Friday, 30 August 2013

கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான ஒன்றாகும். மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய சிறந்த உணவுப்பொருட்களாக கேழ்வரகு, கம்பு போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

ஆனால் இவ்வளவு சத்து வாய்ந்த உணவை விட்டு, இதனை விட ஊட்டச்சத்து குறைவான உணவுகளையே தினமும் உண்டு வருகிறோம். பண்டைய தமிழகத்தில் அரிசியைக் காட்டிலும் சிறுதானியங்களே, தினமும் உண்ணும் உணவாக இருந்து வந்துள்ளது மற்றும் இன்று நாம் தினமும் உண்டு வரும் அரிசி வகை உணவுகள், பண்டைய காலத்தில் பண்டிகை நேரத்தில் தமிழர்கள் உண்டு வந்துள்ளனர். ஆகவே அரிசியைக் காட்டிலும் சிறுதானியங்களிலேயே சத்து அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொண்டு, இனி அடிக்கடி உணவில் சிறுதானியம் சேர்த்து ஆரோக்கியம் பெற வேண்டும்
.
பரவலாக கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள், பொதுவாக தென் இந்தியாவின் அனைத்து பகுதியினர் அடுப்பங்கரையிலும் இருக்கும் ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும். இந்தியா முழுவதும் பல கிராமங்களின் பிரதான உணவும் கூட இது தான். அதிலும் கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் இன்ன பிற தாதுக்களும் உள்ளன. இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது மற்றும் நிறைவுறா கொழுப்பு என்று சொல்லப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு (Unsaturated Fat) அதிக அளவில் உள்ளது. இந்த வகை தானியம் செரிமானமாவதில் எளிதானது மற்றும் கோதுமையில் இருக்கும் க்ளுட்டன் (Gluten) என்னும் பசை வகை புரதம் போல இந்த தானியத்தில் இல்லை. ஆகவே க்ளுட்டன் அலர்ஜி உள்ளவர்கள் கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கேழ்வரகு மிகவும் சத்தான தானியங்களுள் ஒன்றாகும். இது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவிகரமாக இருக்கும். அதிக அளவில் கேழ்வரகு உட்கொள்ளுதல், உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எனவே சிறுநீரக கல் இருக்கும் நோயாளிகள் இந்த தானியங்களை உட்கொள்ள கூடாது. இப்போது கேழ்வரகு சாப்பிடுவதால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

எடை இழக்க...

 
கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைக்கிறது, எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம். அதுமட்டுமின்றி, கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து, உணவு சாப்பிடும் போது ஒரு திருப்தி உணர்வை அளிக்கிறது. இதனால் உணவு அதிகம் உட்கொள்ளுவதை தடுக்க முடியும்.

ஆரோக்கியமான எலும்புகளைப் பெற...

 
கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும். மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது.

நீரிழிவு நோயைக் குணப்படுத்த...

 
கேழ்வரகில் உள்ள தாவர வகை இரசாயன கலவைகள் (Phytochemical Compounds) செரிமானத்தை குறைக்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

இரத்தத்தில் கொழுப்பை குறைக்க...

 
கேழ்வரகில் லெசித்தின் (Lecithin) மற்றும் மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் (Amino acids) இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

இரத்த சோகையைக் குணப்படுத்த...

 
கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.

சோர்வைப் போக்க...

 
கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

புரதச்சத்து/அமினோ அமிலங்கள்

 
உடலின் இயல்பான செயல்பாட்டிலும், சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், அமினோ அமிலங்களுக்கு பெரும் பங்கு உள்ளது மற்றும் உடலில் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.

பிற ஆரோக்கிய நிலைமைகள்

 
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.

உயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்த...

 
கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும். இவ்வளவு நோய்களை சரிசெய்யும் கேழ்வரகை, ஆரோக்கிய டானிக் என்றே சொல்லலாம்.

tnanks:toi

Tuesday, 23 July 2013

வாய்ப் புண் பற்றிய தகவல்களும், வீட்டு வைத்தியமும்:-

வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன?
வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் “சுர்ர்” என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.

யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?
வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.

வாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்?
பரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.

ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம். உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுகின்றது

காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.

பாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.

இயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.

உணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.

பற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.

மாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.

வாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் ஏதாவது?

வாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.

தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.

வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.

தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.

மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.

மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.

Monday, 22 July 2013

சில நேரங்களில் சில தீர்ப்புகள்!....

ஏங்க... நம்ம புள்ளை என்ன வீண் செலவு செய்யவா பணம் கேட்கறான்; வீடு வாங்கத் தானே... கையிலே வெண்ணையை வச்சுகிட்டு, வீணா அலைவானேன்? பாங்க்ல கிடக்கிற பணத்தை எடுத்து வந்து, சிவசு கிட்டே குடுங்க. அவன் அலையறதை காண சகிக்கலைங்க,'' என்ற சரயுவை முறைத்தார் பாலசுப்ரமணியம்.
  ""என்னடி பேசுற... அதத்தூக்கி குடுத்துட்டு, நாம தெருவுலே நிக்கணுமா?'' ""நாம ஏங்க தெருவுக்கு போறோம்... நாம பெத்த புள்ளங்க; நம்மள காப்பாத்துவான். புள்ளை, படாத பாடு படறான்... நாயா பேயா அலையறான். புள்ளைக்கு உதவாத பணம் நமக்கெதுக்கு,'' என்று சீறினாள் சரயு

. ""வேணாம் சரயு... பணத்தை குடுத்து, மனஸ்தாபத்தை வாங்காதே...'' விவாதங்கள் முற்றி, சரயு கண்ணீராலும், கோபதாப பேச்சாலும், அவரைக் கரைத்து, ஆறு லட்சத்தை வள்ளிசாக தூக்கி, சிவசுவின் கையில் வைத்தாள்.
  மகனும், மருமகளும் கண்ணீர் மல்க காலில் விழுந்தனர். "அம்மா... அம்மா...' என்று சிவசுவும். "அத்தை... அத்தை...' என்று விஜியும், தாங்கிப் பிடிக்க, உச்சி குளிர்ந்து போனாள் சரயு.

 வீடு வாங்கி முடித்ததுமேயே, ""அம்மா... நீங்க வாசல்புற அறையிலேயே தங்கிக்கலாம். அது, இனிமே உங்க ரெண்டு பேருக்குத் தான்!'' என்று சிவசு சொன்னபோது, பெருமிதமாக ஏறிட்டாள் சரயு. ஆனால், அது பெயருக்குத் தான் அப்பா, அம்மா அறையாக இருந்ததே தவிர, அது விஜியின் உறவினர்கள் தங்கும் விருந்தினர் அறையாக இருந்ததுதான் அதிகம். 

இருவரும், ஹாலில் தரையில் படுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு அடிக்கடி தள்ளப்பட்டனர். ஹாலிலும் நிம்மதியாய் அக்கடா என்று, காலை நீட்டிப் படுக்க முடியாமல், வருவோரும், போவோருமாய், தூக்கம் பறிபோக, உடம்பே அலண்டு போனது. வருடங்கள் போனதே தவிர, சிவசுவும், விஜியும், பணம் வாங்கிய விஷயத்தை, சுலபமாய் மறந்தே போயினர்.

 மருந்து வாங்கவோ, அவசிய செலவுக்கோ கூட, இருவரிடமும் கையேந்தும் நிலையில், பாலசுப்ரமணியத்துக்கு, சங்கோஜம் பிடுங்கி தின்றது. சிவசுவுக்கு பணம் தந்த விஷயம் எப்படியோ கசிந்து, இளைய மகன் குமாரின் காதை அடைய, அவனும், அவன் மனைவியும், நேராகவே வந்து, ""அந்த பணத்துக்கு, நானும் உரிமைக்காரன் தானே... நானும் உங்களுக்கு தானே பிறந்தேன்?'' என்று குதித்தான். அவன் மனைவியோ, ""பணத்தோடு வந்தால், என் வாசல் கதவு திறக்கும்,'' என்று பச்சையாகவே சொல்லிவிட்டு, ஓரகத்தியைப் பார்த்து பொருமி தீர்த்துவிட்டுக் கிளம்பினாள்.

கணவருக்கு உடல்நிலை கொஞ்சம் மோசமாக, சரயு வாயைத் திறந்து பணம் பற்றி பேச்செடுக்க, ஆங்காரமாகி விட்டாள் விஜி. ""மகனுக்கு கொடுத்ததை திருப்பி கேக்கறீங்களே... நீங்க பெத்தவங்க தானா?'' என்றாள். ""பெத்தவங்கன்னாலும் வயித்துல பசியும், உடம்புக்கு நோவும் வராம இருக்காதா என்ன... இதோ குமார், "முகத்துலேயே முழிக்காதே... பணமில்லாம'ன்னு பேசிட்டான். குறைந்தது பாதி பணமாவது தந்தா தானே.... குமாருக்கும் குடுக்கணும் தானே?'' என்றாள் சரயு.  

""அப்போ... இங்கே இத்தனை வருடம் போர்டிங்கு, லாட்ஜிங்குன்னு இருந்தது, அப்பப்போ டாக்டருக்குன்னு எளவெடுத்தது, இதெல்லாம் எந்த கணக்கு பணமாம்... பணம் பொல்லாத பணம். பிசாத்து ஆறு லட்சத்துக்கு, கெழங்களுக்கு வாயப் பாரு... போட்டதை தின்னுட்டு, மூலையில கிடக்கிறதா இருந்தா, இங்க இருங்க... இல்லே, வீட்டைவிட்டு வெளியே போயிடுங்க. ""ஏதாவது பணம், கிணம்ன்னு வாயைத் தொறந்தா, நான் பொல்லாதவளாயிடுவேன்... ஆமா, பணம் தந்தேன் தந்தேன்னு சொல்றீங்களே... நான் பணமே வாங்கலைங்கறேன்... நீங்க என்ன கோர்ட்டுக்கு போவீங்களா... தோபாருங்க... சல்லிக்காசு கூட தர முடியாது. உங்களால ஆனதை பாருங்க!'' என்று, ரசாபாசமாய் கத்திய விஜியின் முன், வாயடைத்துப் போனாள் சரயு.

 பேச்சுகளின் வீச்சின் முன், அந்த தாயுள்ளம் மிரண்டு போனது. "தலைக்கு மேலேயும் வர ஆரம்பித்துவிட்ட வெள்ளச் சூழலில், எதைப் பிடித்து கொண்டு நீந்த, எப்படி நீந்த?' என்று பாலசுப்ரமணியம் திகைத்து நின்றார். இதற்கு பின், நிலைமை மிகவும் மோசமானது. 

சிவசு வாய், கண், காது எல்லாவற்றையும் மூடிக் கொள்ள, விஜி தன் சுய ரூபத்தைக் காட்டினாள். விஜியே ஒரு இரும்புத் திரையாக மாறிவிட, இருவரும், மூச்சுவிடக் கூட திணறி மரண அவஸ்தை பட்டனர். எல்லாவற்றுக்கும் முடிவாக, சிவசு ஒருநாள், ""அப்பா, எனக்கு டில்லிக்கு டிரான்ஸ்பராயிடுச்சு... அதனாலே இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டேன். "அட்வான்ஸ்' கூட வாங்கிட்டேன். நாளைக்கு, "பாக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்'ல வந்து, சாமான்களை, "பாக்' செய்திடுவாங்க. நான் நாளைக்கே கிளம்பறேன். டிக்கட், "புக்' பண்ணியாச்சு. குமார் உங்களை அழைச்சிட்டு போவான்... பேசிட்டேன்,'' என்றான்.  

குமார் அழைச்சிட்டு போறதாவது... பாலசுப்ரமணியத்துக்கு, "சிவுக்' கென்றது. ""சிவசு... "நான் வர மாட்டேன். நீங்களும் பணமில்லாம இங்க வரவேணாம்ன்னு, குமார் போன்ல சொல்லிட் டானேப்பா,'' என்றார் உடைந்த குரலில். ""என்னப்பா பேசுறீங்க... அவனுக்கு மட்டும் உங்களை காப்பாத்தற கடமையில்லையா... சாவற மட்டும், நாந்தான் உங்களை சுமக்கணுமா?'' சிவசுவின் வார்த்தையில், அனல் அடித்தது. ""நீ, அவனுக்கு சேர வேண்டிய பணத்தைக்குடு, அவன் தங்கமா தாங்குவான்!'' என்று குறுக் கிட்டாள் சரயு.

  ""எதுக்கு பணம்... ஏது பணம்... நீங்க தந்து, நாங்க வாங்கினோமா... இல்லவே இல்லைங்கறேன்... உங்களால ஆனதை பாருங்க... கோர்ட்டுக்கு போனாலும் ஒண்ணும் பருப்பு வேகாது. ""அப்புறமும் இங்கதான் வந்து நிக்கணும். வாயப் பொளந்துட்டு, போனப்புறம் கொள்ளி போடவும், நெய்ப்பந்தம் பிடிக்கவும், எங்க தயவுதானே வேணும்!'' என்று, படப்படத்தவள், சிவசுவை இழுத்துக்கொண்டு உள்ளே போய், அறைக் கதவை அறைந்து சாத்தினாள் விஜி. ""தப்பு பண்ணிட்டோம்ங்க?'' என்று அழுத மனைவியை, வெறுமனே பார்த்தார் பாலசுப்ரமணியம்.

 "வாழவேண்டிய மீதி வாழ்க்கையை, அதன் காலம் வரை வாழ்ந்து தானே ஆக வேண்டும்... அது காலம் வகுத்து வைத்த கட்டாயம் அல்லவா... வேலைக்கு செல்ல இடம் கொடாத உடம்புடனும், பணமில்லாத வெறுங்கையுடனும்...' யோசனையில் புருவங்கள் முடிச்சிட்டன.

 நீதிபதி மாணிக்கவல்லி நிமிர்ந்து அமர்ந்தாள். எல்லாம் பேசி முடித்த பாலசுப்ரமணியம், மேல் துண்டால் கண்களை துடைத்துக் கொண்டார். ""அம்மா... இப்பவும் அந்த பணத்துலே, என் இரண்டு பிள்ளைகளுக்கும், கல்யாண மாகிப் போன என் பெண்ணுக்கும், ஒவ்வொரு லட்சம் தந்துடத்தான் விருப்பம். மீதியை, எங்க மிச்ச காலத்துக்கு வச்சிக்கிடறோம். அப்புறமா, நா.. நாங்க யாரோடையும் இருக்கவும் இஷ்டப்படலை. ரொம்பவும் பட்டாச்சு...

  ""நெய் பந்தமும், மகன் கைகொள்ளி யும் வேண் டாம்மா... மின்சார தகனமே போதும். ஏற்கனவே நெஞ்சுலே சொருகின கொள்ளி, இன்னமும் எரிஞ்சு கிட்டு தானிருக்கு... இனியாவது கடைசி காலத்தை நிம்மதியா கழிக்கணும்ன்னு ஆசையாயிருக்கும்மா... என் மருமக விஜி சொன்ன வார்த்தையால தான், கோர்ட்டுக்கு போனாத்தான் என்னன்னு தோணுச்சு... ஏறிட்டேன்,'' என்றார்.

  சிவசுவின் முகம் அஷ்டகோணலாக, விஜியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. இருவருமே, பாலசுப்ரமணியம் கோர்ட்டுக்குப் போவார் என்று எதிர்பார்க்கவில்லை. கோர்ட்டு, குமாரையும் வரவழைத்திருந்தது. 

அவனும் குடும்பத்துடன் வந்திருந்தான். அவன் முகத்தில், ஒரு குருரத் திருப்தி நிலவியது. அலட்சியமாக பார்த்துக் கொண்டு நின்றான். சுற்றிலும் பார்வையை ஓட விட, நீதிபதி மாணிக்கவல்லி, கண்ணாடியை சரிசெய்து கொண்டு, கணீரென்ற குரலில் ஆரம்பித்தாள்...

 ""இந்த நீதிமன்றம், இதுவரை எத்தனையோ வழக்குகளை சந்தித்திருக்கிறது. முதன் முறையாக ஒரு பெற்றோர், தங்களுடைய வாழ்வாதாரத்தை, பெற்ற பிள்ளையிடமே கையேந்தி பெறுவதற்காக, இந்த மன்றத்தை நாடியுள்ளதை வருத்தத்துடன் கவனிக்கிறது...

 ""தந்தையிடமிருந்த, அவருடைய உழைப்பூதியத்தை தன் தேவைக்காக வாங்கிக்கொண்டு, திருப்பித் தர மறுத்ததுடன், பெற்றோர் என்றும் எண்ணாமல், உதாசீனப்படுத்தி, மனவேதனைக்கு ஆளாக்கியிருக்கின்றனர்.

  ""சிவசுவும், அவர் மனைவியும், சகோதரன் வர மாட்டான் என்று தெரிந்தும், சுயநலமாக சிந்தித்து, அவர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு, ஊருக்கு போக நினைத்த அந்த இருவரின் செயலை, மன்னிக்க முடியாத குற்றமாக இந்த கோர்ட் நினைக்கிறது...

""அதே போல் இளைய மகன் குமாரின் நடத்தையையும், இந்த மன்றம் வன்மையாக கண்டிக்கிறது... பணம் தரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக, அவர்களைப் பற்றி எந்தக் கவலையும் படாமல், விட்டேற்றியாக இருந்த இருவரையும் கூட, குற்றமிழைத்தவர்களாகவே இந்த மன்றம் கருதுகிறது. பெற்றவர்களின் மன உளைச்சலை, இரு பிள்ளைகளுமே அதிகப்படுத்தி இருக்கின்றனர்...  

""எனவே, சிவசு, தன் தந்தையிடம் வாங்கிய, ஆறு லட்சத்திற்கும் இன்றைய தேதி வரையில், அதற்கான வட்டித் தொகையுடன் திருப்பித் தர வேண்டுமாய், இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. 90 நாட்கள் அவகாசம் தருகிறது... ""இந்த 90 நாட்களும், பெற்றோரை தன் பொறுப்பில் வைத்து பராமரிக்கும்படி, குமாருக்கு இந்த மன்றம் ஆணையிடுகிறது. அதாவது, குமார் தனி வீடு பார்த்து, குடியமர்த்தி அவர்களுக்கான எல்லா செலவுகளையும், வாடகை, சாப்பாடு, மருந்து என்று அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு, அவர்களுடைய கைச் செலவுக்காக மாதம், நாலாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று, இந்த கோர்ட் தீர்ப்பளிக்கிறது.  

""குடும்ப கவுரவம் என்றும், சடங்கு சம்பிரதாயம் என்றும் குழம்பாமல், வாழும் நாட்களை நிம்மதியாக வாழ, சட்டத்தின் துணையை நாடி, சரியான முடிவெடுத்த, பெரியவர் பாலசுப்ர மணியத்தை, இந்த மன்றம் பாராட்டுகிறது.

  ""இந்த வழக்கு, இனிவரும் காலங்களிலும், ஒரு பாடமாக இருக்கும் என்று, இந்த நீதிமன்றம் நினைக்கிறது!'' என்று தீர்ப்பை வாசித்து முடித்தார் நீதிபதி மாணிக்க வல்லி. சிவசுவும், விஜியும் தவிப்புடன் நிற்க, குமாரும் அவன் மனைவியும் திகைப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, சரயுவும், பாலசுப்ரமணியமும், மகிழ்ச்சி பொங்க, கண்ணீர் மல்க கை கூப்பி நின்றனர்.

மனைவியின் உள்ளம், மங்காத செல்வம்!


வீட்டினுள் காரை பார்க் செய்துவிட்டு பரத்... ஒரு வித யோசனையும் சோர்வுமாக, உள்ளே வந்தான். சூட்கேசை, ஒரு நாற்காலியில் கிடத்தி, மற்றொரு சேரில் கால் தளர்த்தி, ரிலாக்சாக அமர்ந்தான்.
கணவனின் வருகை தெரிந்து, மின்விசிறியை முழுவீச்சில் சுற்ற விட்டாள் லஷ்மி; பரத்தின் மனைவி.
பொதுவாக, இதுபோன்று வெளியிலிருந்து வரும் பரத், பத்து நிமிடமாவது ஒய்வெடுத்த பின் தான், பேசுவான். தொடர்ந்து காபி, டிபன் வந்தவுடன் சாப்பிட ஆரம்பிப்பான். அது தெரிந்து லஷ்மியும் அமைதியாக, எதிர்புறம் அமர்ந்து வழக்கம் போல, தன் கணவனை ரசிக்க ஆரம்பித்தாள்.
அவர்களுக்கு திருமணமாகி, இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தது. குழந்தை பெற்றுக் கொள்வதை பரத் தள்ளி போட விரும்பிய போது, லஷ்மி மறுப்பேதும் சொல்லவில்லை. காரணம், கணவனை நம்பி, தன் வாழ்க்கையை ஒப்படைத்த பின், அந்த வாழ்க்கை வாகனத்தை, ஒருவரே ஒட்டி செல்வது தானே உத்தமம். இது அவளது அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும், கணவன் மனம் கோணாது நடக்க வேண்டும் என்ற, பெற்றோரின் அறிவுரையும் ஒரு காரணம்.
இன்று மேலும், பத்து நிமிடங்கள் கழித்தே சோர்விலிருந்து கண்விழித்தான் பரத். எதிரில் லஷ்மி. இந்த காலத்தில், இப்படி ஒரு பெண்! கட்டுப்பாட்டுடன் வளர்ந்து... நாகரிகத்தின் வெளிச்சங்களை பார்க்காத பெண். பரத்திற்கு பெரிதாக லஷ்மி மீது, முன்பு ஈர்ப்பு இருந்ததில்லை. நன்றிக்கடன் என்று கூறி, அப்பாவின் வற்புறுத்தலுக்கு தலையாட்டிய தன்னை, லஷ்மி இப்படி அன்பால் கட்டிப்போடுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. அதே நேரம் அரசியல், விளையாட்டு, விஞ்ஞானம் என்ற விஷயங்களில் உட்புகுந்து விவாதம் செய்து, கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளும் அளவிற்கு, பரத்திற்கு லஷ்மி ஏற்றவள் இல்லை என்பதும் உண்மையே.
""என்னங்க ரொம்ப சிந்தனையா இருக்கீங்க?'' லஷ்மி .
சிரித்தான் பரத். தன் பிரச்னையை, இவளிடம் சொன்னால், இவளால் தீர்க்க முடியுமா... ""போய் டிபன் கொண்டா.''
இடியாப்பமும், குருமாவும் வர... எழுந்து கை கழுவி வந்து, இரண்டு வாய் சாப்பிட்டிருப்பான்...
""லஷ்மி... எனக்கு, நான் வேலை பாக்கிற கம்பெனி எவ்வளவு முக்கியம்ன்னு உனக்கு தெரியுமில்ல,'' என்று கேட்டான்.
""நல்லா தெரியும்ங்க.''
""வெளிநாட்டு கம்பெனியாக இருந்தாலும், மாசம் இரண்டு லட்சம், இந்தியாவிலேயே தர்றான்.''
""தெரியும்ங்க.''
""மொத்தம் இந்தியாவுல உள்ள எட்டு பிராஞ்ச்ல... இங்க சென்னையில் உள்ள பிராஞ்ச்க்கு, நான் தான் ஹெட்.''
""நல்லா தெரியும்ங்க.''
""இப்ப... அதவிட பெரிய சான்ஸ் வந்திருக்கு லஷ்மி இதுல நான் ஜெயிச்சா... பெரிய புராஜெக்ட் என் கைக்கு வரும். ஆனா, அது முடியாது போலிருக்கு லஷ்மி.''
சற்று விரக்தியாக சொல்ல, லஷ்மி, ""ஏங்க முடியாது... நீங்க டபுள் டிகிரி வாங்கியிருக்கீங்க, நல்லா இங்கிலிஷ் பேசறீங்க. இந்த ஆபீசை ரெண்டு வருஷமா நடத்தறீங்க... பாக்க ராஜாவாட்டம் இருக்கீங்க, நீங்க ஏன் ஜெயிக்க முடியாது!'' என்றாள்.
அவளது தலையை அன்பாக தடவிய பரத். அவளுக்கு, தன் மேல் இருக்கும் நம்பிக்கையை நினைத்து பெருமை கொண்டான்.
""நீ சொல்றது சரி தான் லஷ்மி... ஆனா, என் கம்பெனியோட ஆல் ஓவர் ஹெட், நியூயார்க்ல இருக்கு... அவங்க நாகரிகத்தின் உச்சம். அவங்க, எனக்கு ஒரு பெரிய புராஜெக்ட் கொடுத்து... இந்தியாவுக்கே தலைமையா நியமிக்கணும்ன்னா... அதுக்கு சில திறமைகளை எதிர்பார்ப்பாங்க. அதுல நீ சொல்றத விட, வேற நெறய எதிர்பார்ப்பாங்க... அது எனக்கு இல்ல லஷ்மி.''
லஷ்மி புரியாமல் பார்க்க, தொடர்ந்தான் பரத், ""ஆமாம் லஷ்மி... அவங்களுக்கு என்னோட குடும்ப நிலையும் முக்கியம். குழந்தை இல்லாதது பிளஸ் பாய்ன்ட். ஆனா, என்னோட லைப் பார்ட்னர்; அது தான் நீ... இன்னும் மாடர்னா, ஸ்மார்ட்டா இருக்கணும்ன்னு எதிர்பார்ப்பாங்க.''
மேலும் குழப்பமானது லஷ்மிக்கு.
""ஏங்க, என்னங்க பேசறீங்க... நான் எப்படி இருந்தா உங்க கம்பெனிக்கு என்னங்க? நீங்க ஒழுங்கா வேல பார்த்தா போதாது?''
வாய்விட்டு சிரித்தான் பரத்.
""இதான்... இங்கதான் நீ கட்டுபெட்டின்னு நிரூபிக்கிற. என் வேலை தான் முக்கியம்ன்னா, அப்புறம் ஏன் இந்த ஷூ, பேன்ட், டை எல்லாம்... ம்... அதான் கம்பெனியோட டிரஸ்கோட், சில ரூல்ஸ், சில பார்மாலிட்டிஸ், இதுல எல்லாம் அவங்க ரொம்ப கவனமா இருப்பாங்க. இப்ப என்னோட, இந்த விஷயத்த எடுத்துக்க, டில்லில அடுத்த வாரம், ஒரு பெரிய பார்ட்டி இருக்கு... இதுக்கு எங்க பிரசிடென்ட் மிஸ்டர் பிரடெரிக்ன்னு ஒருத்தர் வருவாரு. அங்க இந்தியாவுல உள்ள எட்டு பிராஞ்ச்லிருந்தும், எம்.டி., எல்லாம், தம்பதிகளாத் தான் வருவாங்க; வரணும். எங்களுக்குள்ள ஒரு சின்ன போட்டி, சின்ன இன்டர்வியூ... இதுல எந்த ஜோடி ஸ்கோர் செய்றாங்களோ, அவங்களுக்கு ஒரு புது புராஜெக்ட், பிரசிடென்ட் தருவாரு. அதோட வேல்யு, ஆயிரத்து நூறு கோடி. மேலும், அத வாங்கினவங்க இங்க, "சீப்' ஆய்டுவாங்க. அதுக்கப்புறம் வளர்ச்சி ஓ... காட்... எங்கேயோ போய்டும். பட், நான் உன்னை அழைச்சுக்கிட்டு போய், அத சாதிக்க முடியும்ன்னு தோணல.''
பரத்தின் குரலில் இயலாமை தெரிந்தது. இப்போது லஷ்மிக்கு ஓரளவு புரிந்தது. ஆனாலும், குழந்தை போல் கேட்டாள்...
""ஏங்க... இன்னும் ஒரு வாரம் இருக்கே, நான் கொஞ்சம் மாற முடியாதா ?''
மறுபடியும் சிரித்தான் பரத்.
""என்ன லஷ்மி, விளையாடறியா? மொதல்ல உன் கூந்தல வெட்டிக்கணும்; முடியுமா சொல்லு.''
""என்னது... புருஷன் உயிரோட இருக்கும் போது முடி வெட்டிக்கணுமா,'' என்று பதறினாள் லஷ்மி.
""சரி விடு. லஷ்மி... வாழ்க்கையில சில விஷயங்கள, நாம இழந்து தான் ஆகணும்,'' என்று சொல்லிய பரத், விடு விடுவென்று டிபனை சாப்பிட ஆரம்பித்தான்.
வேதனையில் ஆழ்ந்தாள் லஷ்மி. எல்லா விஷயத்திலும், குறை வைக்க கூடாதென்று இருக்கும் போது, ஏன்... இந்த பிரச்னையில் தன்னால் பரத்திற்கு ஈடாக இருக்க முடியவில்லை? மாடர்ன் டிரஸ் போட்டு, உயரமான செருப்பு போட்டு, பவுடர் லிப்ஸ்டிக்கை அப்பி, வெளிநாட்டு ஆங்கில உச்சரிப்போடு, இதெல்லாம் நடக்கவே வாய்ப்பில்லை என்பது கண்கூடாக தெரிந்தது.
இரவு பரத் தூங்கியபின்னும், லஷ்மி தூங்கவில்லை. ஊரில் அப்பாவிடம் போன் பேசலாமா என்று கூட யோசித்தாள். அப்பாவால் பெரிதாக என்ன செய்ய முடியும் என்றும் தோன்றியது.
சில நாட்களுக்கு பிறகு, ஒரு இரவு வேளையில் லஷ்மி, பரத்திடம் வந்தாள்.
""ஏங்க உங்களுக்கு தாங்க அந்த புராஜெக்ட்... இது உறுதிங்க.''
""என்ன சொல்ற?'' புரியாமல் கேட்டான் பரத்.
""ஆனா, நான் சொல்றபடி நீங்க கேக்கணும்... கேட்டா நீங்க கண்டிப்பா நம்பர் ஒண்ணா வருவீங்க.''
புதிர் போட்டாள் லஷ்மி .
சுவாரசியமாக தன் மனைவியை பார்த்த பரத், ""சொல்லு... என்ன செய்யணும்?'' என்று கேட்டான்.
""பொதுவா பார்ட்டிக்கு, நீங்க, உங்க ஜோடியோட வரணும்ன்னு தான் எதிர்பார்ப்பாங்க... கண்டிப்பா மனைவி தான் வரணும்ன்னு சொல்ல மாட்டாங்க இல்லியா? ஒரு பார்ட்னர், அது, லவ்வராவும் இருக்கலாம். இல்லியா? அதுமாதிரி... நீங்க ஏங்க ஒரு அழகான பெண்ணை பார்ட்னர்ன்னு, கூட கூட்டிகிட்டு போகக் கூடாது? யாராவது குறிப்பா, இது உன் மனைவியான்னு கேட்டா கூட, இப்ப "லவ்' செய்றேன் கூடிய சீக்கரம் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்னு சொல்லிடுங்க. என்ன... ஒரு ரெண்டு நாளைக்கு, உங்க மனைவியா நடிக்க ஒருத்திய ஏற்பாடு செய்துகிட்டா, நீங்க நெனச்சது ஏங்க நடக்காது?''
லஷ்மி சொல்ல, பரத் அதிர்ந்தான்... லஷ்மியா இந்த யோசனை சொல்கிறாள் என்று. பெண்கள் விளையாட்டுக்கு கூட, தன் கணவனை விட்டு தரமாட்டார்களே!
""என்ன யோசிக்கறீங்கன்னு எனக்கு புரியுதுங்க, இன்னொரு பொண்ண எப்படி புருஷன் கூட, ஒரு மனைவி இணைச்சு பாப்பான்னு தானே? எனக்கு உங்க எதிர்காலம் முக்கியம்ங்க. மேலும், எம்மேல காட்டுற அன்ப யாராலும் பங்கு போட்டுக்க முடியாது. அந்த அளவுக்கு உங்கமேல நம்பிக்கை உண்டு... நீங்க நல்லா யோசிச்சு முடிவு செய்ங்க.
""உங்களுக்கு ஜோடியாக, ஒருத்திய நடிக்க சொல்லலாம்... எனக்கு எந்த வருத்தமுமில்லை. நீங்க தயங்காதீங்க. போட்டி, டில்லில நடக்க போவுது, உங்க ஆபீசுக்கு தெரிய சான்ஸ் இல்ல. கூடிய வரைக்கும் போட்டோ எடுக்க வேண்டாம்ன்னு சொல்லிடுங்க... நானும் உங்க கூட டில்லி வர்றேன். ஆனா பார்ட்டிக்கு, அவள கூட்டிக்கிட்டு போங்க, பயப்படாதீங்க. என் யோசனை சரியா வருமா?''
நம்பிக்கையோடு கேட்டாள் லஷ்மி.
இப்போது, அதிர்விலிருந்து ஆச்சரியமானான் பரத் . இது நடந்தால், ரிசல்ட்டும் சாத்தியம் தான். பாரின் டீமிற்கு, ஒரு பார்ட்னர் போதும். அவள்... மனைவியா என்று துருவி ஆராயமாட்டார்கள். பேருக்கு ஒருத்திய காட்டி, புராஜெக்டை பெறலாம். வாடகைக்கு அழகான பெண்கள் கிடைப்பரா?
தன் சந்தேகத்தை லஷ்மியிடம் கேட்டான்.
""நீ சொல்றபடி, உன்னோட தியாகத்துல, ஒரு ரெண்டு நாளைக்கு இன்னொருத்திய ஏற்பாடு செஞ்சுக்கலாம் லஷ்மி... ஆனா, அவ... அழகா இருந்தா மட்டும் போறாது. புத்திசாலியா, மாடர்னா இருக்கணும்... அதுமாதிரி யாரு கிடைப்பாங்க?''
உடனே லஷ்மி... அருகிலிருந்த மேஜையின் டிராயரை இழுத்தாள். அதில் இருந்த ஒரு போட்டோவ எடுத்து, தன் கணவரிடம் காட்டி, "இத பாருங்க, உங்களுக்கு புடிச்சிருக்கா?' என்றாள். லஷ்மி காட்டிய, அந்த போட்டோவில் இருந்த பெண், மாடர்ன் டிரஸ்சில் மிக மிக அழகாக இருந்தாள். பரத் தன்னையுமறியாமல், வாய் பிளந்தான்.
""அட, பாத்தது போதும்ங்க,'' லஷ்மி உலுக்க, பரத் அவளைப் பார்த்து. ""யார் இது?'' என்றான்.
""என்னோட ஸ்கூல்ல படிச்சவ, பேரு டெய்சி. ஸ்கூல் முடிச்சப்புறம், "டச்' விட்டுப் போச்சுங்க. கடைசியா ஊருக்கு போனப்ப, அவளப்பத்தி விசாரிச்சேன்... அவ, ஐ.ஏ.எஸ்.,க்கு டிரெய்னிங் எடுக்க டில்லிக்கு போயிருக்காளாம். ஆனா, அவளால இன்னும் முடிக்க முடியலையாம். அதனால, கல்யாணம் எதுவும் வேண்டாம்ன்னு, அங்கேயே இருக்காளாம், உங்க பிரச்னைய நான் யோசிக்கும் போது, எனக்கு ஒரு ஐடியா வந்தது. அவள ஏன் உங்க பார்ட்னரா நீங்க கூட்டிக் கிட்டு போகக்கூடாதுன்னு... ஆனா, அவக்கிட்ட இன்னும் பேசலீங்க, அவ, எனக்காக ஒத்துப்பான்னு தோணுதுங்க... அவளும் நல்ல பொண்ணுதாங்க.''
லஷ்மி சொல்ல, பரத் நம்பாமல் ஆச்சரியப்பட்டான்.
""லஷ்மி... எனக்கு இது சரியா வருமா, தப்பா வருமான்னு சொல்லத் தெரியல... ஆனா, முயற்சி செய்யலாம்ன்னு தோணுது. அதே நேரம் நானும், இந்த பொண்ணும், ஜோடியா கலந்துக்கறத நீ எப்படி எடுத்துப்பேன்னும் புரியல!''
""அட, அவ ஒரு நாள் உங்க கூட இருக்கப்போறா... அதுவும் பகல்ல, நானும் தான் டில்லி வர்றேனே... என்னால நீங்க விரும்புற மாதிரி இருக்க முடியல, அதனால... இதுக்கு விட்டுக் கொடுக்கறது தப்பில்லீங்க. நீங்களும் சரி... அவளும் சரி எனக்கு வேண்டியவங்க. அதனால, நீங்க குழம்பாதீங்க.''
""இந்த போட்டோ?''
""இது எங்க பேர்வெல் பார்ட்டில எடுத்ததுங்க. அதுலேந்து உங்களுக்கு காட்ட தனியா கட் செய்து, பெருசு செய்தேன்.''
""லஷ்மி, நீ, இந்த அளவுக்கு விட்டு கொடுக்க... நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். நீ சீக்கிரம், இவங்க கிட்ட பேசு. எனக்கு, இப்ப ஓரளவு நம்பிக்கை வந்திருக்கு லஷ்மி... நான் நெனச்ச மாதிரி எல்லாம் சக்சஸ் ஆனா, நம்ம வாழ்க்கை எங்கயோ போய்டும்.''
உற்சாகமானான் பரத். தொடர்ந்து, ""அவங்க ஓ.கே., சொன்னா... அவங்களோட ரீசன்ட் போட்டோவ, "இ - மெயில்' செய்ய சொல்லு. அத வெச்சு நான், "அப்ளை' செய்யணும்.''
பரத் கேட்க... ""சரிங்க... ஊர்ல அப்பாவுக்கு போன் செய்து, அவ போன் நம்பர் எப்படியாவது வாங்கறேங்க,'' லஷ்மியும் ஆர்வமாக சொன்னாள்.மகளின் விருப்பத்திற்காக, காரணம் கூட கேட்காமல் லஷ்மியின் அப்பா, கொஞ்சம் மெனக்கெட்டு டெய்சியின் நம்பரை வாங்கி தந்தார்.
லஷ்மி, டெய்சியை தொடர்பு கொள்ள, உற்சாகத்தை கொட்டினாள் டெய்சி.
பரஸ்பர விசாரிப்பிற்கு பின், லஷ்மி... அந்த வித்யாசமான கோரிக்கையை, கொஞ்சம் தயக்கத்துடன் சொல்ல, எதிர்முனையில் மவுனம் நிலவியது,
""என்ன டெய்சி... ஏதாவது பேசுடி,'' குரல் கொடுத்தாள் லஷ்மி .
""லஷ்மி... நீ சீரியசா கேக்கறியாடி?''
""ஆமாண்டி.''
""இல்ல... வந்து நான், இங்க ஹாஸ்டல்ல தான் தங்கியிருக்கேன். ஸோ, எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. ஒரு ஹெல்ப்பா செய்யலாம் தான்... ஆனா, உனக்கு சென்டிமென்டா எந்த பீலிங்கும் கிடையாதா?''
டெய்சி சந்தேகமும், குழப்பமுமாக கேட்டாள். ""டி... அதப்பத்தி நீ ஏன் கவலைப்படற... எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. நீ அவர் கூட காலையில் போகப்போற, ஒரு நாலு மணி நேரம் சிரிச்சுகிட்டு இருக்கப்போற... எல்லாம் பரத் பாத்துப்பாருடி. இதுல என் புருஷனோட எதிர்காலமே அடங்கியிருக்குடி.''
லஷ்மி மீண்டும் வேண்ட, அரைமனதோடு ஓ.கே., சொன்னாள் டெய்சி.
""ராத்திரி பரத், போன்ல பேசுவார்டி,'' சொல்லி போனை வைத்தாள், லஷ்மி.
அன்றிரவு லஷ்மி அருகிலிருக்க, டெய்சியுடன் பேசினான் பரத். "இட்ஸ் ஓ.கே., சார். என் தோழிக்காக செய்யறேன்...' முடிவாக டெய்சி சொல்ல, ""ஓ.கே., டெய்சி... அடுத்த சனிக்கிழமை அங்க பார்ட்டி. தவிர, டிரஸ்... அப்புறம் சில டீடெய்ல்ஸ் பத்தி, "இ-மெயில்' செய்யறேன்; ரொம்ப தேங்க்ஸ் டெய்சி,'' என்றான் பரத்.
அடுத்த சில நாட்களில், டெய்சியின் முழு உருவ போட்டோவுடன் தன்னை இணைத்து மேக்சி சைசில், ஒரு போட்டோ தயாரித்து லஷ்மியிடம் காட்டினான் பரத்.
ஜோடிப் பொருத்தம் சூப்பராக இருக்க, லஷ்மிக்கு முதன் முதலாக, ஒரு சின்ன நெருடல் மனதில் ஏற்பட்டது.
அந்த முக்கியமான நாளுக்கு, இரண்டு நாட்கள் முன், பரத்தை அலுவலக ஊழியர்கள் வாழ்த்த, லஷ்மியுடன் ஏர்போர்ட்டிற்கு புறப்பட்டான் பரத்.
விமானம் டில்லியை அடைய ஏர்போர்ட்டில் வெள்ளை நிற உடையில், ஒரு தேவதையாக டெய்சி, அவர்களை வரவேற்றாள். மூவரும் ஏற்கனவே, "புக்' செய்திருந்த, ஓட்டலுக்கு சென்று, அவர்களுக்குரிய அறைக்குள் நுழைந்தனர்.
""டெய்சி... வெரி வெரி தேங்ஸ் பார் யுவர் கம்பெனி,'' மீண்டும் ஒரு முறை சொன்னான் பரத்.
""நீங்க சொன்ன மாதிரி, ப்ரவுன் கலர்லேயே காக்ராசோலி டிரஸ் வாங்கிட்டேன் பரத்.''
""எஸ், டெய்சி... எங்க கம்பெனி பேரு ப்ரவுன் பேர்ல்... சாப்ட் சொல்யுஷன். ஸோ, நாம அத ட்ரஸ்லேயே சிம்பாலிக்கா காட்டப்போறோம். நீங்க... ப்ரென்ட்ல ஓரமா விழற முடிய இன்னும் ஷாட் செய்துருக்கணுமே.''
பரத்தும், டெய்சியும் பரஸ்பரம் சகஜமாக டிஸ்கஸ் செய்ய, ஓரமாக ஒதுங்கினாள் லஷ்மி . அங்கு ஒரு வித ஏக்கத்துடன் நின்றால், அவர்களுக்கு அது தர்ம சங்கடமாக இருக்கும் என்று புரிந்து கொண்டாள்.
அந்த முக்கியமான நாளும் வந்தது. நகரின் பெரிய ரெசிடென்ஷியல் ஓட்டல் ஒன்றின் ரூப் கார்டனில், பி.பி.எஸ்.எஸ்.சின் நியூயார்க் பிரசிடென்ட் பிரடெரிக் முன்னிலையில், இந்தியாவின் எட்டு கிளைகளின் எம்.டி.,களும் தங்கள் இணையுடன் குழுமியிருந்தனர். உயர் ரக மதுபானங்கள் பரிமாறப்பட, பரத் ஒரு, "சிப்' அருந்தினான்; கூடவே டெய்சியும் அருந்தினாள்.
அதே நேரம், லஷ்மி தன் அறையில், தான் கையோடு கொண்டு வந்திருந்த சாமி படத்தின் முன், கணவன் வெற்றி பெற பூஜை செய்து கொண்டிருந்தாள்.
இரண்டு மணிநேரம் சென்றிருக்கும். கதவு தட்டப்பட, லஷ்மி லென்ஸ் வழியாக கதவை ஊடுருவ வெளியில், பரத்.
வேகமாக கதவை திறந்தவள், ""என்னாச்சுங்க... சக்ஸசா... டெய்சி எங்க?'' கேள்விகளை அடுக்கினாள்.
ஆனால், அவள் எதிர்பார்ப்பிற்கு மாறாக பரத்தின் முகம் சோகத்தில் மூழ்கி வாடிப்போயிருந்தது.
""ஏங்க... நம்ப ப்ளான் சரிப்படலியா?''
மீண்டும் கேட்டாள் லஷ்மி. பரத்... லஷ்மியை சற்று நேரம் உற்றுப் பார்த்தான். பின், குனிந்து அவள் கால் விரல்களை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டான்.
லஷ்மி ஷாக்கடித்தது போல் துடித்தாள்,""என்னங்க என்ன செய்றீங்க,'' சட்டென்று விலகினாள்.
பரத் கண்கள் கலங்க தளர்வான நடையுடன் சோபாவில் அமர்ந்தான்.
""லஷ்மி,'' கூப்பிட்டான் பரத். அருகில் வந்தாள் லஷ்மி.
""லஷ்மி... நானும், உன் தோழியும், ஒரு பத்து நிமிஷம் தான் பார்ட்டியில இருந்தோம். உடனே ஒரு அர்ஜென்ட் போன்ன்னு சொல்லிட்டு வெளில வந்துட்டோம். நாங்க அட்டெண்ட் செய்யலை... அவ ஹாஸ்டலுக்கு போய்ட்டா... நான் இங்க வந்திட்டேன்.''
பரத் சொல்ல திகைத்தாள் லஷ்மி.
""என்னங்க சொல்றீங்க... இதுக்காகவா நாம கஷ்டப்பட்டோம்?''
""பொறு லஷ்மி... நாங்க வெளில வந்ததுக்கு காரணம், அந்த பிரடெரிக்கோட பேச்சு... அவரோட ஸ்பீச் இங்கிலிஷ்ல இருந்தது. ஆனா, கருத்து... ஒவ்வொரு மனுஷனுக்கும் தேவையானதா இருந்தது. குறிப்பா, என்ன மாதிரி படிச்ச முட்டாளுக்கு சவுக்கடியா இருந்திச்சு லஷ்மி,'' பரத் சொல்ல, கேள்விக் குறியோடு, பரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் லஷ்மி.
""அவரு சொன்னாரு... "நான் இந்த ப்ராஜக்ட்ட ஒரு இந்தியனுக்கு கொடுக்க ஆசைப்பட்டதுக்கு காரணம், உலகத்துல இந்தியா தான் கலாசாரத்தின் தாய். குடும்பம்ங்கிற ஒரு அமைப்பை கடவுளவிட மேலா கொண்டாடுறாங்க, மேலழகுக்கு அடிமையாகாம ஒரே பெண்ணோட தங்கள் வாழ்நாளை பகிர்ந்துக்கறாங்க.
""ஆணும், பெண்ணும் சக... நல்ல, கெட்ட குணங்கள, "அட்ஜஸ்' செய்து வாழ்றாங்க... அதப்பாத்து வர்ற, அடுத்த தலைமுறையும்... நிலையான ஒரு வாழ்க்கை தத்துவத்தை அப்பா, அம்மாகிட்டேயிருந்து கத்துக்கறாங்க... உலகத்துல பல இடங்கள்ல மனுஷன் காட்டுமிராண்டித் தனமா இருந்தப்ப, இந்திய நாகரிகம் உச்சத்துல இருந்தது. அதுல குறிப்பா, ஒருவனுக்கு ஒருத்திங்கற கான்சப்ட்ல; மத்த நாடுங்க இன்னும் முழுமை அடையல. பணம், அந்தஸ்து, சுகத்துக்காக பெண்களை, ஒரு கன்ஸ்யூமர் புராடெக்டா... பாக்குற உலகத்தல, பெண்ணை தங்களைவிட மேலா பாத்துக்கற ஆண்கள். அதுவும், உலக விஞ்ஞான பொருளாதார முன்னேற்றத்துக்கு ஈடுகொடுக்கும் ஆண்கள், இந்தியாவுல தான் இருக்காங்க. இவங்கள்ல ஒருத்தருக்கு, இந்த ப்ராஜெக்ட்ட வழங்குவது தான் நியாயம். அது தான் என் விருப்பம்'ன் னு சொன்னாரு லஷ்மி.
""ஒரு மேல் நாட்டுக்காரன், எது மட்டம்ன்னு சொல்லி, என்ன மாதிரி ஆண்களை உயர்த்தி பேசறானோ... அது தான் முக்கியம். அதனால, வரப்போற பணம், அந்தஸ்து முக்கியம்ன்னு சொல்லி, நான் ரொம்ப கேவலமா நடந்துகிட்டத நெனச்சு, ரொம்ப அசிங்கமா உணர்ந்தேன் லஷ்மி. டெய்சியும் பீல் செய்தா, இதுக்கு மேலயும் நாங்க நடிச்சு, அங்க ஜெயிச்சாலும், தோத்தாலும் அது கேவலம். நம்ப கலாசாரத்தோட, ஒரு சின்ன துளி, இன்னும் என் ரத்தத்துல ஓடிக்கிட்டிருக்கு. அதனால, ஒரு பொய் சொல்லிட்டு வெளில வந்திட்டோம். இப்ப என் மனசுல, கொஞ்சமாவது ஒரு மனுஷனா நடந்துகிட்ட திருப்தி இருக்கு லஷ்மி.''
குரல் தழுதழுக்க தன் மன பாரத்தை இறக்கினான் பரத்.
""பணத்துக்காக, அந்தஸ்துக்காக, மனைவியோட இடத்துல இன்னொருத்திய, நீங்களா இருக்க சொன்னீங்க... நான் தானே ஐடியா கொடுத்தேன்.''
பரத், அவள் கையை பிடித்து சொன்னான். ""லஷ்மி... நீ கொடுத்த ஐடியா, கணவனே கண்கண்ட தெய்வம்ன்னு நெனக்கிற, கணவனுக்காக உயிரையும் கொடுக்கற, ஒரு உத்தமியோட யோசனை. ஆனா, அத புரிஞ்சுக்காம, அந்த உத்தமியோட இடத்துல வேற ஒருத்திய... அந்தஸ்து, பணத்துக்காக வெச்சுப் பார்த்த ரொம்ப கேவலமான ஆண் நான் லஷ்மி. எவ்வளவு கொட்டி கொடுத்தாலும், அந்த புனிதமான இடத்த யாராலும் நிரப்ப முடியாது லஷ்மி... இத ஒரு வெளிநாட்டுக்காரன் சொல்லி, நான் புரிஞ்சுக்கிட்டேன். எனக்கு, உன்னவிட எதுவுமே முக்கியமில்ல லஷ்மி.''
லஷ்மி மடியில் தலை சாய்த்து, ஒரு குழந்தை போல தேம்பினான் பரத். லஷ்மி பரத்தின் தலையை தடவி கொடுக்க, அவர்கள் தாம்பத்தியம் சங்கீதமாக மாறியது.

 நன்றி : தினமலர்

Tuesday, 9 July 2013

மேனேஜரும் நம்மளும்

மேனேஜரும் நம்மளும்... :

ஒரு வேலையை முடிக்க நீங்க ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா அது நத்தை வேகம்.

உங்க மேலதிகாரி அதே வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கிட்டா..
தரோவா திட்டம் போட்டு பக்காவா தயார் பண்றார்..



 ஒரு வேலையை உங்களாலே உடனே செய்ய முடியலேன்னா…சோம்பேறி.

அவராலே செய்ய முடியலேன்னா….. நேரம் இல்லே..


எதாவது தப்பு பண்ணிட்டீங்கன்னா… முட்டாள்தனம்

அவர் பண்ணினா.. அவரும் மனுஷந்தானே.. கடவுளா..?


நீங்களா ஒரு வேலையை செஞ்சா.. அதிகப் பிரசங்கித் தனம்

அவர் செஞ்சா.. முன்னுதாரணம்..
\

நீங்க சொல்றது தான் சரி.. அப்படின்னு நெனைச்சீங்கன்னா.. பிடிவாதம்..

அவர் அப்படி நெனைச்சா… கொள்கையில் உறுதி..


நீங்க உங்க மேலதிகாரிக்கிட்ட தன்மையா நடந்துக்கிட்டா.. காக்கா பிடிக்கறீங்க.

அவர் முதலாளிக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டா.. ஒத்துழைப்பு.. பணிவு..


நீங்க அலுவலக நேரத்திலே வெளியே இருந்தா.. ஊர் சுத்தறீங்க...

அவர் இருந்தா.. பாவம்.. நாயா அலையறார்.. மாடா உழைக்கிறார்..


நீங்க உடம்புக்கு முடியலேன்னு ஒருநாள் லீவுபோட்டா.. வேறே கம்பெனிக்கு முயற்சி பண்றீங்க..

அவர் லீவு போட்டா.. ஓவரா உழைச்சு உடம்ப கெடுத்துக்கிட்டார்..

# என்ன உலகமடா இது..????



ரியல் எஸ்டேட் டூர் போலாமா?



சென்னைக்கு மிக அருகில் திண்டிவனமும் மிகமிக அருகில் பாண்டிச்சேரியும் இருப்பது ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் சொல்லித் தெரிந்திருக்கும் உங்களுக்கு. மத்தியான நேரத்தில் (அதுகூடப் பரவாஇல்லைங்க...

சமயங்களில் நள்ளிரவில்கூட!) டி.வி-யைத் திருப்பினால்... சீரியல் நடிகைகள் ஹெவி மேக்கப்பில் வந்து, 'இந்த இடம் தாம்பரத்துலேர்ந்து தாண்டிப்போற தூரம்தான், வந்தவாசியில் இருந்து வாக்கபிள் டிஸ்டன்ஸ்தான்’ என்று குளோஸப் கேன்வாஸ் செய்வார்களே... அதே விளம்பரங்கள்தான்.
கூடுவாஞ்சேரி தொடங்கி திண்டிவனம் வரை சாலையின் எந்தப் பக்கம் திரும்பி னாலும் பளபளப்பான ரியல் எஸ்டேட் சைட்டுகள் மின்னுகின்றன.

'ஹைவேஸ் சிட்டி’, 'செந்தமிழ் நகர்’, 'குமரன் நகர்’, 'ஜே.கே. கார்டன்’ என மானாவாரி நிலங்களை பிளாட் பிரித்து மானாவாரியாகப் பெயர் வைத்திருக்கின்றனர். ஐ.நா. சபை அலுவலகம் ரேஞ்சுக்கு கலர் கலர் கொடி கள் வேறு. ஹாலோ பிளாக் சுவர்களில் ஃப்ளோரசன்ட் பெயின்ட் கண்களைப் பறிக்கிறது. வெயில் பிளக்கும் மத்தியான நேரத்தில் டெம்போ டிராவலரில் வந்து இறங்குகிறது மக்கள் கூட்டம். ''இடம் எல்லாம் நல்லாதான் இருக்கு.

ஆனா, சுத்தி நாலஞ்சு கிலோ மீட்டருக்கு ஒரு குடிசை யைக்கூடக் காணலையே... டெவலப் ஆகுமா?'' என கூல் டிரிங்க்ஸை உறிஞ்சிய படியே கணக்குப் போடுகின்றனர். என்னதான் நடக்கும் அந்த ரியல் எஸ்டேட் சைட் சீயிங்கில்?

'சைட்டைப் பார்வையிட எங்கள் குரோம்பேட்டை அலுவலகத்தில் இருந்து தினந்தோறும் வாகன வசதி உண்டு’ - என்ற விளம்பரத்தைப் பார்த்து, நம்பரை டயல் செய்தேன். ''அந்த வெல்கம் சிட்டி சைட்டுங்களா, அது முடிஞ்சிருச்சே... ஒரே ஒரு கார்னர் பிளாட் மட்டும்தான் இருக்கு. ஸ்கொயர் ஃபீட் 170 ரூபாய். அதுக்குப் பக்கத்துலயே இன்னொரு லே-அவுட் போட்டிருக்கோம்.

ரெண்டையுமே பார்க்கலாம். நாளைக்குக் காலையிலயே வந்துடுங்க!''- சொன்னதோடு நிற்காமல், அடுத்த நாள் காலை எட்டு மணிக்கே போன் செய்து நினைவூட்டினார். 'வாங்குறவனைவிட விக்கிறவன் சுறுசுறுப்பா இருக்கானே’ என யோசித்தபடி குரோம்பேட்டை அலுவலகம் சென்றால், அங்கு ரேஷன் கடைக் கூட்டம்.

வந்திருந்தவர்களில் சரிபாதிப் பேர் வெல்கம் சிட்டியில் இடம் வாங்கி, அன்று வெள்ளிக்கிழமை என்பதால் பத்திரப் பதிவு செய்ய வந்தவர்கள். மீதிப் பேர் இடம் வாங்க வந்தவர்கள்.

எல்லோருடைய முகங்களிலும் குழப்பம், மகிழ்ச்சி, டென்ஷன், கவலை எனக் கலவையான உணர்ச்சிகள். மனைவி, குழந்தையோடு வந்திருந்தவரைப் பார்த்துச் சிரித்தேன். அவருக்கு என்ன புரிந்ததோ... ''அப்புறம் இவளுக்கு இடத்தைக் காட்ட இன்னொரு தடவை போகணும். அடிக்கடி போயிட்டு வர இடம் என்ன பக்கத்துலயா இருக்கு? இங்கேருந்து மேல்மருவத்தூர் போகணும்ல...'' என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

''மேல்மருவத்தூரா... எது?
'சென்னைக்கு மிக அருகில்’ இருக்கே அதுவா?'' என்றதும் அதற்கும் சிரித்தார்.

''அதுக்கு என்ன சார் பண்றது? நாம என்ன அடையாறுலயா இடம் வாங்க முடியும்? இருக்குற ரெண்டு, மூணு லட்சத்துக்கு அங்கேதான் போகணும். விலை ஏறுனா சரி!'' என்றார். ஏறும் என்று நினைத்துதான் இத்தனை பேரும் கிளம்பி வந்திருக்கிறார்கள். ஆனாலும் நடுத்தரவர்க்க பிராண்ட் பயம் விலகவில்லை.

சினிமா முடிந்து வெளியே வருபவர்களிடம், 'படம் எப்படி?’ எனக் கேட்பதுபோல... ஏற்கெனவே இடம் வாங்கியவர்களிடம் 'இடம் எப்படி?’ என்று விசாரணையைப் போடுகின்றனர். அவர் என்னத்த சொல்வார்... ''ஆமாங்க... ரேட் ஏறும்னு சொல்றாங்க. பக்கத்துலயே புதுசா காலேஜ் ஒண்ணு வரப்போகுதாம்ல!'' என அவர் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் ஆறுதல் அவர்களுக்கும் ஆறுதலாக இருக்கிறது.

சென்னைக்குப் பக்கத்து மாவட்டங்களில் 10 ஏக்கர், 20 ஏக்கர் என மொத்தமாக நிலத்தை வாங்கி, அதை பிளாட் பிரித்து 'ஹை ஸ்டைல் கார்டன்’, 'நியூ சிட்டி அவென்யூ’ என்று பெயர்வைத்து விற்கின்றனர். இந்த இடத்தைப் பார்வையிட ஒவ்வொரு நாளும் நகரத்தில் இருக்கும் அவர்களது அலுவலகத்தில் இருந்து இலவசமாக அழைத்துச் செல்கின்றனர். இதற்காகவே டெம்போ டிராவலர் வேன்களை வாங்கி வைத்துள்ளனர். திருவள்ளூர் பக்கம் லே-அவுட் போட்டிருப்பவர்கள், வாடிக்கையாளர்களை மின்சார ரயிலில் அழைத்துப்போகிறார்கள்.

வந்திருந்த குரூப்பை இரண்டாகப் பிரித்து பத்திரப் பதிவுக்குப் பாதியையும், இடத்தைப் பார்க்க மீதியையும் அனுப்பிவைத்தார்கள். வேனில் ஏறி 10 நிமிடம்கூட இருக்காது. உள்ளே இருந்த டி.வி-யில் ஒரு சீரியல் நடிகை வந்து 'பாருங்க... இந்த இடம் ஹைவேஸுக்கு எவ்வளவு பக்கத்துல இருக்குனு...’ என்று பேச ஆரம்பித்தார். ஒரு பாட்டு. மறுபடியும் அந்த விளம்பரம். இரண்டு மணி நேரத்துக்கு இதையே 'ரிப்பீட்’ ரிவிட் அடித்தார்கள்.
இந்த ரியல் எஸ்டேட் டி.வி. விளம்பரங்கள் கொடுமையிலும் கொடுமை. அதில் கேமராமேனாகப் பணிபுரியும் நண்பர் ஒருவர், ''போன வாரம் திருத்தணி பக்கம் ஒரு ஷூட். டி.வி. நடிகர் சஞ்சீவ்தான் ஆங்கர். மொத்தம் 5 டிஜிட்டல் கேமரா, 10 பார் லைட் செட்டப். ஜிம்மி ஜிப் வேற. சினிமா ஷூட்டிங்குக்கே இவ்வளவு பிரமாண்டம் இருக்காது. அன்னைக்கு ஒரு நாள் செலவு மட்டும் 15 லட்ச ரூபாய்!'' என்று மலைக்கவைத்தார். ஆள் இல்லாத வனாந்திரத்துக்குள் நாலு கல்லை நட்டுவைத்து, 1,200 சதுர அடி ரூபாய் 2 லட்சம் என்று விற்று இதைச் சம்பாதிக்கிறார்கள்.

அதிலும் ஒரு மரம்கூட இல்லாத அந்தப் பொட்டல் காட்டில் ஒரு ஊஞ்சல் வைத்திருப்பார்கள். சறுக்கு மரம் இருக்கும். சன்பாத் எடுப்பதுபோல் ஒரு சிமென்ட் குடை இருக்கும். லே-அவுட்டின் நுழைவு வாயிலில் ஸ்டைலான ஆர்ச் இருக்கும். எதற்கு இதெல்லாம்?
''எல்லாம் உங்களை ஏமாத்தத்தான். டி.வி. விளம்பரம் அழகா வர்றதுக்காகக் கொண்டுவந்த செட்டப் இது. இப்போ நடுக் காட்டுக்குள்ள லே-அவுட் போட்டு அங்கேயும் கலர் கலராக் கொடிகளை நட்டுவைக்கிறாங்க!'' என்கிறார் அந்த நண்பர்.
இந்த லே-அவுட்கள் அனைத்தும் நகரத்தில் இருந்து பல கிலோ மீட்டர்கள் வெளியில்தான் இருக்கின்றன. பெரும்பாலான கல்லூரிகளும் சிட்டி லிமிட்டுக்கு வெளியில்தான் உள்ளன. உடனே, இவர்கள் 'வொய்டு ஆங்கிளில்’ கேமராவை வைத்து, 'பார்த்தீங்களா... ஜி.ஜி.ஜி. இன்ஜினீயரிங் காலேஜ் எவ்வளவு பக்கத்துல இருக்குனு?’ என்பார்கள். தூரத்தில் ரோட்டில் ஒரு பஸ் போகும். அதை ஜூம் செய்து, 'மெயின் ரோட்டுக்குப் பக்கத்துலயே உங்க இடம்’ என்று பின்னணிக் குரல் போகும். பஸ் போறதெல்லாம் சரி... அந்த இடத்துல நிக்குமா?
இன்னும் சில விளம்பரங்களில், 'நாம இப்போ இருக்கிறது திண்டிவனம் பஸ் ஸ்டாண்ட்ல’ என்று திண்டிவனம் பேருந்து நிலையத்தைக் காட்டுவார்கள். பிறகு, அந்தத் தொகுப்பாளர் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி, 'நம்ம சைட்டுக்கு ஷேர் ஆட்டோகூட இருக்கு’ என்பார். இறங்கியதும், 'பார்த்தீங்களா... மூணு கிலோ மீட்டர்தான். அஞ்சே நிமிஷத்துல வந்தாச்சு...’ என்று அடுத்த பிட்டைப் போடுவார். யாரும் இல்லாத ரோட்டில், அஞ்சு நிமிஷத்துல வர்றதுல என்ன பெரிய சிக்கல்?!
நான் சென்ற வேன், சில பல கிராமங்களை ஊடுருவிச் சென்றது. 'சாலவாக்கத்துல ஒரு பார்ட்டியை இறக்கிவிட்டுட்டுப் போயிருவோம்’ என்று எங்கெங்கோ கிராமங்களுக்குள் புகுந்து சென்றார் டிரைவர். பெய்யூர் என்ற பச்சைப் பசேல் கிராமத்தில் இன்னமும் முழு வேகத்தில் விவசாயம் நடக்கிறது. கொஞ்சமும் நகரத்துச் சாயல் இல்லை. அங்கு விவசாய நிலங்களுக்கு நடுவே 'டிரினிட்டி பார்க், கிரீன் சிட்டி அவென்யூ’ பெயர்ப் பலகைகள் எங்களை வரவேற்றன. அந்தப் பெயர்ப் பலகைகளுக்கு அருகிலேயே 'வாழ்ந்து காட்டுவோம்’ அறிவிப்புப் பலகை யாருக்கோ சவால்விடுகிறது.

மேல்மருவத்தூரில் ஒரு ஹோட்டலில் எல்லோருக்கும் லஞ்ச். லே-அவுட்டைப் பார்க்க வருபவர்களுக்கு போக்குவரத்துடன் சேர்த்து மதிய உணவும் இலவசம். பேச்சுலர்ஸ் பலர் ஞாயிற்றுக் கிழமைகளில் இன்பச் சுற்றுலாபோல இவர்களுடன் கிளம்பிவிடுகின்றனர். ஒரு நாள் ஜாலியாகக் கழிவதுடன் சாப்பாடும் இலவசம்.

எங்கள் வேன், மேல்மருவத்தூர் கோயிலுக்கு முன்பாக வலது புறம் திரும்பி உள்ளே நுழைந்தது. 'நம்ம சைட்டுக்குப் போற ரோடு இதுதான் சார். நாலே கிலோ மீட்டர்தான். அஞ்சு நிமிஷம்கூட ஆகாது’ என்று வேனில் இருப்பவர்களுக்குச் சொல்லிக்கொண்டே வருகிறார் புரோக்கர். வறண்ட பொட்டல்பூமியில் வளைந்து திரும்பி வேன் நின்றால், டி.வி-யில் பார்க்கும் நூற்றுக்கணக்கான லே-அவுட்டுகளின் அதே சாயல். ஊஞ்சல், சறுக்கு மரம், ஐ.நா. சபைக் கொடிகள் அனைத்தும் உண்டு.

'அந்தா பாருங்க... பக்கத்துலயே மெயின் ரோடு. இந்தா பாருங்க... இங்கேயே ஈ.பி. லைன்’ என, 'பாத்ரூம் குளிக்கலாம், பெட்ரூம் தூங்கலாம்’ மாதிரி சளைக்காமல் சொல்லிக்கொண்டே இருந்தார் புரோக்கர். லே-அவுட் பேப்பரை உற்றுப் பார்த்து யோசிப்பவர்களிடம், ''நம்ம சைட் எல்லாமே பக்கா டாக்குமென்ட் சார். ஒரிஜினல் பட்டா லேண்ட். நாங்களே வில்லங்கம் பார்த்துத் தருவோம். இடத்துக்கும் எந்தப் பிரச்னை யும் வராது. சுத்தியும் கம்பி வேலி போட்டிருக்கு பாருங்க...'' என்ற எக்ஸ்ட்ரா பிட்டுகளைப் போடுகிறார்.

ரியல் எஸ்டேட்காரர்களுக்கு இந்த வேலி, பஸ் போகும் ரோடு, பக்கத்திலேயே ரயில்வே ஸ்டேஷன், 30 அடியில் குடிநீர்... இதெல்லாம் அல்வா மாதிரி.
அந்தக் கிராமத்து மக்களோ தினமும் சர்சர்ரென கார்களில் வந்துபோகிறவர்களைக் கொஞ்சம் மிரட்சியோடும் கொஞ்சம் பரிதாபமாகவும் 'பலியாள்’போலப் பார்க்கிறார்கள். கடும் பில்டப்புடன் இடத்தைப் பார்க்க வருபவர்களுக்கு தங்கள் மனதில் இருந்த கற்பனை உடைந்துபோன ஏமாற்றம். வேறு சிலரோ தேர்ந்த அனுபவசாலிகள். ''எல்லா இடமும் பார்க்க இப்படித்தான் சார் இருக்கும். நாலு வருசத்துல எல்லாம் வளர்ந்துடும்'' என்கிறார் கௌரிவாக்கத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவி நிர்மலா. கணவரை வேலைக்கு அனுப்பிவைத்துவிட்டு இங்கு கிளம்பிவந்திருக்கிறார்.

''சுதாரிச்சுக்கணும் சார்... இப்பவே இந்த ரேட்டு சொல்றான். இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுப் பார்த்தா, வாங்குறதுக்கே இடம் இருக்காது'' என்கிறார் நிர்மலா. ரியல் எஸ்டேட் கம்பெனிகள் ஒரு லே-அவுட் முடிந்து இன்னொன்று, அது முடிந்து அடுத்தது எனப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். சென்னை மட்டும் அல்ல... தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் இதுதான் நிலைமை.
ஏதோ ஒரு மாய மந்திரம் நிகழ்ந்து 'படையப்பா’ ரஜினிபோல ஒரே பாடலில் கோடீஸ்வரன் ஆகி விடமாட்டோமா என்ற 'மிடில் கிளாஸ் மாதவன்’களின் நம்பிக்கையில், வாரக் கடைசிகளில் கலகலவென அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன ரியல் எஸ்டேட் இன்பச் சுற்றுலாக்கள்!

 NANDRI : ஆனந்த விகடனில் இருந்து...

உயிர்களின் ஆதாரமே தண்ணீர்... தண்ணீர்!

தண்ணீர்... தண்ணீர்!
உயிர்களின் ஆதாரமே தண்ணீர். மரமோ மனிதனோ... எதுவாக இருந்தாலும் இயக்கத்தின் உயிர்நாடி காற்றுக்கு அடுத்தபடியாக இருப்பது தண்ணீர்தான்.
மனித உடல் எடையில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் இருக்கிறது. சராசரி மனித எடையில் (70 கிலோ) தோராயமாக 42 லிட்டர் தண்ணீர் உள்ளதாக உடலியல் உலகம் சொல்கிறது. அதாவது மொத்த உடல் எடையில் தண்ணீரின் அளவானது 60 சதவிகிதம். ஆனாலும், திசுக்களுக்குத் திசு தண்ணீரின் அளவு மாறுபடும்.

அதிகபட்சமாக ரத்தத்தின் திரவப் பகுதியான பிளாஸ்மாவில் 93 சதவிகிதத் தண்ணீரும் குறைந்தபட்சமாக எலும்பில் 20 சதவிகிதத் தண்ணீரும் உள்ளது. மூளையில் 70 சதவிகிதம், தசைகளில் 75 சதவிகிதம், இதயத்தில் 75 சதவிகிதம், நுரையீரலில் 75 முதல் 80 சதவிகிதம். ஆணின் தோலில் 60 சதவிகிதமும் பெண்ணின் தோலில் 57 சதவிகிதமும் தண்ணீர் உள்ளது. உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறையும்போது அது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும்.
மூளையில் உள்ள 70 சதவிகிதத் தண்ணீரில் ஒரு சதவீதம் குறைந்தால்கூட, மனச் சோர்வு, ஒற்றைத் தலைவலி போன்ற பாதிப்புகள் வரும். ரத்தத்தில் தண்ணீர் அளவு குறையும்போது அதில் உள்ள அணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு மூளையில் அடைப்பை ஏற்படுத்தலாம். இதை சாஜிட்டல் சைனஸ் த்ராம்போசிஸ் என்று கூறுவோம். தசைகளில் தண்ணீர் அளவு குறையும்போது, உடல் வலி, தோல் சுருங்குதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மேலும் ரத்த அழுத்தக் குறைவு, சிறுநீரகப் பாதிப்பு, சிறுநீரகத்தில் கல் உருவாதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். 20 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் குறையும்போது உயிரிழப்பு அபாயம்கூட நேரிடலாம்.

ஒருவர் எந்த வேலையும் செய்யாமல் இருந்தாலும்கூட மூச்சை இழுத்து வெளியே விடுவதன் மூலமும் தோலில் இருந்தும் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 800 மி.லி. தண்ணீர் பயன்படுத்தப்பட்டுவிடும். இதைத் தவிர, வியர்வை மூலம் 100 மி.லி., சிறுநீர் மூலம் குறைந்தபட்சம் 500 மி.லி., மலம் மூலம் 200 மி.லி. தண்ணீர் வெளியேறுகிறது. ஆக, எந்த வேலையும் செய்யாமல் இருந்தால்கூட 1600 மி.லி. தண்ணீர் நம் உடலைவிட்டு வெளியேறிவிடும்.

இதேபோல், வளர்சிதை மாற்றங்கள் காரணமாக நம் உடலில் 400 மி.லி. அளவுக்குத் தண்ணீர் உற்பத்தி ஆகிறது.

ஆக்சிஜனை திசுக்களின் உள்ளே செலுத்துவதற்கும் உயிர்ச் சத்தை உறிந்துகொள்வதற்கும் தண்ணீரின் பங்கு மிக முக்கியம். உணவில் உள்ள நச்சுப்பொருட்களை நீர்த்துப்போகச் செய்வதுடன், மனத்தளர்வு, மனச்சோர்வையும் போக்குகிறது தண்ணீர். மூளையில் மகிழ்ச்சியான நிலையை ஏற்படுத்தும் 'செரோடோனின்’ என்ற நியூரோ டிரான்ஸ்மீட்டரை ஊக்குவிக்கிறது.

'மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் இரவு வேளை வந்ததும் தூங்குவதற்கான மனநிலையை ஏற்படுத்தும். உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது இந்த ஹார்மோனின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, தூக்கமின்மை பிரச்னை தலை தூக்கும்.

உடலுக்குப் போதுமான அளவில் தண் ணீர் கிடைக்காதபோது, உடல் தானாகவே தேவையைக் குறைத்துக்கொள்ளும். அதன் வெளிப்பாடாக சிறுநீர் வெளியேறுவது குறைந்துவிடும். சிறுநீர் கழிக்கும்போது கடுகடுப்பு, அடர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாகவோ சிறுநீர் பிரிதல், அதிகத் தாகம், பசி, சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால், உடலில் தண்ணீர் அளவு குறைந்துள்ளதாக அறியலாம்.

காலையில் தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும். ஒற்றைத் தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலியும் குறையும். மலச் சிக்கல் ஏற்படாமல் தடுக்கப்படும். தோலில் சுருக்கம் மறையும். வேலை செய்வதற்கான அதிகத் திறனைக் கூட்டவும் தண்ணீருக்கு நிகர் வேறு இல்லை. பாக்டீரியா கிருமிகளை வேகமாக வெளியேற்றி, சிறுநீரகத் தொற்று, கல் வராமல் தடுக்கும். குடல் மற்றும் நீர்ப் பையில் ஏற்படும் புற்றுநோய்க் காரணிகளை நீர்த்துப்போகச் செய்து அதன் வீரியத்தைக் குறைக்கும்.

குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. இந்த அளவுக்கும் மேலாகத் தண்ணீர் குடித்தால், சிறுநீரகத்துக்குப் பாதிப்பு ஏற்படும். ஒரே நேரத்தில் மொத்தமாக இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடித்தால், உடலில் தண்ணீரின் அளவு அதிகமாகி, ரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவு குறைந்து, ரத்த நாளங்கள் சுருங்குதல், அடைப்பு ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் உருவாகும். எனவே, இடைவெளி விட்டு தண்ணீர் குடிப்பதே நலம்!