எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு...
செ.வெங்கடகிருஷ்ணன், படங்கள்: கு.கார்முகில்வண்ணன்
இன்னிவரைக்கும் ரெண்டு பேரும் கூலி வேலைக்குப் போய், எங்க பாட்ட நாங்களே பார்த்துக்குறோம். எங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், ஊர்க்காரங்களை எல்லாம், 'எங்க ஆயுசுக்கும் மேல ஆரோக்கியமா இருக்கணும்!’னுதான் மனசார சொல்லி வாழ்த்துறோம்!''
- வெண்கலக் குரலில் ரவுனம்மாள் பாட்டி பேச, வியப்பில் வாயடைத்து நின்றோம்!
கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில், வலங்கைமான் தாண்டி 10 கி.மீ தூரத்தில் உள்ளது குப்பணாம்பேட்டை. இந்தக் கிராமத்தின் அதிசயம், அற்புதம், ஆச்சர்யமாக இருக்கிறார்கள் ரவுனம்மாள்... அவருடைய அண்ணன் ரங்கசாமி. 100 தாண்டிய வயதிலும் பூரண உடல் ஆரோக்கியத்துடன், கூலி வேலை செய்து சம்பாதித்து வாழ்கிறார்கள்.
''எங்களுக்கு சொந்த ஊர் பசுபதிகோவில் பக்கத்துல இருக்கிற சூலமங்கலம். எனக்கு ஏழு வயசு இருக்கும்போது, ஊரையே பலிகொண்ட காலராவுல எங்க அப்பாவும், அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்க. அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்களோட அரவணைப்புலதான் நானும் தங்கச்சியும் வளர்ந்தோம். 50 வருஷத்துக்கு முன்ன இந்த ஊருக்கு கூலி வேலைக்கு வந்தவங்க, இங்கயே நிரந்தரமா தங்கிட்டோம். உழைக்காம சோறு திங்க தெரியாது எங்களுக்கு!'' என்று கம்பீரமாக சொல்கிறார் ரங்கசாமி தாத்தா.
''காலையில 4 மணிக்கு எந்திரிப்பேன். ரெண்டு கிலோ மீட்டர் தொலைவுல இருக்கிற டீக்கடைக்கு நடந்து போய் டீ குடிச்சுட்டு வந்து, ஆறு மணிக்கெல்லாம் முதல் ஆளா வயல்ல இறங்கி வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிருவேன். சாயங்காலம் அஞ்சு மணி வரைக்கும் வேலை இருக்கும். ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பளம். வீட்டுக்கு வந்ததும், உஸ்ஸுனு படுக்கிறதெல்லாம் கிடையாது. கீத்து (கீற்று) பின்னி விற்பேன். முள்வேலி செஞ்சு தருவேன். வயல் வேலை இல்லாத நாட்கள்ல, முழு நேரமும் கீத்து பின்னுவேன். சாப்பாட்டைப் பொறுத்தவரைக்கும், ஒரு பங்கு சாதம், ரெண்டு பங்கு காய்னு சாப்பிடுவேன். உடம்புல எந்தக் குறையும் இல்ல. காது மட்டும் கொஞ்சம் மந்தமான மாதிரி தெரியுது. ஆனாலும் ஆஸ்பத்திரிக்குப் போற பழக்கமெல்லாம் கிடையாது!
அந்தக் காலத்துல ஆறடி இருப்பேன். இப்போ உடல் சுருங்கிப் போச்சு. நாலு வருஷத்துக்கு முன்ன, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், ஒரு கூட்டத்துல எனக்கு சால்வையெல்லாம் போத்தி, கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, கூச்சப்பட வெச்சுட்டாரு!'' என்று சிரிக்கும் ரங்கசாமி தாத்தாவுக்கு, 40 வயதில்தான் திருமணமாகியிருக்கிறது. எழுபது வயதில், ஒரு மகன் உள்ளார். பேரன், பேத்திகள் உண்டு.
''எந்தங்கச்சியும் சுறுசுறுப்புல என்ன மாதிரியே. அந்தக் கால ஆளுல... அதனால அண்ணன்னா அம்புட்டு மரியாதை கொடுக்கும். என் முன்ன நின்னுகூட பேசாது!'' என்று ரங்கசாமி தாத்தா சொல்ல, தங்களின் குடிசை வீட்டுக்குள் அழைத்து உபசரித்துப் பேசினார் ரவுனம்மாள் பாட்டி.
''எங்க அண்ணன் கல்யாணத்துக்கு அப்புறம்தான் எனக்கு கல்யாணமாச்சு. ரெண்டு ஆண், ரெண்டு பொண்ணுனு நாலு பிள்ளைக. இந்தா... வாசல்ல வெளையாடுற சிட்டுக, என் நாலாம் தலைமுறை பேரன், பேத்திக. வேறென்ன பேறு வேணும்! தலைமுறைகள் எல்லாரும் சேர்ந்து நின்னா, எங்க குடும்பம்தான் ஊருலயே பெரிய குடும்பம். ஆனாலும் கடைசி வரைக்கும் நானும் எங்க அண்ணனும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்துக்குவோம்னு, பக்கத்து பக்கத்து குடிசை வீட்டுல இருக்கோம். அண்ணனை பாத்துக்க அண்ணி இருக்காங்க. அவங்களுக்கு வயசு 92. எனக்கு இவங்க ரெண்டு பேரும்தான் துணை''
- தடையில்லாமல் பேசும் பாட்டிக்கு கண்பார்வை, பேச்சு, குரல், சுறுசுறுப்பு என்று எதிலும் குறை இல்லை. ஆடு மேய்க்கும் பாட்டியின் உழைப்பு, இன்னொரு வியப்பு.
இவர்கள் வேலை செய்யும் வயலுக்குச் சொந்தக்காரரான சின்னதுரை, இவர்கள் மீது பாசமும் மரியாதையும் வைத்துள்ளார்.
''ரெண்டு பேரையும் எங்க ஊர்ல பொக்கிஷங்களா, வாழும் வழிகாட்டிகளா மதிக்கிறோம். இவங்களைப் பார்க்கும்போது, எங்க சோம்பலெல்லாம் ஓடிப் போயிடும். தாத்தா தன் மறைவுக்குப் பிறகு உடல் தானம் செய்யவிருக்கார். சிங்கப்பூர் ஆங்கில இதழ் உட்பட, இதுவரை எத்தனையோ ஊடகங்கள் வந்து இவங்களை பேட்டி எடுத்துட்டுப் போயிருக்காங்க. ஆனா, பொருளாதார ரீதியா சிரமப்படும் இவங்களுக்கு, எந்த பெரிய உதவியும் கிடைக்கல. ஒருமுறை பாண்டிச்சேரி அரசாங்கம் இவர்களை வந்து பார்த்து கௌரவிச்சு, சிறிய தொகை மட்டும் அன்பளிப்பா தந்துச்சு. இந்த வயசுலயும் உழைச்சுப் பிழைக்கும் இவங்களுக்கு, ஏதாவது பொருளாதார உதவி கிடைச்சா நல்லா இருக்கும்...'' என்றார் வேண்டு கோளாக.
''சின்னதுரை எங்களை வருஷா வருஷம் கபிஸ்தலம் கோயிலுக்கு சிறப்பு வழிபாட்டுக்கு கூட்டிட்டுப் போவார். ஊருக்கு ஆரோக்கியத்தைக் கொடுனு வேண்டிட்டு வருவோம். நோயில்லாத உடம்புதான் மதிப்பில்லாத செல்வம்!''
- உரத்த குரலில் கம்பீரமாக தாத்தா சொன்னபோது, பலமாக தலையசைத்தோம்!
No comments:
Post a Comment