்வையாளர்களுக்கு நன்றி. என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய இதய பூர்வமான நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். சச்சின் சச்சின் என்று நீங்கள் கத்துவது என் உயிர் பிரியும் வரை என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

இவ்வாறு பேசினார் சச்சின்.

No comments:

Post a Comment