Thursday, 4 September 2014

எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்’ என்ற முதுமொழி, உடல் அமைப்புக்கு மட்டுமல்ல, நம் உணவருந்தும் பழக்கத்துக்காகவும் கூட சொல்லப்பட்டதாக வைத்துக்கொள்ளலாம். வயிறு நிறைய, கிடைத்ததையெல்லாம் உண்டு வாழும் நமக்கு, ஏதாவது நோய் வந்து தொல்லை கொடுக்கும்போதுதான், உடல் நலத்தின் மீது கவனம் திரும்புகிறது. தினமும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முழுவதுமாக செரிக்கப்படுவதும் இல்லை; செரித்த உணவு முழுமையாக உடலை விட்டு வெளியேறுவதும் இல்லை. சில சமயங்களில், இந்த கழிவுப் பொருட்கள் உடனடியாக வெளியேறாமல் உள்ளேயே தங்கிவிடும்.

இன்றைக்கு பலருக்கும் இதுதான் ஏகப்பட்ட உடல் உபாதைகளுக்கான அஸ்திவாரம். இப்படிச் சேர்ந்துவிடும் கழிவுகள் நச்சுக்களாக மாறி, பல நோய்களுக்குக் காரணமாகிவிடும். இந்தப் பிரச்னையில் இருந்து மீள்வதற்கு, செய்யவேண்டிய வழிமுறைகளை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா கிருஷ்ணமூர்த்தி.

''தேவை இல்லாத கழிவுகள் உடலில் சேரும்பட்சத்தில் அடிக்கடி நெஞ்செரிச்சல், ஏப்பத்தின்போது கெட்ட வாடை வீசுதல், மலம் கழித்தல் தொடர்பான பிரச்னைகள், உடல் எடை கூடுதல், வயிறு உப்புதல், சோர்வு போன்ற பல்வேறு பிரச்னைகள் அடுக்கடுக்காய் தலைதூக்கும். இப்படிக் கழிவுகள் சேர்வதற்குக் காரணம், இன்றைய செரிக்க கடினமான உணவு முறைதான். தினமும் காலையில் சிறுநீர், மலம் எளிதாக வெளியேறினாலேயே, அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

கழிவுகளை வெளியேற்ற என்ன சாப்பிடலாம்?

இரண்டு நாட்களுக்கு மேல் மலம் கழிக்காமல் இருந்தால், தேவையில்லாத காற்று வயிற்றை நிரப்பி தொப்பை வர வழிவகுக்கும். அதனால், தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உடலிலுள்ள கழிவுகள் சுலபமாக வெளியேறும். மிதமான சூட்டில் டீ, காபி எடுத்துக்கொள்ளலாம்.

எளிதில் செரிக்கக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள், பச்சைப் பயறு, சோயாபீன்ஸ், பழச் சாறு, காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மோர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்ந்த கரைசலைக் குடிக்கலாம். சாப்பிடுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு வெந்நீர் அருந்த வேண்டும். வாரம் ஒருமுறை வாழைத்தண்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவுகளை நன்றாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும். காலை வேளையில் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடக் கூடாது. குழந்தைகளுக்கு வேகவைத்த காய்கறி நீர், முளைக்கட்டிய பயறு நீர் போன்றவற்றைக் கொடுப்பதால் சத்துக்கள் கிடைப்பதுடன், செரிக்காத உணவுகளை எளிதில் வெளியேற்றிவிடும். சர்க்கரை நோயாளிகளைத் தவிர, மற்றவர்கள் இரவில் வாழைப்பழம் சாப்பிடலாம். சரியான வேளையில் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். என்னென்ன உணவுகள் சாப்பிடக் கூடாது? சுலபத்தில் செரிக்காத கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், அசைவ உணவுகள், கீரை உணவுகள், தேங்காய் சேர்த்த உணவுகள் போன்றவற்றை இரவில் உண்பதை அறவே தவிர்க்கவும். எண்ணெயில் பொரித்த உணவுப்பொருட்கள், காரம் அதிகமான பண்டங்கள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும். தேங்காயில் செய்த பண்டங்களை அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்

No comments:

Post a Comment