Monday 22 July 2013

மனைவியின் உள்ளம், மங்காத செல்வம்!


வீட்டினுள் காரை பார்க் செய்துவிட்டு பரத்... ஒரு வித யோசனையும் சோர்வுமாக, உள்ளே வந்தான். சூட்கேசை, ஒரு நாற்காலியில் கிடத்தி, மற்றொரு சேரில் கால் தளர்த்தி, ரிலாக்சாக அமர்ந்தான்.
கணவனின் வருகை தெரிந்து, மின்விசிறியை முழுவீச்சில் சுற்ற விட்டாள் லஷ்மி; பரத்தின் மனைவி.
பொதுவாக, இதுபோன்று வெளியிலிருந்து வரும் பரத், பத்து நிமிடமாவது ஒய்வெடுத்த பின் தான், பேசுவான். தொடர்ந்து காபி, டிபன் வந்தவுடன் சாப்பிட ஆரம்பிப்பான். அது தெரிந்து லஷ்மியும் அமைதியாக, எதிர்புறம் அமர்ந்து வழக்கம் போல, தன் கணவனை ரசிக்க ஆரம்பித்தாள்.
அவர்களுக்கு திருமணமாகி, இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தது. குழந்தை பெற்றுக் கொள்வதை பரத் தள்ளி போட விரும்பிய போது, லஷ்மி மறுப்பேதும் சொல்லவில்லை. காரணம், கணவனை நம்பி, தன் வாழ்க்கையை ஒப்படைத்த பின், அந்த வாழ்க்கை வாகனத்தை, ஒருவரே ஒட்டி செல்வது தானே உத்தமம். இது அவளது அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும், கணவன் மனம் கோணாது நடக்க வேண்டும் என்ற, பெற்றோரின் அறிவுரையும் ஒரு காரணம்.
இன்று மேலும், பத்து நிமிடங்கள் கழித்தே சோர்விலிருந்து கண்விழித்தான் பரத். எதிரில் லஷ்மி. இந்த காலத்தில், இப்படி ஒரு பெண்! கட்டுப்பாட்டுடன் வளர்ந்து... நாகரிகத்தின் வெளிச்சங்களை பார்க்காத பெண். பரத்திற்கு பெரிதாக லஷ்மி மீது, முன்பு ஈர்ப்பு இருந்ததில்லை. நன்றிக்கடன் என்று கூறி, அப்பாவின் வற்புறுத்தலுக்கு தலையாட்டிய தன்னை, லஷ்மி இப்படி அன்பால் கட்டிப்போடுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. அதே நேரம் அரசியல், விளையாட்டு, விஞ்ஞானம் என்ற விஷயங்களில் உட்புகுந்து விவாதம் செய்து, கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளும் அளவிற்கு, பரத்திற்கு லஷ்மி ஏற்றவள் இல்லை என்பதும் உண்மையே.
""என்னங்க ரொம்ப சிந்தனையா இருக்கீங்க?'' லஷ்மி .
சிரித்தான் பரத். தன் பிரச்னையை, இவளிடம் சொன்னால், இவளால் தீர்க்க முடியுமா... ""போய் டிபன் கொண்டா.''
இடியாப்பமும், குருமாவும் வர... எழுந்து கை கழுவி வந்து, இரண்டு வாய் சாப்பிட்டிருப்பான்...
""லஷ்மி... எனக்கு, நான் வேலை பாக்கிற கம்பெனி எவ்வளவு முக்கியம்ன்னு உனக்கு தெரியுமில்ல,'' என்று கேட்டான்.
""நல்லா தெரியும்ங்க.''
""வெளிநாட்டு கம்பெனியாக இருந்தாலும், மாசம் இரண்டு லட்சம், இந்தியாவிலேயே தர்றான்.''
""தெரியும்ங்க.''
""மொத்தம் இந்தியாவுல உள்ள எட்டு பிராஞ்ச்ல... இங்க சென்னையில் உள்ள பிராஞ்ச்க்கு, நான் தான் ஹெட்.''
""நல்லா தெரியும்ங்க.''
""இப்ப... அதவிட பெரிய சான்ஸ் வந்திருக்கு லஷ்மி இதுல நான் ஜெயிச்சா... பெரிய புராஜெக்ட் என் கைக்கு வரும். ஆனா, அது முடியாது போலிருக்கு லஷ்மி.''
சற்று விரக்தியாக சொல்ல, லஷ்மி, ""ஏங்க முடியாது... நீங்க டபுள் டிகிரி வாங்கியிருக்கீங்க, நல்லா இங்கிலிஷ் பேசறீங்க. இந்த ஆபீசை ரெண்டு வருஷமா நடத்தறீங்க... பாக்க ராஜாவாட்டம் இருக்கீங்க, நீங்க ஏன் ஜெயிக்க முடியாது!'' என்றாள்.
அவளது தலையை அன்பாக தடவிய பரத். அவளுக்கு, தன் மேல் இருக்கும் நம்பிக்கையை நினைத்து பெருமை கொண்டான்.
""நீ சொல்றது சரி தான் லஷ்மி... ஆனா, என் கம்பெனியோட ஆல் ஓவர் ஹெட், நியூயார்க்ல இருக்கு... அவங்க நாகரிகத்தின் உச்சம். அவங்க, எனக்கு ஒரு பெரிய புராஜெக்ட் கொடுத்து... இந்தியாவுக்கே தலைமையா நியமிக்கணும்ன்னா... அதுக்கு சில திறமைகளை எதிர்பார்ப்பாங்க. அதுல நீ சொல்றத விட, வேற நெறய எதிர்பார்ப்பாங்க... அது எனக்கு இல்ல லஷ்மி.''
லஷ்மி புரியாமல் பார்க்க, தொடர்ந்தான் பரத், ""ஆமாம் லஷ்மி... அவங்களுக்கு என்னோட குடும்ப நிலையும் முக்கியம். குழந்தை இல்லாதது பிளஸ் பாய்ன்ட். ஆனா, என்னோட லைப் பார்ட்னர்; அது தான் நீ... இன்னும் மாடர்னா, ஸ்மார்ட்டா இருக்கணும்ன்னு எதிர்பார்ப்பாங்க.''
மேலும் குழப்பமானது லஷ்மிக்கு.
""ஏங்க, என்னங்க பேசறீங்க... நான் எப்படி இருந்தா உங்க கம்பெனிக்கு என்னங்க? நீங்க ஒழுங்கா வேல பார்த்தா போதாது?''
வாய்விட்டு சிரித்தான் பரத்.
""இதான்... இங்கதான் நீ கட்டுபெட்டின்னு நிரூபிக்கிற. என் வேலை தான் முக்கியம்ன்னா, அப்புறம் ஏன் இந்த ஷூ, பேன்ட், டை எல்லாம்... ம்... அதான் கம்பெனியோட டிரஸ்கோட், சில ரூல்ஸ், சில பார்மாலிட்டிஸ், இதுல எல்லாம் அவங்க ரொம்ப கவனமா இருப்பாங்க. இப்ப என்னோட, இந்த விஷயத்த எடுத்துக்க, டில்லில அடுத்த வாரம், ஒரு பெரிய பார்ட்டி இருக்கு... இதுக்கு எங்க பிரசிடென்ட் மிஸ்டர் பிரடெரிக்ன்னு ஒருத்தர் வருவாரு. அங்க இந்தியாவுல உள்ள எட்டு பிராஞ்ச்லிருந்தும், எம்.டி., எல்லாம், தம்பதிகளாத் தான் வருவாங்க; வரணும். எங்களுக்குள்ள ஒரு சின்ன போட்டி, சின்ன இன்டர்வியூ... இதுல எந்த ஜோடி ஸ்கோர் செய்றாங்களோ, அவங்களுக்கு ஒரு புது புராஜெக்ட், பிரசிடென்ட் தருவாரு. அதோட வேல்யு, ஆயிரத்து நூறு கோடி. மேலும், அத வாங்கினவங்க இங்க, "சீப்' ஆய்டுவாங்க. அதுக்கப்புறம் வளர்ச்சி ஓ... காட்... எங்கேயோ போய்டும். பட், நான் உன்னை அழைச்சுக்கிட்டு போய், அத சாதிக்க முடியும்ன்னு தோணல.''
பரத்தின் குரலில் இயலாமை தெரிந்தது. இப்போது லஷ்மிக்கு ஓரளவு புரிந்தது. ஆனாலும், குழந்தை போல் கேட்டாள்...
""ஏங்க... இன்னும் ஒரு வாரம் இருக்கே, நான் கொஞ்சம் மாற முடியாதா ?''
மறுபடியும் சிரித்தான் பரத்.
""என்ன லஷ்மி, விளையாடறியா? மொதல்ல உன் கூந்தல வெட்டிக்கணும்; முடியுமா சொல்லு.''
""என்னது... புருஷன் உயிரோட இருக்கும் போது முடி வெட்டிக்கணுமா,'' என்று பதறினாள் லஷ்மி.
""சரி விடு. லஷ்மி... வாழ்க்கையில சில விஷயங்கள, நாம இழந்து தான் ஆகணும்,'' என்று சொல்லிய பரத், விடு விடுவென்று டிபனை சாப்பிட ஆரம்பித்தான்.
வேதனையில் ஆழ்ந்தாள் லஷ்மி. எல்லா விஷயத்திலும், குறை வைக்க கூடாதென்று இருக்கும் போது, ஏன்... இந்த பிரச்னையில் தன்னால் பரத்திற்கு ஈடாக இருக்க முடியவில்லை? மாடர்ன் டிரஸ் போட்டு, உயரமான செருப்பு போட்டு, பவுடர் லிப்ஸ்டிக்கை அப்பி, வெளிநாட்டு ஆங்கில உச்சரிப்போடு, இதெல்லாம் நடக்கவே வாய்ப்பில்லை என்பது கண்கூடாக தெரிந்தது.
இரவு பரத் தூங்கியபின்னும், லஷ்மி தூங்கவில்லை. ஊரில் அப்பாவிடம் போன் பேசலாமா என்று கூட யோசித்தாள். அப்பாவால் பெரிதாக என்ன செய்ய முடியும் என்றும் தோன்றியது.
சில நாட்களுக்கு பிறகு, ஒரு இரவு வேளையில் லஷ்மி, பரத்திடம் வந்தாள்.
""ஏங்க உங்களுக்கு தாங்க அந்த புராஜெக்ட்... இது உறுதிங்க.''
""என்ன சொல்ற?'' புரியாமல் கேட்டான் பரத்.
""ஆனா, நான் சொல்றபடி நீங்க கேக்கணும்... கேட்டா நீங்க கண்டிப்பா நம்பர் ஒண்ணா வருவீங்க.''
புதிர் போட்டாள் லஷ்மி .
சுவாரசியமாக தன் மனைவியை பார்த்த பரத், ""சொல்லு... என்ன செய்யணும்?'' என்று கேட்டான்.
""பொதுவா பார்ட்டிக்கு, நீங்க, உங்க ஜோடியோட வரணும்ன்னு தான் எதிர்பார்ப்பாங்க... கண்டிப்பா மனைவி தான் வரணும்ன்னு சொல்ல மாட்டாங்க இல்லியா? ஒரு பார்ட்னர், அது, லவ்வராவும் இருக்கலாம். இல்லியா? அதுமாதிரி... நீங்க ஏங்க ஒரு அழகான பெண்ணை பார்ட்னர்ன்னு, கூட கூட்டிகிட்டு போகக் கூடாது? யாராவது குறிப்பா, இது உன் மனைவியான்னு கேட்டா கூட, இப்ப "லவ்' செய்றேன் கூடிய சீக்கரம் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்னு சொல்லிடுங்க. என்ன... ஒரு ரெண்டு நாளைக்கு, உங்க மனைவியா நடிக்க ஒருத்திய ஏற்பாடு செய்துகிட்டா, நீங்க நெனச்சது ஏங்க நடக்காது?''
லஷ்மி சொல்ல, பரத் அதிர்ந்தான்... லஷ்மியா இந்த யோசனை சொல்கிறாள் என்று. பெண்கள் விளையாட்டுக்கு கூட, தன் கணவனை விட்டு தரமாட்டார்களே!
""என்ன யோசிக்கறீங்கன்னு எனக்கு புரியுதுங்க, இன்னொரு பொண்ண எப்படி புருஷன் கூட, ஒரு மனைவி இணைச்சு பாப்பான்னு தானே? எனக்கு உங்க எதிர்காலம் முக்கியம்ங்க. மேலும், எம்மேல காட்டுற அன்ப யாராலும் பங்கு போட்டுக்க முடியாது. அந்த அளவுக்கு உங்கமேல நம்பிக்கை உண்டு... நீங்க நல்லா யோசிச்சு முடிவு செய்ங்க.
""உங்களுக்கு ஜோடியாக, ஒருத்திய நடிக்க சொல்லலாம்... எனக்கு எந்த வருத்தமுமில்லை. நீங்க தயங்காதீங்க. போட்டி, டில்லில நடக்க போவுது, உங்க ஆபீசுக்கு தெரிய சான்ஸ் இல்ல. கூடிய வரைக்கும் போட்டோ எடுக்க வேண்டாம்ன்னு சொல்லிடுங்க... நானும் உங்க கூட டில்லி வர்றேன். ஆனா பார்ட்டிக்கு, அவள கூட்டிக்கிட்டு போங்க, பயப்படாதீங்க. என் யோசனை சரியா வருமா?''
நம்பிக்கையோடு கேட்டாள் லஷ்மி.
இப்போது, அதிர்விலிருந்து ஆச்சரியமானான் பரத் . இது நடந்தால், ரிசல்ட்டும் சாத்தியம் தான். பாரின் டீமிற்கு, ஒரு பார்ட்னர் போதும். அவள்... மனைவியா என்று துருவி ஆராயமாட்டார்கள். பேருக்கு ஒருத்திய காட்டி, புராஜெக்டை பெறலாம். வாடகைக்கு அழகான பெண்கள் கிடைப்பரா?
தன் சந்தேகத்தை லஷ்மியிடம் கேட்டான்.
""நீ சொல்றபடி, உன்னோட தியாகத்துல, ஒரு ரெண்டு நாளைக்கு இன்னொருத்திய ஏற்பாடு செஞ்சுக்கலாம் லஷ்மி... ஆனா, அவ... அழகா இருந்தா மட்டும் போறாது. புத்திசாலியா, மாடர்னா இருக்கணும்... அதுமாதிரி யாரு கிடைப்பாங்க?''
உடனே லஷ்மி... அருகிலிருந்த மேஜையின் டிராயரை இழுத்தாள். அதில் இருந்த ஒரு போட்டோவ எடுத்து, தன் கணவரிடம் காட்டி, "இத பாருங்க, உங்களுக்கு புடிச்சிருக்கா?' என்றாள். லஷ்மி காட்டிய, அந்த போட்டோவில் இருந்த பெண், மாடர்ன் டிரஸ்சில் மிக மிக அழகாக இருந்தாள். பரத் தன்னையுமறியாமல், வாய் பிளந்தான்.
""அட, பாத்தது போதும்ங்க,'' லஷ்மி உலுக்க, பரத் அவளைப் பார்த்து. ""யார் இது?'' என்றான்.
""என்னோட ஸ்கூல்ல படிச்சவ, பேரு டெய்சி. ஸ்கூல் முடிச்சப்புறம், "டச்' விட்டுப் போச்சுங்க. கடைசியா ஊருக்கு போனப்ப, அவளப்பத்தி விசாரிச்சேன்... அவ, ஐ.ஏ.எஸ்.,க்கு டிரெய்னிங் எடுக்க டில்லிக்கு போயிருக்காளாம். ஆனா, அவளால இன்னும் முடிக்க முடியலையாம். அதனால, கல்யாணம் எதுவும் வேண்டாம்ன்னு, அங்கேயே இருக்காளாம், உங்க பிரச்னைய நான் யோசிக்கும் போது, எனக்கு ஒரு ஐடியா வந்தது. அவள ஏன் உங்க பார்ட்னரா நீங்க கூட்டிக் கிட்டு போகக்கூடாதுன்னு... ஆனா, அவக்கிட்ட இன்னும் பேசலீங்க, அவ, எனக்காக ஒத்துப்பான்னு தோணுதுங்க... அவளும் நல்ல பொண்ணுதாங்க.''
லஷ்மி சொல்ல, பரத் நம்பாமல் ஆச்சரியப்பட்டான்.
""லஷ்மி... எனக்கு இது சரியா வருமா, தப்பா வருமான்னு சொல்லத் தெரியல... ஆனா, முயற்சி செய்யலாம்ன்னு தோணுது. அதே நேரம் நானும், இந்த பொண்ணும், ஜோடியா கலந்துக்கறத நீ எப்படி எடுத்துப்பேன்னும் புரியல!''
""அட, அவ ஒரு நாள் உங்க கூட இருக்கப்போறா... அதுவும் பகல்ல, நானும் தான் டில்லி வர்றேனே... என்னால நீங்க விரும்புற மாதிரி இருக்க முடியல, அதனால... இதுக்கு விட்டுக் கொடுக்கறது தப்பில்லீங்க. நீங்களும் சரி... அவளும் சரி எனக்கு வேண்டியவங்க. அதனால, நீங்க குழம்பாதீங்க.''
""இந்த போட்டோ?''
""இது எங்க பேர்வெல் பார்ட்டில எடுத்ததுங்க. அதுலேந்து உங்களுக்கு காட்ட தனியா கட் செய்து, பெருசு செய்தேன்.''
""லஷ்மி, நீ, இந்த அளவுக்கு விட்டு கொடுக்க... நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். நீ சீக்கிரம், இவங்க கிட்ட பேசு. எனக்கு, இப்ப ஓரளவு நம்பிக்கை வந்திருக்கு லஷ்மி... நான் நெனச்ச மாதிரி எல்லாம் சக்சஸ் ஆனா, நம்ம வாழ்க்கை எங்கயோ போய்டும்.''
உற்சாகமானான் பரத். தொடர்ந்து, ""அவங்க ஓ.கே., சொன்னா... அவங்களோட ரீசன்ட் போட்டோவ, "இ - மெயில்' செய்ய சொல்லு. அத வெச்சு நான், "அப்ளை' செய்யணும்.''
பரத் கேட்க... ""சரிங்க... ஊர்ல அப்பாவுக்கு போன் செய்து, அவ போன் நம்பர் எப்படியாவது வாங்கறேங்க,'' லஷ்மியும் ஆர்வமாக சொன்னாள்.மகளின் விருப்பத்திற்காக, காரணம் கூட கேட்காமல் லஷ்மியின் அப்பா, கொஞ்சம் மெனக்கெட்டு டெய்சியின் நம்பரை வாங்கி தந்தார்.
லஷ்மி, டெய்சியை தொடர்பு கொள்ள, உற்சாகத்தை கொட்டினாள் டெய்சி.
பரஸ்பர விசாரிப்பிற்கு பின், லஷ்மி... அந்த வித்யாசமான கோரிக்கையை, கொஞ்சம் தயக்கத்துடன் சொல்ல, எதிர்முனையில் மவுனம் நிலவியது,
""என்ன டெய்சி... ஏதாவது பேசுடி,'' குரல் கொடுத்தாள் லஷ்மி .
""லஷ்மி... நீ சீரியசா கேக்கறியாடி?''
""ஆமாண்டி.''
""இல்ல... வந்து நான், இங்க ஹாஸ்டல்ல தான் தங்கியிருக்கேன். ஸோ, எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. ஒரு ஹெல்ப்பா செய்யலாம் தான்... ஆனா, உனக்கு சென்டிமென்டா எந்த பீலிங்கும் கிடையாதா?''
டெய்சி சந்தேகமும், குழப்பமுமாக கேட்டாள். ""டி... அதப்பத்தி நீ ஏன் கவலைப்படற... எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. நீ அவர் கூட காலையில் போகப்போற, ஒரு நாலு மணி நேரம் சிரிச்சுகிட்டு இருக்கப்போற... எல்லாம் பரத் பாத்துப்பாருடி. இதுல என் புருஷனோட எதிர்காலமே அடங்கியிருக்குடி.''
லஷ்மி மீண்டும் வேண்ட, அரைமனதோடு ஓ.கே., சொன்னாள் டெய்சி.
""ராத்திரி பரத், போன்ல பேசுவார்டி,'' சொல்லி போனை வைத்தாள், லஷ்மி.
அன்றிரவு லஷ்மி அருகிலிருக்க, டெய்சியுடன் பேசினான் பரத். "இட்ஸ் ஓ.கே., சார். என் தோழிக்காக செய்யறேன்...' முடிவாக டெய்சி சொல்ல, ""ஓ.கே., டெய்சி... அடுத்த சனிக்கிழமை அங்க பார்ட்டி. தவிர, டிரஸ்... அப்புறம் சில டீடெய்ல்ஸ் பத்தி, "இ-மெயில்' செய்யறேன்; ரொம்ப தேங்க்ஸ் டெய்சி,'' என்றான் பரத்.
அடுத்த சில நாட்களில், டெய்சியின் முழு உருவ போட்டோவுடன் தன்னை இணைத்து மேக்சி சைசில், ஒரு போட்டோ தயாரித்து லஷ்மியிடம் காட்டினான் பரத்.
ஜோடிப் பொருத்தம் சூப்பராக இருக்க, லஷ்மிக்கு முதன் முதலாக, ஒரு சின்ன நெருடல் மனதில் ஏற்பட்டது.
அந்த முக்கியமான நாளுக்கு, இரண்டு நாட்கள் முன், பரத்தை அலுவலக ஊழியர்கள் வாழ்த்த, லஷ்மியுடன் ஏர்போர்ட்டிற்கு புறப்பட்டான் பரத்.
விமானம் டில்லியை அடைய ஏர்போர்ட்டில் வெள்ளை நிற உடையில், ஒரு தேவதையாக டெய்சி, அவர்களை வரவேற்றாள். மூவரும் ஏற்கனவே, "புக்' செய்திருந்த, ஓட்டலுக்கு சென்று, அவர்களுக்குரிய அறைக்குள் நுழைந்தனர்.
""டெய்சி... வெரி வெரி தேங்ஸ் பார் யுவர் கம்பெனி,'' மீண்டும் ஒரு முறை சொன்னான் பரத்.
""நீங்க சொன்ன மாதிரி, ப்ரவுன் கலர்லேயே காக்ராசோலி டிரஸ் வாங்கிட்டேன் பரத்.''
""எஸ், டெய்சி... எங்க கம்பெனி பேரு ப்ரவுன் பேர்ல்... சாப்ட் சொல்யுஷன். ஸோ, நாம அத ட்ரஸ்லேயே சிம்பாலிக்கா காட்டப்போறோம். நீங்க... ப்ரென்ட்ல ஓரமா விழற முடிய இன்னும் ஷாட் செய்துருக்கணுமே.''
பரத்தும், டெய்சியும் பரஸ்பரம் சகஜமாக டிஸ்கஸ் செய்ய, ஓரமாக ஒதுங்கினாள் லஷ்மி . அங்கு ஒரு வித ஏக்கத்துடன் நின்றால், அவர்களுக்கு அது தர்ம சங்கடமாக இருக்கும் என்று புரிந்து கொண்டாள்.
அந்த முக்கியமான நாளும் வந்தது. நகரின் பெரிய ரெசிடென்ஷியல் ஓட்டல் ஒன்றின் ரூப் கார்டனில், பி.பி.எஸ்.எஸ்.சின் நியூயார்க் பிரசிடென்ட் பிரடெரிக் முன்னிலையில், இந்தியாவின் எட்டு கிளைகளின் எம்.டி.,களும் தங்கள் இணையுடன் குழுமியிருந்தனர். உயர் ரக மதுபானங்கள் பரிமாறப்பட, பரத் ஒரு, "சிப்' அருந்தினான்; கூடவே டெய்சியும் அருந்தினாள்.
அதே நேரம், லஷ்மி தன் அறையில், தான் கையோடு கொண்டு வந்திருந்த சாமி படத்தின் முன், கணவன் வெற்றி பெற பூஜை செய்து கொண்டிருந்தாள்.
இரண்டு மணிநேரம் சென்றிருக்கும். கதவு தட்டப்பட, லஷ்மி லென்ஸ் வழியாக கதவை ஊடுருவ வெளியில், பரத்.
வேகமாக கதவை திறந்தவள், ""என்னாச்சுங்க... சக்ஸசா... டெய்சி எங்க?'' கேள்விகளை அடுக்கினாள்.
ஆனால், அவள் எதிர்பார்ப்பிற்கு மாறாக பரத்தின் முகம் சோகத்தில் மூழ்கி வாடிப்போயிருந்தது.
""ஏங்க... நம்ப ப்ளான் சரிப்படலியா?''
மீண்டும் கேட்டாள் லஷ்மி. பரத்... லஷ்மியை சற்று நேரம் உற்றுப் பார்த்தான். பின், குனிந்து அவள் கால் விரல்களை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டான்.
லஷ்மி ஷாக்கடித்தது போல் துடித்தாள்,""என்னங்க என்ன செய்றீங்க,'' சட்டென்று விலகினாள்.
பரத் கண்கள் கலங்க தளர்வான நடையுடன் சோபாவில் அமர்ந்தான்.
""லஷ்மி,'' கூப்பிட்டான் பரத். அருகில் வந்தாள் லஷ்மி.
""லஷ்மி... நானும், உன் தோழியும், ஒரு பத்து நிமிஷம் தான் பார்ட்டியில இருந்தோம். உடனே ஒரு அர்ஜென்ட் போன்ன்னு சொல்லிட்டு வெளில வந்துட்டோம். நாங்க அட்டெண்ட் செய்யலை... அவ ஹாஸ்டலுக்கு போய்ட்டா... நான் இங்க வந்திட்டேன்.''
பரத் சொல்ல திகைத்தாள் லஷ்மி.
""என்னங்க சொல்றீங்க... இதுக்காகவா நாம கஷ்டப்பட்டோம்?''
""பொறு லஷ்மி... நாங்க வெளில வந்ததுக்கு காரணம், அந்த பிரடெரிக்கோட பேச்சு... அவரோட ஸ்பீச் இங்கிலிஷ்ல இருந்தது. ஆனா, கருத்து... ஒவ்வொரு மனுஷனுக்கும் தேவையானதா இருந்தது. குறிப்பா, என்ன மாதிரி படிச்ச முட்டாளுக்கு சவுக்கடியா இருந்திச்சு லஷ்மி,'' பரத் சொல்ல, கேள்விக் குறியோடு, பரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் லஷ்மி.
""அவரு சொன்னாரு... "நான் இந்த ப்ராஜக்ட்ட ஒரு இந்தியனுக்கு கொடுக்க ஆசைப்பட்டதுக்கு காரணம், உலகத்துல இந்தியா தான் கலாசாரத்தின் தாய். குடும்பம்ங்கிற ஒரு அமைப்பை கடவுளவிட மேலா கொண்டாடுறாங்க, மேலழகுக்கு அடிமையாகாம ஒரே பெண்ணோட தங்கள் வாழ்நாளை பகிர்ந்துக்கறாங்க.
""ஆணும், பெண்ணும் சக... நல்ல, கெட்ட குணங்கள, "அட்ஜஸ்' செய்து வாழ்றாங்க... அதப்பாத்து வர்ற, அடுத்த தலைமுறையும்... நிலையான ஒரு வாழ்க்கை தத்துவத்தை அப்பா, அம்மாகிட்டேயிருந்து கத்துக்கறாங்க... உலகத்துல பல இடங்கள்ல மனுஷன் காட்டுமிராண்டித் தனமா இருந்தப்ப, இந்திய நாகரிகம் உச்சத்துல இருந்தது. அதுல குறிப்பா, ஒருவனுக்கு ஒருத்திங்கற கான்சப்ட்ல; மத்த நாடுங்க இன்னும் முழுமை அடையல. பணம், அந்தஸ்து, சுகத்துக்காக பெண்களை, ஒரு கன்ஸ்யூமர் புராடெக்டா... பாக்குற உலகத்தல, பெண்ணை தங்களைவிட மேலா பாத்துக்கற ஆண்கள். அதுவும், உலக விஞ்ஞான பொருளாதார முன்னேற்றத்துக்கு ஈடுகொடுக்கும் ஆண்கள், இந்தியாவுல தான் இருக்காங்க. இவங்கள்ல ஒருத்தருக்கு, இந்த ப்ராஜெக்ட்ட வழங்குவது தான் நியாயம். அது தான் என் விருப்பம்'ன் னு சொன்னாரு லஷ்மி.
""ஒரு மேல் நாட்டுக்காரன், எது மட்டம்ன்னு சொல்லி, என்ன மாதிரி ஆண்களை உயர்த்தி பேசறானோ... அது தான் முக்கியம். அதனால, வரப்போற பணம், அந்தஸ்து முக்கியம்ன்னு சொல்லி, நான் ரொம்ப கேவலமா நடந்துகிட்டத நெனச்சு, ரொம்ப அசிங்கமா உணர்ந்தேன் லஷ்மி. டெய்சியும் பீல் செய்தா, இதுக்கு மேலயும் நாங்க நடிச்சு, அங்க ஜெயிச்சாலும், தோத்தாலும் அது கேவலம். நம்ப கலாசாரத்தோட, ஒரு சின்ன துளி, இன்னும் என் ரத்தத்துல ஓடிக்கிட்டிருக்கு. அதனால, ஒரு பொய் சொல்லிட்டு வெளில வந்திட்டோம். இப்ப என் மனசுல, கொஞ்சமாவது ஒரு மனுஷனா நடந்துகிட்ட திருப்தி இருக்கு லஷ்மி.''
குரல் தழுதழுக்க தன் மன பாரத்தை இறக்கினான் பரத்.
""பணத்துக்காக, அந்தஸ்துக்காக, மனைவியோட இடத்துல இன்னொருத்திய, நீங்களா இருக்க சொன்னீங்க... நான் தானே ஐடியா கொடுத்தேன்.''
பரத், அவள் கையை பிடித்து சொன்னான். ""லஷ்மி... நீ கொடுத்த ஐடியா, கணவனே கண்கண்ட தெய்வம்ன்னு நெனக்கிற, கணவனுக்காக உயிரையும் கொடுக்கற, ஒரு உத்தமியோட யோசனை. ஆனா, அத புரிஞ்சுக்காம, அந்த உத்தமியோட இடத்துல வேற ஒருத்திய... அந்தஸ்து, பணத்துக்காக வெச்சுப் பார்த்த ரொம்ப கேவலமான ஆண் நான் லஷ்மி. எவ்வளவு கொட்டி கொடுத்தாலும், அந்த புனிதமான இடத்த யாராலும் நிரப்ப முடியாது லஷ்மி... இத ஒரு வெளிநாட்டுக்காரன் சொல்லி, நான் புரிஞ்சுக்கிட்டேன். எனக்கு, உன்னவிட எதுவுமே முக்கியமில்ல லஷ்மி.''
லஷ்மி மடியில் தலை சாய்த்து, ஒரு குழந்தை போல தேம்பினான் பரத். லஷ்மி பரத்தின் தலையை தடவி கொடுக்க, அவர்கள் தாம்பத்தியம் சங்கீதமாக மாறியது.

 நன்றி : தினமலர்

No comments:

Post a Comment