Thursday, 4 September 2014

ஆன்டிபயாட்டிக்(antibiotic) எடுக்கும் போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?

தற்போது ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கையினால், உடல் நிலை சரியில்லாமல் நிறைய பேர் தினமும் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர்.
சொல்லப்போனால் அது ஒரு அழையா விருந்தாளியைப் போல், அனைவரிடமும் வந்துவிடுகிறது. அவ்வாறு உடல் நிலையை தேற்றுவதற்காக மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, அந்த மருந்து உடலில் நன்கு வேலை செய்ய வேண்டுமென்றால், ஒரு சில உணவுகளை சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அவ்வாறு சாப்பிட்டால், உடலில் அந்த மருந்துகள் சரியாக வேலை செய்யாமல் போய்விடும். இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளங்களேன்…
ஆல்கஹால்-
மருந்து மாத்திரைகளுக்கு ஆல்கஹால் முற்றிலும் ஒரு எதிரி. ஏனெனில் அந்த ஆல்கஹால், மாத்திரைகளில் உள்ள மருந்துகளின் தன்மையை குறைத்துவிடுகின்றன. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நோய்கள் விரைவில் குணமாவது தடைப்பட்டு, நீண்ட நாட்கள் அந்த நோயை உடலில் வைத்துக் கொள்ள நேரிடும். ஆகவே விரைவில் உடல் நோய் சரியாக வேண்டுமென்றால், இந்த ஆல்கஹால் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பால் பொருட்கள்-
பால் பொருட்களான பால், தயிர், சீஸ் போன்றவைகளும், மருந்துகளின் சக்தியை குறைத்து, மேலும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். அதனால் தான் மருத்துவர்கள், ஏதேனும் உடல் நிலை சரியில்லை என்றால், மருந்து சாப்பிடும் போது பால் பொருட்களை முற்றிலும் தவிர்க்க சொல்கிறார்கள். ஏன், சில சமயங்களில் வயிற்றுப் போக்கு ஏற்படக்கூட வாய்ப்புள்ளது.
நார்ச்சத்து உணவுகள்-
எப்போது ஆன்டிபயாட்டிக்களை எடுத்துக் கொள்ளும் போதும், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை மருந்துகளில் உள்ள தன்மைகளை முற்றிலும் உறிஞ்சிவிடுகின்றன. மேலும், இவையும் பால் பொருட்களைப் போல் வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
அமிலத் தன்மை உள்ள உணவுகள்-
அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுகளான எலுமிச்சை, தக்காளி மற்றும் மற்ற உணவுகள், எப்படி ரோட்டில் சிக்னல் போட்டால், வண்டிகள் நகர முடியாமல் ஒரே இடத்தில் நிற்கிறதோ, அதேப்போல் இந்த உணவுகளும் உடலில் குணப்படுத்தும் செயலை தடுத்துவிடுகின்றன. மேலும் மருந்துகளில் உள்ள சக்தியை உடல் உறிஞ்சுவதை தடுத்துவிடுகின்றன. ஆகவே இத்தகைய உணவுகளையும் சாப்பிடக் கூடாது.
ஹெவி ஃபுட்-
மாத்திரைகளை சாப்பிடும் போது வாயை கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் அவ்வாறு நன்கு சுவையாக உள்ளது என்று எளிதில் செரிமானமாகாத உணவுகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் மாத்திரைகளை சாப்பிடும் போது, உடலில் அனைத்து செயல்களும் சரியாக நடைபெற்றால் தான், உடல் விரைவில் சரியாகும். செரிமானமாகாத உணவுகளை சாப்பிட்டால், மருந்துகளில் உள்ள பொருட்களை, உடல் உறிஞ்சி கொள்ளாமல் போகும். ஆகவே விரைவில் செரிமானமாகும் லைட் உணவுகளை சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்


எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்’ என்ற முதுமொழி, உடல் அமைப்புக்கு மட்டுமல்ல, நம் உணவருந்தும் பழக்கத்துக்காகவும் கூட சொல்லப்பட்டதாக வைத்துக்கொள்ளலாம். வயிறு நிறைய, கிடைத்ததையெல்லாம் உண்டு வாழும் நமக்கு, ஏதாவது நோய் வந்து தொல்லை கொடுக்கும்போதுதான், உடல் நலத்தின் மீது கவனம் திரும்புகிறது. தினமும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முழுவதுமாக செரிக்கப்படுவதும் இல்லை; செரித்த உணவு முழுமையாக உடலை விட்டு வெளியேறுவதும் இல்லை. சில சமயங்களில், இந்த கழிவுப் பொருட்கள் உடனடியாக வெளியேறாமல் உள்ளேயே தங்கிவிடும்.

இன்றைக்கு பலருக்கும் இதுதான் ஏகப்பட்ட உடல் உபாதைகளுக்கான அஸ்திவாரம். இப்படிச் சேர்ந்துவிடும் கழிவுகள் நச்சுக்களாக மாறி, பல நோய்களுக்குக் காரணமாகிவிடும். இந்தப் பிரச்னையில் இருந்து மீள்வதற்கு, செய்யவேண்டிய வழிமுறைகளை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா கிருஷ்ணமூர்த்தி.

''தேவை இல்லாத கழிவுகள் உடலில் சேரும்பட்சத்தில் அடிக்கடி நெஞ்செரிச்சல், ஏப்பத்தின்போது கெட்ட வாடை வீசுதல், மலம் கழித்தல் தொடர்பான பிரச்னைகள், உடல் எடை கூடுதல், வயிறு உப்புதல், சோர்வு போன்ற பல்வேறு பிரச்னைகள் அடுக்கடுக்காய் தலைதூக்கும். இப்படிக் கழிவுகள் சேர்வதற்குக் காரணம், இன்றைய செரிக்க கடினமான உணவு முறைதான். தினமும் காலையில் சிறுநீர், மலம் எளிதாக வெளியேறினாலேயே, அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

கழிவுகளை வெளியேற்ற என்ன சாப்பிடலாம்?

இரண்டு நாட்களுக்கு மேல் மலம் கழிக்காமல் இருந்தால், தேவையில்லாத காற்று வயிற்றை நிரப்பி தொப்பை வர வழிவகுக்கும். அதனால், தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உடலிலுள்ள கழிவுகள் சுலபமாக வெளியேறும். மிதமான சூட்டில் டீ, காபி எடுத்துக்கொள்ளலாம்.

எளிதில் செரிக்கக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள், பச்சைப் பயறு, சோயாபீன்ஸ், பழச் சாறு, காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மோர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்ந்த கரைசலைக் குடிக்கலாம். சாப்பிடுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு வெந்நீர் அருந்த வேண்டும். வாரம் ஒருமுறை வாழைத்தண்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவுகளை நன்றாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும். காலை வேளையில் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடக் கூடாது. குழந்தைகளுக்கு வேகவைத்த காய்கறி நீர், முளைக்கட்டிய பயறு நீர் போன்றவற்றைக் கொடுப்பதால் சத்துக்கள் கிடைப்பதுடன், செரிக்காத உணவுகளை எளிதில் வெளியேற்றிவிடும். சர்க்கரை நோயாளிகளைத் தவிர, மற்றவர்கள் இரவில் வாழைப்பழம் சாப்பிடலாம். சரியான வேளையில் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். என்னென்ன உணவுகள் சாப்பிடக் கூடாது? சுலபத்தில் செரிக்காத கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், அசைவ உணவுகள், கீரை உணவுகள், தேங்காய் சேர்த்த உணவுகள் போன்றவற்றை இரவில் உண்பதை அறவே தவிர்க்கவும். எண்ணெயில் பொரித்த உணவுப்பொருட்கள், காரம் அதிகமான பண்டங்கள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும். தேங்காயில் செய்த பண்டங்களை அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்

நலமான வாழ்வுக்கு நான்கு வகை இலை!
நம் வீட்டுக் கொல்லையிலும் சுற்றுப்புறத்திலும் கிடைக்கும், எளிய இலைகளை வைத்தே பல நோய்களைக் குணமாக்கும் முறைகளை நம் முன்னோர்கள் தெரிந்துவைத்திருந்தனர். அப்படி நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சில மூலிகை இலைகள், அதன் மருத்துவக் குணங்கள், பயன்கள் பற்றி சென்னை சித்த மருத்துவர் செல்வசண்முகம் விளக்கமாகக் கூறினார். மா, வேப்பிலை, வெற்றிலை, துளசி ஆகியவற்றின் பலன்களைச் சொன்ன டாக்டர், 'இவற்றை ஆரோக்கியமானவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நோய்வாய்ப்பட்டவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துகொள்வதே நல்லது' என்று ஆலோசனையும் வழங்கினார்.

 மாவிலை
வீட்டில் மாவிலைத் தோரணம் கட்டுவதற்குக் காரணமே இதில் உள்ள மருத்துவக் குணங்கள்தான். இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளன.
 இலைகளில் நீர் விட்டுக் காய்ச்சி, வடிகட்டி தேன் கலந்து, சிறிது சிறிதாகக் கொடுத்தால் வாந்தி வருவது குறையும்.
 கொழுந்து இலைகளை சிறு துண்டுகளாக வெட்டி, தேன் சேர்த்து மென்று சாப்பிட்டால்தொண்டைக் கட்டு, குரல் கம்மல் நீங்கிவிடும்.
 இலைகளை எரித்து, அதன் சாம்பலுடன் பசு வெண்ணெய் சேர்த்துத் தீப்புண் மீது தடவினால், வலி உடனடியாகக் குறையும்.
 இலைக்காம்பை ஒடித்தால் வரும் பாலை பித்த வெடிப்பின் மீது தடவினால் சரியாகும்.
 மாவிலைச் சாறுடன் பொன்னாங்கண்ணிச் சாறு, தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்குத் தேய்த்து வந்தால், இளநரை, முடி கொட்டுதல் பிரச்னைகள் தீரும்.
 பழுப்பு நிறமுள்ள கொழுந்துகளை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, ஒவ்வொரு வேளையும் சாப்பாட்டுக்கு முன் அரை தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும்.

 வேப்பிலை
பல்வேறு வைரஸ், பாக்டீரியா கிருமிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலை நோய்க்கும் அருமருந்து. வெளிப்பூச்சாகப் பயன்படுத்தும்போது, நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். இயற்கைக்குப் பாதுகாப்பாக இருப்பதுடன், பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படுகிறது.
 வேப்பந்துளிருடன் ஓமம், சிறிது உப்பு சேர்த்துக் கொடுத்தால் காமாலை நோய் மற்றும் மாலைக்கண் நோய் தீரும்.
 வேப்பிலையுடன் மஞ்சள் கலந்து, நீர் விட்டு அரைத்து உடம்பின் மேல் தேய்த்தால் அம்மை, வியர்க்குரு, கரப்பான், சொரி, சிரங்கு மற்றும் முகப்பருக்கள் போன்ற சருமப் பிரச்னைகளில் இருந்து மீளலாம்.
 வேப்பிலைச் சாறு, எலுமிச்சைச் சாறு, தேன் மூன்றையும் கலந்து இரவில் குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் வரும். * வேப்பிலை, மிளகு இரண்டையும் 8:1 என்ற விகிதத்தில் கலந்து அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு பெரியவர்களுக்கும், சுண்டைக்காய் அளவு சிறியவர்களுக்கும் கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கிவிடும்.
 வேப்பங்கொழுந்து, மஞ்சள், தாளகம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) இந்த மூன்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை, பெண்களுக்கு தேவையற்ற இடத்தில் வளரும் முடியின் மீது பற்றுப்போடலாம். மூன்று மணி நேரம் கழித்து கழுவ, முடிகள் அகன்றுவிடும்.

 வெற்றிலை
விழாக்களிலும், தமிழர் விருந்துகளிலும் தவறாது இடம்பெறும் இலை. இதில் இரும்புச் சத்து, தாது உப்புகள் அதிகம்.
 வெற்றிலை, இஞ்சி, தேன் மூன்றையும் வெறும் வாயில் மென்று சாப்பிட்டால், அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப் பிரச்னைகள் சரியாகும்.
 இலையை மிதமாக சூடு செய்து சாறு எடுத்து, இந்தச் சாறை மூக்கில் சில சொட்டுக்கள் விட்டால், தலைவலி, தலைபாரம், தும்மல் சரியாகும்.
 வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, பூச்சி, தேள் கொட்டிய இடத்தின் மேல் தடவினால், வலி உடனடியாக நீங்கும்.
 வெற்றிலை, அருகம்புல், மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்தால், விஷக்கடிகள், ஃபுட் பாய்சன் போன்றவை சரியாகும்.
 வெற்றிலை, ஜாதிக்காய், கிராம்பு மூன்றையும் மென்று சாப்பிட்டால், இல்லற இன்பம் கூடும்.
 இலையை எரித்துச் சாம்பலுடன் பசுவெண்ணெய் கலந்து நாவில் தடவினால், உச்சரிப்புக் கோளாறுகள் நீங்கி, பேச்சு தெளிவாகும்.
 காலை வேளையில், வெற்றிலையுடன் பாக்கை அதிகமாகவும், மதியம் சுண்ணாம்பு அதிகமாகவும், மாலையில் வெற்றிலை அதிகமாகவும் சேர்த்துவந்தால், உடல் இயக்கம் சீராக இருக்கும்.
 துளசி:
எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய் சத்து மிக்க ஒர் இலை. பாக்டீரியா மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு பெரிதும் உதவும். காசநோய்க்கு எதிராகச் செயல்பட்டு நுரையீரல் மற்றும் மூச்சுக்குழலையும் பாதுகாக்கும். அதே நேரத்தில் மனரீதியான நோய்க்கும் பயன்படக்கூடியது.
 துளசியை இளஞ்சூட்டில் அல்லது நீராவியில் காட்டினாலே சாறு கிடைக்கும். இந்தச் சாறில் 10 துளி எடுத்து, ஒரு அரிசி அளவு மிளகு சேர்த்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட சளி விரைவில் குணமாகும்.
 துளசி, மிளகு, வேப்பிலை கஷாயமாக்கிக் கொடுத்தால், சளி, உடல் வலி விரைவில் குணமாகும்.
 200 மில்லி பசும் பாலில், 10 துளசி இலைகளைப் போட்டு வடிகட்டி எடுத்தால், பாலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி தூய்மையான பால் கிடைக்கும்.
 வெந்நீரில் இலைகளைப் போட்டு ஆவி பிடித்தால், சளி, தலைவலி சரியாகும்.
 துளசி இலை சாப்பிட்டால் ஆண்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறையாமல், உற்பத்தி மட்டும் தற்காலிகமாகத் தடைபடும். அந்த காலத்தில் ஆண்கள் பயன்படுத்தி வந்த இயற்கைக் கருத்தடை முறையாகவும் இது இருந்தது.
 பெண்களுக்கு பிரசவ காலத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை 30 மில்லி துளசி சாறைக் கொடுத்தால், வலி குறைந்து கருப்பையின் இயக்கம் அதிகமாகும்.
 துளசியுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்துத் தடவும்போது, தோல் புண், பூச்சிக்கடிக் காயங்கள் சரியாகும்.
அருகம்புல்லின் மகத்துவம் :-
அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்ந்ததைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.

* அருகம்புல்லின் கணுக்களை நீக்கிவிட்டு 10 கிராம் அளவு எடுத்து, அதனுடன் வெண்மிளகு 10 சேர்த்து 4 டம்ளர் நீர்விட்டு காய்ச்சி, பாதியாக வற்றியதும், அதில் சிறிதளவு பசு வெண்ணெய் சேர்த்து குடித்துவர, மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் வெப்பம், நீர் கடுப்பு, மூலக்கடுப்பு, வெள்ளைப்படுதல் போன்றவைக் குணமாகும்.

* தீராத வயிற்றுவலிக்கு அருகம்புல்லுடன் வேப்பிலையை சமஅளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி 100 மில்லி அளவு குடித்துவர குணமாகும்.

* அருகம்புல்லுடன் மாதுளை இலையை சேர்த்து கஷாயமாக்கி காலை, மாலை இரண்டு வேளையும் 100 மில்லி அளவு குடித்துவர பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படும்.

* வெட்டுக்காயம் ஏற்பட்டால் உடனே அருகம்புல்லுடன் அரிவாள் மூக்கு பச்சிலையை சேர்த்து அரைத்து வைத்துக்கட்ட ரத்தம் வடிவது உடனே நிற்பதுடன், காயமும் வெகுவிரைவில் ஆறிவிடும். அருகம்புல்லுடன் மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்து அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் பூசிவர வலியும், வீக்கமும் குறையும்.

* ஒரு பிடி அருகம்புல், மிளகு-10, சீரகம் சிறிதளவு சேர்த்து அரைத்து பாலில் கலந்து குடிக்க, உடலில் சேர்ந்துள்ள மருந்துகளின் நஞ்சினை அது போக்கிவிடும். அருகம்புல் வேர், ஆவாரம்பூ இவை இரண்டையும் நிழலில் உலர்த்தி இடித்து சலித்து பொடியாக்கி கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து, அதை நெய்யுடன் கலந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.

* அருகம்புல் வேரையும், அகத்தி வேரையும் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் அதனை காய்ச்சி வடிகட்டி குடித்துவர நீர் எரிச்சல், ஆண் குறி எரிச்சல் குணமாகும்.

* அருகம்புல் 2 பங்கு, கீழாநெல்லி ஒரு பங்கு சேர்த்து அரைத்து, அதை தயிரில் கலந்து குடிக்க சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியாகுதல், உடல் வறட்சி போன்றவை குணமாகும். உடல் வெப்பம் தணியும்.அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து குடித்துவர சிறுநீர் சம்பந்தமான நோய்கள் நீங்கிவிடும். சிறுநீர்ப்பை பலப்படும்.

* அருகம்புல்லுடன் வெண்தாமரை பூவிதழ்களை சேர்த்து கஷாயமாக்கி தினமும் இருவேளை குடித்துவர இதய பலவீனம் நீங்கி, இதயமும், ரத்தக் குழாய்களும் உறுதிபெறும்.

* அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி பொடியாக்கி நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சிக் கொள்ளவும். இதனை உடலில் தேய்த்து குளித்துவர எல்லாவித தோல் நோய்களும் குணமாகும். அதை, தலையில் தேய்த்து குளிக்க பொடுகுத்தொல்லை நீங்கும். உடல் குளிர்ச்சியாகும்.

* அருகம்புல் சாற்றுடன் சிறிதளவு பன்னீர், பப்பாளிப் பழம் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி, உலர்ந்தவுடன் கழுவிவர வெயிலால் ஏற்பட்ட கருமை அகன்று முகம் பளபளப்பாகும். அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து வடிகட்டி, அதனுடன் வெல்லம் தேவையான அளவு சேர்த்து பருகிவர சிறு நீரக நோய்கள் குணமாகுவதுடன், உடலும், முகமும் அழகு பெறும்.

* நரம்பு தளர்ச்சியும், உடல் தளர்ச்சியும் நீங்கும். மலச்சிக்கல், தூக்கமின்மை குணமாகும். வயிற்றின் அமிலத் தன்மை குறையும். உடலில் தேங்கியுள்ள கழிவுகள், விஷத்தன்மை வெளியேறும். நீரிழிவு, தொழுநோய், கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவை குணமாகும்.

* பல் சம்பந்தப்பட்ட நோய்கள், பல் ஈறில் இருந்து ரத்தம் கசிந்து, வாய் நாற்றம் போன்றவை விலகும். உடலுக்கு அழகும், வசீகரமும் தரும்.

உடல் வெப்பம் தணியும். இந்த பலன்களை நீங்களும் பெறவேண்டுமா? தினமும் டீ, காபிக்கு பதிலாக அருகம்புல்சாற்றுடன் தண்ணீர் அல்லது தேன் அல்லது இளநீர் கலந்து சாப்பிடுங்கள்.

ஒரே ஒரு “நிபந்தனை” தினமும் காலையில் வெறும் வயிற்றில் தான் இதை குடிக்க வேண்டும். அப்போது தான் பலன் உண்டு.

Saturday, 23 August 2014

தாய்மார்கள் கவனத்திற்கு...?

பொதுவாக நார்மல் டெலிவெரி மூலம் குழந்தைப் பெற்றவர்கள் செய்ய வேண்டியது பற்றி எனக்கு முழுமையாக தெரியாது;ஆனால் ஓரளவு எனக்குத் தெரிந்தவற்றை கூறுகிறேன்...

நார்மல் டெலிவெரி தாய்மார்கள் கவனத்திற்கு:

* குழந்தை பிறந்ததும் சில மணி நேரங்களில் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு உடல் தெம்பு இருக்கும்;

* ஆனால் சிலருக்கு சில குறைபாடுகள் காரணமாக உடல் வ்லுவின்றி எழுந்திருக்க முடியாது, அதனால் பரவாயில்லை உங்களுக்கு முடியும் போது எழுந்து கொள்ளலாம்;

* நீங்கள் முக்கியமாக படுத்திருக்கும் போது உங்கள் கால்களை ஒடுக்கி வைத்தே உறங்க வேண்டும்;

*டெலிவெரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் எவ்வளவு சூடு உடல் தாங்குமோ அவ்வளவு சூடு உள்ள தண்ணீரை வைத்து குளிப்பதோடு அல்லாமல் உங்கள் வயிற்றிலும் நன்கு வேகமாக ஊற்ற வேண்டும்; இது தொங்கும் வயிற்றை குறைப்பதற்காக;

* நன்கு நடைபயிற்சி செய்தல் அவசியம்; அப்போது தான் எடை பழையபடி வரும்; வயிறும் குறையும்;

*இப்போது நீங்கள் பெல்ட் (அ) காட்டன் துணி கொண்டு உங்கள் வயிற்றை இறுகக் கட்டிக்கொள்ளுங்கள்; இது உங்கள் வயிற்றை பழைய அளவிற்கு இறுக்க உதவும்;

*இப்போது நீங்கள் வயிற்றைக் குறைப்பதற்காக உங்கள் மருத்துவர் கூறும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்

* உணவுக் கட்டுப்பாடு கூடவே கூடாது

*பத்திய உணவு என்று சமைத்துக் கொடுப்பார்கள்; தயவு செய்து சுவை பிடித்தாலும் பிடிக்காவிடினும் அதனை உண்ணுவதே சிறந்தது உங்கள் உடல் நிலைக்கும் உங்கள் குட்டிப் பாப்பாவுக்கும்;

சிசேரியன் டெலிவெரி தாய்மார்கள் கவனத்திற்கு:

* நீங்கள் மூன்று நாட்களில் நடக்கத் துவங்கலாம்

*நீங்கள் டெலிவெரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் எவ்வளவு சூடு உடல் தாங்குமோ அவ்வளவு சூடு உள்ள தண்ணீரை வைத்து குளிப்பதோடு அல்லாமல் உங்கள் வயிற்றிலும் மெதுவாக ஊற்ற வேண்டும்; இது தொங்கும் வயிற்றை குறைப்பதற்காக;

* ஒவ்வொரு முறை குளித்தப் பின்பும் தையல் போட்ட இடத்துல் நீர் இல்லாமல் பார்த்து ஒற்றி எடுக்க வேண்டும்; துடைக்கக் கூடாது அவ்விடத்தில்;

* உங்களுக்கு அதிகம் பத்திய உணவு தேவை இல்லை; ஆனால் காரம் மற்றும் புளிப்பு, ஒவ்வாமை குணம் உள்ள உணவு கூடவே கூடாது;

* நீங்கள் உங்கள் வயிற்றை மருத்தவர் ஆலோசனைப் படி இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு பெல்ட் அல்லது துணி மூலம் கட்டலாம்। ஆயினும் முழுமையாக வயிறு ஒட்டுமா என உறுதியளிக்க இயலாது

*நீங்கள் மல்லாந்துப் ப்டுத்தவாக்கில் எழுந்திருக்கக் கூடாது; குப்புற படுப்பதும் கூடாது;

* அதிக எடை தூக்குதல், வேகமாக நடத்தல், அதிக அளவு வேலை செய்தல் கூடவே கூடாது 8மாதங்களுக்கு;

*சளிப் பிடிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்;

பொதுவாக இரு வகையினரும் செய்ய வேண்டியது:

* குளிர் பானங்கள், செயற்கை உணவுப் பொருள், கடை உணவு, குளிர்ந்த நீர், அதிக காரம், அதிக புளிப்பு, சிக்கன் மற்றும் அதிக சூடு தரும் பொருட்கள் போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள்;

*ஈரத் தலையுடன் அதிக நேரம் இருக்காமல் விரைவில் உலர்த்திடுங்கள்;

*உங்கள் உடல் சூடு குழந்தைக்குக் கண்டிப்பாக அவசியம் ஆதலால் குழந்தை உங்கள் அருகாமையிலேயே இருக்க வேண்டும்; உங்களுடன் உங்கள் அருகிலேயே தூங்க வேண்டும்;

* அதிகம் தண்னீர் மற்றும் பால், மீன், கீரை, பச்சைக்காய்கறிகள், திராட்சை,
பலா, மா தவிர்த்து அனைத்து விதமான பழங்கள் போன்றவற்றை அத்தியாவசிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்;

*பால் குறையும் சமயம் ரஸ்க், பிரட், பீன்ஸ், கோதுமை உணவு, ஓட்ஸ் கஞ்சி, பால், தண்ணீர், மீன், தயிர் சாதம் போன்றவை உடனடியாகப் பால் சுரக்க உதவும்;

* கஸ்தூரி மஞ்சள் வயிற்றில் உள்ள கோடுகளை நீக்க உதவும்; ஆனால் சிசேரியன் செய்தவர்கள் வெளிப்புற புண் ஆறியது இதனை உபயோகிக்கலாம்;

*குழந்தைக்குப் பால் கொடுக்கும் வரை கர்ப்பம் தரித்தல் கூடவே கூடாது; சிலர் பால் கொடுக்கும் போது கர்ப்பம் தரிக்காது என்று தவறாக நினைக்கிறார்கள்; அப்படியெல்லாம் இல்லை, எனக்குத் தெரிந்த ஒருவருக்கு கையில் 5மாதம் வயிற்றில் மூன்று மாதம்

*குழந்தை வெகு நேரம் பால் குடிக்காமல் இருந்தால் சேர்ந்திருக்கும் பாலை எடுத்துவிடுவது நல்லது;

* அதிக இரும்புச் சத்து, கால்சியம் நிறைந்த உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்;

* முக்கியமானது என்னவென்றால் இப்போது உங்கள் குழந்தை மட்டுமல்ல நீங்களும் புதிதாகப் பிறந்திருக்கிறீர்கள்; ஆதலால் உங்கள் உடலுக்கு நல்ல ஊட்டச் சத்து நிறைந்த உணவு மூலம் வலு சேர்க்க வேண்டும்;

*அதிக அளவு காய்கறி சூப், மட்டன் சூப், ஈரல், முட்டை, பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்;

இப்படியெல்லாம் நம்மை நாமே பார்த்துக்கொண்டால் வயதானாலும் தெம்புடன் இருக்கலாம்; பிரசவத்திற்கு பின் உடல் நிலையை கவனிக்கவில்லை எனில் பிற்காலத்தில் பாதிப்பு.


பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்­ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்­ரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.

* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்­ர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

* தண்­ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

Some Cooking Tips

Saturday, 9 August 2014


மன இறுக்கத்தைத் தளர்த்த 10 எளிய வழிகள்!



1. சத்தான உணவைச் சாப்பிடுங்கள்


கவனியுங்கள்… ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது.
பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2. நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.

3. நடங்கள்! ஓடுங்கள்!

தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4. ஓய்வெடுங்கள்.

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. சிரியுங்கள்

மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6. மனம்விட்டுப் பேசுங்கள்

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. தெளிவாகச் செய்யுங்கள்

எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9. விளையாடுங்கள்
உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. மற்றவர்களையும் கவனியுங்கள்

உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !