Tuesday 9 July 2013

ரியல் எஸ்டேட் டூர் போலாமா?



சென்னைக்கு மிக அருகில் திண்டிவனமும் மிகமிக அருகில் பாண்டிச்சேரியும் இருப்பது ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் சொல்லித் தெரிந்திருக்கும் உங்களுக்கு. மத்தியான நேரத்தில் (அதுகூடப் பரவாஇல்லைங்க...

சமயங்களில் நள்ளிரவில்கூட!) டி.வி-யைத் திருப்பினால்... சீரியல் நடிகைகள் ஹெவி மேக்கப்பில் வந்து, 'இந்த இடம் தாம்பரத்துலேர்ந்து தாண்டிப்போற தூரம்தான், வந்தவாசியில் இருந்து வாக்கபிள் டிஸ்டன்ஸ்தான்’ என்று குளோஸப் கேன்வாஸ் செய்வார்களே... அதே விளம்பரங்கள்தான்.
கூடுவாஞ்சேரி தொடங்கி திண்டிவனம் வரை சாலையின் எந்தப் பக்கம் திரும்பி னாலும் பளபளப்பான ரியல் எஸ்டேட் சைட்டுகள் மின்னுகின்றன.

'ஹைவேஸ் சிட்டி’, 'செந்தமிழ் நகர்’, 'குமரன் நகர்’, 'ஜே.கே. கார்டன்’ என மானாவாரி நிலங்களை பிளாட் பிரித்து மானாவாரியாகப் பெயர் வைத்திருக்கின்றனர். ஐ.நா. சபை அலுவலகம் ரேஞ்சுக்கு கலர் கலர் கொடி கள் வேறு. ஹாலோ பிளாக் சுவர்களில் ஃப்ளோரசன்ட் பெயின்ட் கண்களைப் பறிக்கிறது. வெயில் பிளக்கும் மத்தியான நேரத்தில் டெம்போ டிராவலரில் வந்து இறங்குகிறது மக்கள் கூட்டம். ''இடம் எல்லாம் நல்லாதான் இருக்கு.

ஆனா, சுத்தி நாலஞ்சு கிலோ மீட்டருக்கு ஒரு குடிசை யைக்கூடக் காணலையே... டெவலப் ஆகுமா?'' என கூல் டிரிங்க்ஸை உறிஞ்சிய படியே கணக்குப் போடுகின்றனர். என்னதான் நடக்கும் அந்த ரியல் எஸ்டேட் சைட் சீயிங்கில்?

'சைட்டைப் பார்வையிட எங்கள் குரோம்பேட்டை அலுவலகத்தில் இருந்து தினந்தோறும் வாகன வசதி உண்டு’ - என்ற விளம்பரத்தைப் பார்த்து, நம்பரை டயல் செய்தேன். ''அந்த வெல்கம் சிட்டி சைட்டுங்களா, அது முடிஞ்சிருச்சே... ஒரே ஒரு கார்னர் பிளாட் மட்டும்தான் இருக்கு. ஸ்கொயர் ஃபீட் 170 ரூபாய். அதுக்குப் பக்கத்துலயே இன்னொரு லே-அவுட் போட்டிருக்கோம்.

ரெண்டையுமே பார்க்கலாம். நாளைக்குக் காலையிலயே வந்துடுங்க!''- சொன்னதோடு நிற்காமல், அடுத்த நாள் காலை எட்டு மணிக்கே போன் செய்து நினைவூட்டினார். 'வாங்குறவனைவிட விக்கிறவன் சுறுசுறுப்பா இருக்கானே’ என யோசித்தபடி குரோம்பேட்டை அலுவலகம் சென்றால், அங்கு ரேஷன் கடைக் கூட்டம்.

வந்திருந்தவர்களில் சரிபாதிப் பேர் வெல்கம் சிட்டியில் இடம் வாங்கி, அன்று வெள்ளிக்கிழமை என்பதால் பத்திரப் பதிவு செய்ய வந்தவர்கள். மீதிப் பேர் இடம் வாங்க வந்தவர்கள்.

எல்லோருடைய முகங்களிலும் குழப்பம், மகிழ்ச்சி, டென்ஷன், கவலை எனக் கலவையான உணர்ச்சிகள். மனைவி, குழந்தையோடு வந்திருந்தவரைப் பார்த்துச் சிரித்தேன். அவருக்கு என்ன புரிந்ததோ... ''அப்புறம் இவளுக்கு இடத்தைக் காட்ட இன்னொரு தடவை போகணும். அடிக்கடி போயிட்டு வர இடம் என்ன பக்கத்துலயா இருக்கு? இங்கேருந்து மேல்மருவத்தூர் போகணும்ல...'' என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

''மேல்மருவத்தூரா... எது?
'சென்னைக்கு மிக அருகில்’ இருக்கே அதுவா?'' என்றதும் அதற்கும் சிரித்தார்.

''அதுக்கு என்ன சார் பண்றது? நாம என்ன அடையாறுலயா இடம் வாங்க முடியும்? இருக்குற ரெண்டு, மூணு லட்சத்துக்கு அங்கேதான் போகணும். விலை ஏறுனா சரி!'' என்றார். ஏறும் என்று நினைத்துதான் இத்தனை பேரும் கிளம்பி வந்திருக்கிறார்கள். ஆனாலும் நடுத்தரவர்க்க பிராண்ட் பயம் விலகவில்லை.

சினிமா முடிந்து வெளியே வருபவர்களிடம், 'படம் எப்படி?’ எனக் கேட்பதுபோல... ஏற்கெனவே இடம் வாங்கியவர்களிடம் 'இடம் எப்படி?’ என்று விசாரணையைப் போடுகின்றனர். அவர் என்னத்த சொல்வார்... ''ஆமாங்க... ரேட் ஏறும்னு சொல்றாங்க. பக்கத்துலயே புதுசா காலேஜ் ஒண்ணு வரப்போகுதாம்ல!'' என அவர் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் ஆறுதல் அவர்களுக்கும் ஆறுதலாக இருக்கிறது.

சென்னைக்குப் பக்கத்து மாவட்டங்களில் 10 ஏக்கர், 20 ஏக்கர் என மொத்தமாக நிலத்தை வாங்கி, அதை பிளாட் பிரித்து 'ஹை ஸ்டைல் கார்டன்’, 'நியூ சிட்டி அவென்யூ’ என்று பெயர்வைத்து விற்கின்றனர். இந்த இடத்தைப் பார்வையிட ஒவ்வொரு நாளும் நகரத்தில் இருக்கும் அவர்களது அலுவலகத்தில் இருந்து இலவசமாக அழைத்துச் செல்கின்றனர். இதற்காகவே டெம்போ டிராவலர் வேன்களை வாங்கி வைத்துள்ளனர். திருவள்ளூர் பக்கம் லே-அவுட் போட்டிருப்பவர்கள், வாடிக்கையாளர்களை மின்சார ரயிலில் அழைத்துப்போகிறார்கள்.

வந்திருந்த குரூப்பை இரண்டாகப் பிரித்து பத்திரப் பதிவுக்குப் பாதியையும், இடத்தைப் பார்க்க மீதியையும் அனுப்பிவைத்தார்கள். வேனில் ஏறி 10 நிமிடம்கூட இருக்காது. உள்ளே இருந்த டி.வி-யில் ஒரு சீரியல் நடிகை வந்து 'பாருங்க... இந்த இடம் ஹைவேஸுக்கு எவ்வளவு பக்கத்துல இருக்குனு...’ என்று பேச ஆரம்பித்தார். ஒரு பாட்டு. மறுபடியும் அந்த விளம்பரம். இரண்டு மணி நேரத்துக்கு இதையே 'ரிப்பீட்’ ரிவிட் அடித்தார்கள்.
இந்த ரியல் எஸ்டேட் டி.வி. விளம்பரங்கள் கொடுமையிலும் கொடுமை. அதில் கேமராமேனாகப் பணிபுரியும் நண்பர் ஒருவர், ''போன வாரம் திருத்தணி பக்கம் ஒரு ஷூட். டி.வி. நடிகர் சஞ்சீவ்தான் ஆங்கர். மொத்தம் 5 டிஜிட்டல் கேமரா, 10 பார் லைட் செட்டப். ஜிம்மி ஜிப் வேற. சினிமா ஷூட்டிங்குக்கே இவ்வளவு பிரமாண்டம் இருக்காது. அன்னைக்கு ஒரு நாள் செலவு மட்டும் 15 லட்ச ரூபாய்!'' என்று மலைக்கவைத்தார். ஆள் இல்லாத வனாந்திரத்துக்குள் நாலு கல்லை நட்டுவைத்து, 1,200 சதுர அடி ரூபாய் 2 லட்சம் என்று விற்று இதைச் சம்பாதிக்கிறார்கள்.

அதிலும் ஒரு மரம்கூட இல்லாத அந்தப் பொட்டல் காட்டில் ஒரு ஊஞ்சல் வைத்திருப்பார்கள். சறுக்கு மரம் இருக்கும். சன்பாத் எடுப்பதுபோல் ஒரு சிமென்ட் குடை இருக்கும். லே-அவுட்டின் நுழைவு வாயிலில் ஸ்டைலான ஆர்ச் இருக்கும். எதற்கு இதெல்லாம்?
''எல்லாம் உங்களை ஏமாத்தத்தான். டி.வி. விளம்பரம் அழகா வர்றதுக்காகக் கொண்டுவந்த செட்டப் இது. இப்போ நடுக் காட்டுக்குள்ள லே-அவுட் போட்டு அங்கேயும் கலர் கலராக் கொடிகளை நட்டுவைக்கிறாங்க!'' என்கிறார் அந்த நண்பர்.
இந்த லே-அவுட்கள் அனைத்தும் நகரத்தில் இருந்து பல கிலோ மீட்டர்கள் வெளியில்தான் இருக்கின்றன. பெரும்பாலான கல்லூரிகளும் சிட்டி லிமிட்டுக்கு வெளியில்தான் உள்ளன. உடனே, இவர்கள் 'வொய்டு ஆங்கிளில்’ கேமராவை வைத்து, 'பார்த்தீங்களா... ஜி.ஜி.ஜி. இன்ஜினீயரிங் காலேஜ் எவ்வளவு பக்கத்துல இருக்குனு?’ என்பார்கள். தூரத்தில் ரோட்டில் ஒரு பஸ் போகும். அதை ஜூம் செய்து, 'மெயின் ரோட்டுக்குப் பக்கத்துலயே உங்க இடம்’ என்று பின்னணிக் குரல் போகும். பஸ் போறதெல்லாம் சரி... அந்த இடத்துல நிக்குமா?
இன்னும் சில விளம்பரங்களில், 'நாம இப்போ இருக்கிறது திண்டிவனம் பஸ் ஸ்டாண்ட்ல’ என்று திண்டிவனம் பேருந்து நிலையத்தைக் காட்டுவார்கள். பிறகு, அந்தத் தொகுப்பாளர் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி, 'நம்ம சைட்டுக்கு ஷேர் ஆட்டோகூட இருக்கு’ என்பார். இறங்கியதும், 'பார்த்தீங்களா... மூணு கிலோ மீட்டர்தான். அஞ்சே நிமிஷத்துல வந்தாச்சு...’ என்று அடுத்த பிட்டைப் போடுவார். யாரும் இல்லாத ரோட்டில், அஞ்சு நிமிஷத்துல வர்றதுல என்ன பெரிய சிக்கல்?!
நான் சென்ற வேன், சில பல கிராமங்களை ஊடுருவிச் சென்றது. 'சாலவாக்கத்துல ஒரு பார்ட்டியை இறக்கிவிட்டுட்டுப் போயிருவோம்’ என்று எங்கெங்கோ கிராமங்களுக்குள் புகுந்து சென்றார் டிரைவர். பெய்யூர் என்ற பச்சைப் பசேல் கிராமத்தில் இன்னமும் முழு வேகத்தில் விவசாயம் நடக்கிறது. கொஞ்சமும் நகரத்துச் சாயல் இல்லை. அங்கு விவசாய நிலங்களுக்கு நடுவே 'டிரினிட்டி பார்க், கிரீன் சிட்டி அவென்யூ’ பெயர்ப் பலகைகள் எங்களை வரவேற்றன. அந்தப் பெயர்ப் பலகைகளுக்கு அருகிலேயே 'வாழ்ந்து காட்டுவோம்’ அறிவிப்புப் பலகை யாருக்கோ சவால்விடுகிறது.

மேல்மருவத்தூரில் ஒரு ஹோட்டலில் எல்லோருக்கும் லஞ்ச். லே-அவுட்டைப் பார்க்க வருபவர்களுக்கு போக்குவரத்துடன் சேர்த்து மதிய உணவும் இலவசம். பேச்சுலர்ஸ் பலர் ஞாயிற்றுக் கிழமைகளில் இன்பச் சுற்றுலாபோல இவர்களுடன் கிளம்பிவிடுகின்றனர். ஒரு நாள் ஜாலியாகக் கழிவதுடன் சாப்பாடும் இலவசம்.

எங்கள் வேன், மேல்மருவத்தூர் கோயிலுக்கு முன்பாக வலது புறம் திரும்பி உள்ளே நுழைந்தது. 'நம்ம சைட்டுக்குப் போற ரோடு இதுதான் சார். நாலே கிலோ மீட்டர்தான். அஞ்சு நிமிஷம்கூட ஆகாது’ என்று வேனில் இருப்பவர்களுக்குச் சொல்லிக்கொண்டே வருகிறார் புரோக்கர். வறண்ட பொட்டல்பூமியில் வளைந்து திரும்பி வேன் நின்றால், டி.வி-யில் பார்க்கும் நூற்றுக்கணக்கான லே-அவுட்டுகளின் அதே சாயல். ஊஞ்சல், சறுக்கு மரம், ஐ.நா. சபைக் கொடிகள் அனைத்தும் உண்டு.

'அந்தா பாருங்க... பக்கத்துலயே மெயின் ரோடு. இந்தா பாருங்க... இங்கேயே ஈ.பி. லைன்’ என, 'பாத்ரூம் குளிக்கலாம், பெட்ரூம் தூங்கலாம்’ மாதிரி சளைக்காமல் சொல்லிக்கொண்டே இருந்தார் புரோக்கர். லே-அவுட் பேப்பரை உற்றுப் பார்த்து யோசிப்பவர்களிடம், ''நம்ம சைட் எல்லாமே பக்கா டாக்குமென்ட் சார். ஒரிஜினல் பட்டா லேண்ட். நாங்களே வில்லங்கம் பார்த்துத் தருவோம். இடத்துக்கும் எந்தப் பிரச்னை யும் வராது. சுத்தியும் கம்பி வேலி போட்டிருக்கு பாருங்க...'' என்ற எக்ஸ்ட்ரா பிட்டுகளைப் போடுகிறார்.

ரியல் எஸ்டேட்காரர்களுக்கு இந்த வேலி, பஸ் போகும் ரோடு, பக்கத்திலேயே ரயில்வே ஸ்டேஷன், 30 அடியில் குடிநீர்... இதெல்லாம் அல்வா மாதிரி.
அந்தக் கிராமத்து மக்களோ தினமும் சர்சர்ரென கார்களில் வந்துபோகிறவர்களைக் கொஞ்சம் மிரட்சியோடும் கொஞ்சம் பரிதாபமாகவும் 'பலியாள்’போலப் பார்க்கிறார்கள். கடும் பில்டப்புடன் இடத்தைப் பார்க்க வருபவர்களுக்கு தங்கள் மனதில் இருந்த கற்பனை உடைந்துபோன ஏமாற்றம். வேறு சிலரோ தேர்ந்த அனுபவசாலிகள். ''எல்லா இடமும் பார்க்க இப்படித்தான் சார் இருக்கும். நாலு வருசத்துல எல்லாம் வளர்ந்துடும்'' என்கிறார் கௌரிவாக்கத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவி நிர்மலா. கணவரை வேலைக்கு அனுப்பிவைத்துவிட்டு இங்கு கிளம்பிவந்திருக்கிறார்.

''சுதாரிச்சுக்கணும் சார்... இப்பவே இந்த ரேட்டு சொல்றான். இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுப் பார்த்தா, வாங்குறதுக்கே இடம் இருக்காது'' என்கிறார் நிர்மலா. ரியல் எஸ்டேட் கம்பெனிகள் ஒரு லே-அவுட் முடிந்து இன்னொன்று, அது முடிந்து அடுத்தது எனப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். சென்னை மட்டும் அல்ல... தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் இதுதான் நிலைமை.
ஏதோ ஒரு மாய மந்திரம் நிகழ்ந்து 'படையப்பா’ ரஜினிபோல ஒரே பாடலில் கோடீஸ்வரன் ஆகி விடமாட்டோமா என்ற 'மிடில் கிளாஸ் மாதவன்’களின் நம்பிக்கையில், வாரக் கடைசிகளில் கலகலவென அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன ரியல் எஸ்டேட் இன்பச் சுற்றுலாக்கள்!

 NANDRI : ஆனந்த விகடனில் இருந்து...

No comments:

Post a Comment