கச்சத்தீவு ஒப்பந்தம் இல்லை; கடல் எல்லை ஒப்பந்தம்தான் - அய்யநாதன் பேட்டி
கச்சத்தீவு ஒப்பந்தம் எதுவும் இல்லை. அது வெறும் கடல் எல்லை ஒப்பந்தம்தான். ஆனால் கச்சத்தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்ப்பதுதான் இந்திய அரசின் நோக்கமாக இருந்தது என்று நாம் தமிழர் கட்சியின் க.அய்யநாதன் கூறினார்.
மத்திய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்தியா-இலங்கை இடையே கச்சத்தீவு சம்பந்தமாக எந்த ஒப்பந்தமும் கிடையாது என்று பதில் அளித்திருந்தது.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தித்தொடர்பாளர் க.அய்யநாதன் வெப்துனியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:-
சரியாக சொல்ல வேண்டுமானால், போடப்பட்ட ஒப்பந்தம் 'கச்சத்தீவு ஒப்பந்தம்' அல்ல. கடல் எல்லைகளைப் பிரிக்கும் ஒப்பந்தம்தான். ஆனால் இந்தியாவின் நோக்கம் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுப்பதுதான்.
இந்த ஒப்பந்தத்தின் பெயர் இந்திய-இலங்கை கடல் எல்லை வரைவு ஒப்பந்தம் (International Maritime Boundary line aggrement).
கடல் எல்லைகளை எப்படி பிரிப்பார்கள் என்று சொன்னால், Equidistant - The Median என்று சொல்லுவார்கள். இரு நாடுகளின் கரையிலிருந்து சமதூரத்தில் 4 அல்லது 5 இடங்களில் புள்ளிகள் வைத்து அந்த புள்ளிகளை இணைத்து இரு நாடுகளுக்கிடையே உள்ள எல்லைக்கோட்டை வகுத்ததாகவும், அப்படி பிரிக்கும்போது கச்சத்தீவு இலங்கை பக்கம் போய்விட்டதாகவும் சொல்கிறார்கள்.
ஆனால் அவ்வாறு பிரிக்கும்போது ஒரு புள்ளி வேண்டுமென்றே இந்தியாவை நோக்கி இழுத்து வைத்துள்ளனர். அப்படி இழுத்து வைத்ததன் காரணமாக கச்சத்தீவு இலங்கையின் பக்கம் சென்றுவிடுகின்றது. இதை பேராசிரியர் சூரிய நாராயணன் வெளிக்கொண்டு வருகிறார்.
இந்திய ஆவணக் காப்பகத்தினுடைய இயக்குனராக இருந்த ஜபோட்டா என்பவர் கூறியதாக சில தகவல்களை ஒரு கட்டுரையில் பேராசிரியர் சூரிய நாராயணன் இவ்வாறு எழுதுகிறார்:
"அதாவது கச்சத்தீவு இலங்கைக்குப் போக வேண்டும் என்பதற்காக ஒரு புள்ளி இந்தியாவை நோக்கி இழுத்து வைக்கப்பட்டது. அவர்கள் நேர்மையாக புள்ளி வைத்திருந்தார்கள் என்று சொன்னால், இந்தியாவுக்கு கிழக்குப்பக்கம், கச்சத்தீவுக்கு 3 மைல் அப்பாலே இந்திய-இலங்கை கடல் எல்லை அமைந்திருக்கும். எனவே கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த புள்ளியை இழுத்து வைத்தார்கள் என்று இந்திய ஆவணக் காப்பகத்தினுடைய இயக்குனராக இருந்த ஜபோட்டா கூறியதாக பேராசிரியர் சூரிய நாராயணன் எழுதுகிறார்.
இந்த கட்டுரையை எழுதிய சூரிய நாராயணன் மீது எந்த வழக்கும் கிடையாது. இதை பல விவாதங்களில், பல காலமாக பேசிவரும் என் மீதும் இதுவரை எந்த வழக்கும் கிடையாது.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கும்போது இது இந்தியாவுக்கு சொந்தமானது இல்லை என்று மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இது தமிழ்நாட்டுக்கு சொந்தமாது. சேது ஜமீனுக்கு சொந்தமாது என்று ஒப்புக் கொண்டிருப்பார்களேயானால் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றிதான் அதை கொடுக்க முடியும். ஆக அவர்கள் என்ன செய்தார்கள் என்று சொன்னால் இது இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ சொந்தமாது இல்லை. இது ஒரு தகராறுக்குட்பட்ட பகுதி. எனவே எல்லைகளைப் பிரிக்கும்போது கச்சத்தீவு அவர்களிடம் சென்றுவிட்டது. எனவே இது ஒரு Settled issue என்று இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் பார்க்கிறார்கள்.
இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது தமிழ்நாட்டினுடைய சொத்தான கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுப்பதற்காக திட்டமிட்ட சதி தான் இந்த எல்லைக்கோடு ஒப்பந்தம். இப்போது இவர்கள் சொல்வது என்னவென்றால், ஐநாவினுடைய நிர்பந்தத்தின் பேரில்தான் நாங்கள் இந்த எல்லைக்கோடு ஒப்பந்தத்தை வகுத்தோம் என்கிறார்கள். ஆனால் கச்சத்தீவைக் கொடுக்கும்போது நாடாளுமன்றத்தில் அப்போதைய அமைச்சர் ஸ்வரன் சிங் அப்படி ஒரு வார்த்தையை சொல்லவே இல்லை. நாங்கள் எல்லைக்கோடுதான் போட்டுக் கொண்டோம் அதில் கச்சத்தீவு இலங்கைக்கு போய்விட்டது என்றுதான் சொன்னார்.
இதில் பாரம்பரியமாக கடலில் பயணம் செய்யும் உரிமை, பாரம்பரியமாக கடலில் மீ்ன் பிடிக்கும் உண்டா என்று கேட்டால் இல்லை என்று சொல்லுகிறார். அந்தப் பகுதியில் வணிக ரீதியிலா கப்பல்கள் எப்போதும் போல போகலாம். ஆனால் மீனவர்கள் மட்டும் போகக் கூடாது என்றார் ஸ்வரன் சிங்.
ஆக, இது தமிழ்நாட்டுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் அயோக்கியத்தனம் என்று காட்டமாகவே கூறினார் அய்யநாதன்
கச்சத்தீவு தொடர்பாக இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தமே இல்லையாம்: மத்திய அரசு சொல்கிறது
கச்சத்தீவில் மீன் பிடிப்பது தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை மையப்படுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்த மீனவர் அமைப்புகள் முடிவெடுத்துள்ளன.
கச்சத்தீவை மீட்டு, அங்கு தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமைகள் வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா உள்பட தமிழக அரசியல் கட்சிகளும் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக பீட்டர் ராயன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் ‘இந்தியா - இலங்கை இடையிலான 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை இல்லை’ என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கோவையைச் சேர்ந்த சமூக சேவகர் சஞ்சய் காந்தி என்பவர் மத்திய வெளியுறவு அமைச்சகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒரு பதிலைப் பெற்றுள்ளார். இலங்கைக்கான இந்திய வெளியுறவு அமைச்சக துணைச் செயலாளர் மாயங்க் ஜோஷி கையெழுத்திட்டு அளித்துள்ள அந்த பதிலில், ‘தற்போதைய அரசு ஆவணங்களின்படி, இந்தியா - இலங்கை இடையில் கச்சத்தீவு தொடர்பாக எந்த ஒப்பந்தமும் இல்லை. அதேநேரம் இரு நாடுகளுக்கு இடையிலான கடல்நீர் எல்லை தொடர்பாக மட்டும் ஒப்பந்தம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த பதில் வெளியுறவுத்துறை மூலம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் மீனவர்கள் மற்றும் கச்சத்தீவு மீட்பு இயக்கத்தினருக்கு அதிர்ச்சி தருவதாக உள்ளது. இதுகுறித்து சமூக சேவகர் சஞ்சய் காந்தி கூறும்போது, ‘‘கச்சத்தீவு ஒப்பந்தத்தின் நகல் வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறையிடம் கேட்டேன். அவர்கள் அப்படி ஒரு விண்ணப்பமே இல்லை என்று பதில் அளித்துள்ளனர். எனவே, இல்லாத ஒப்பந்தத்தை இருப்பதாகக் கூறி தமிழக மக்களை ஏமாற்றும் வேலை நடக்கிறது. கடல்நீர் எல்லை தொடர்பான வரையறையிலும், இரு நாடுகளிடையே எந்தவிதமான அரசு முத்திரையோ, நாடாளுமன்ற அனுமதியோ, அரசு அதிகாரிகளின் கையெழுத்தோ இல்லை. எனவே, வெறும் வெற்றுத்தாளை ஒப்பந்தம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை’’ என்றார்.
No comments:
Post a Comment