Thursday, 5 June 2014

சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!
உணவு
 தற்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் சகாயம், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது, உழவர் சந்தையில் 'உழவன் உணவகம்’ என்ற உன்னதமான திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மதுரைக்கு மாற்றலாகி வந்தபோது, அங்கேயும் இதேபோன்ற உணவகத்தைத் தொடங்கி வைத்தார். முழுக்க விவசாயிகளால், மக்களுக்காக நடத்தப்படும் இந்த உணவகம்... நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மதுரையில் உள்ள உணவகத்துக்குச் சென்றபோது... கயிற்றுக்கட்டில், லாந்தர் விளக்கு, ராட்டை, மண் பானைக் குடிநீர் என உழவன் உணவகத்தின் சூழல், நம்மை அந்தக்கால கிராமத்துக்கே அழைத்துச் சென்றது.
''சிறுதானியங்களைத் தனியே விற்பதைவிட, உணவாக மதிப்புக்கூட்டி விற்கும்போது விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கும் ஆரோக்கியமான உணவு கிடைக்கிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம் எனப் பெரும்பாலான நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது, சிறுதானிய உணவுகளைத்தான். இதனால், சமீபகாலமாக சிறுதானிய உணவுகள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது'' என்கிறார் தமிழக அரசின் வேளாண்மை அலுவலர் மற்றும் உழவன் உணவக நிர்வாகி ஆறுமுகம்.
இருசக்கர வாகனங்களைவிட கார்களின் எண்ணிக்கைதான் அந்த உணவகத்தில் அதிகமாக இருந்தது. குறிப்பாக சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இவ்வுணவகம் பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்திருக்கிறது.
''இங்கே உணவகம் நடத்தும் விவசாயிகள்... தங்கள் வயல்களில் வரகு, சாமை, தினை, கேப்பை, கம்பு முதலிய சிறுதானியங்களைப் பயிரிட்டு, அவற்றையே சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். இன்னபிற சிறுதானியங்களை சந்தையில் விலைக்கு வாங்கியும் சமைக்கின்றனர். உணவைப் பற்றிய கருத்து மற்றும் விமர்சனங்களையும் வாடிக்கையாளர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, சமையலை இன்னும் மெருகேற்றுகின்றனர் விவசாயிகள்'' என்று சொன்ன உழவன் உணவகத்தைச் சேர்ந்த பாலாஜி, சிறுதானிய உணவுகளில் சிலவற்றை சமைத்துக் காண் பித்ததோடு... சமைப்பது எப்படி என்பது பற்றி பாடமே நடத்தினார்.

சாமைப் பொங்கல்!
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி - 300 கிராம்
பாசிப் பருப்பு - 150 கிராம்
சீரகம் - 10 கிராம்
மிளகு - 5 கிராம்
இஞ்சி - 10 கிராம்
நெய் - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குக்கரில் நெய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை இட்டு, வாசம் வரும் வரை நன்றாக வறுத்து பிறகு, முந்திரி, இஞ்சி, பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும். 1/4 மணி நேரம் ஊற வைத்த அரிசி, பாசிப் பருப்புடன், மூன்று பங்கு நீரையும் சேர்த்து, உப்பு போட்டு, குக்கரை மூடிவிடவும். இரண்டு விசில் வரும்வரை அடுப்பை 'சிம்’மில் வைத்திருந்து இறக்கிப் பரிமாறவும்.

காய்கறி முடக்கற்றான் சூப்!
தேவையான பொருட்கள் :
கேரட், பீட்ரூட், குடை மிளகாய், தக்காளி - தலா 2
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 2 பல்
ஆய்ந்த முடக்கற்றான் கீரை - ஒரு கைப்பிடி
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மக்காச்சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
(கார்ன் ஃப்ளார்)உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளையும் கீரையையும் சேர்த்து வேக வைக்கவும். தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகு ஆகியவற்றை நன்கு அரைத்து, வாணலியில் இட்டு எண்ணெய் ஊற்றி வதக்கவும். கரம் மசாலாவைச் சேர்க்கவும். பிறகு, வேகவைத்த காய்கறிக் கலவையுடன் வதக்கிய மசாலாவைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு, மக்காச்சோள மாவு (கார்ன் ஃப்ளார்) போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கினால், சுவையான சூப் ரெடி.

கம்பு, சோளம், தினை, வரகு பணியாரம்!
தேவையான பொருட்கள்:
கம்பு, சோளம், தினை, வரகு, அரிசி - தலா 250 கிராம்
உளுந்து - கைப்பிடி
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
கருப்பட்டி - 1 உருண்டை
வெல்லம் - 1 உருண்டை
செய்முறை:
தானியங்கள் அனைத்தையும் நன்றாக ஊற வைத்து, மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். கருப்பட்டியையும் வெல்லத்தையும் பதமாகக் காய்ச்சி வடிகட்டி, மாவில் ஊற்றிக் கலந்து பணியாரச் சட்டியில் ஊற்றி எடுத்தால், சுவைமிக்க சிறுதானிய இனிப்புப் பணியாரம் தயார்.
2 கேரட், 5 சின்ன வெங்காயம், 2 பச்சை மிளகாய், சிறிது இஞ்சி, 3 பல் பூண்டு ஆகியவற்றை நறுக்கி, அரைத்த மாவுடன் கலந்து ஊற்றி, காரப் பணியாரமும் செய்யலாம். இதற்கு கருப்பட்டி, வெல்லம் சேர்க்கக் கூடாது.

கம்பு அடை!
தேவையான பொருட்கள்:
கம்பு - 250 கிராம்
கடலைப் பருப்பு - 200 கிராம்
துவரம் பருப்பு - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 5
சீரகம் - 1 டீ ஸ்பூன்
வெள்ளைப்பூண்டு - 10 பல்
இஞ்சி - சிறுதுண்டு
செய்முறை:
கம்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை நான்கு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். அவை, அரைபட்டுக் கொண்டிருக்கும் போதே காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்து அரைக்கவும். பிறகு, தேவையான அளவு உப்பு கலந்து, 2 மணி நேரம் வைத்திருந்து, அடையாக ஊற்றவும்.

கேழ்வரகு இட்லி!
தேவையான பொருட்கள்:
வரகரிசி - 250 கிராம்
கேழ்வரகு - 250 கிராம்
உளுந்து - 150  கிராம்
வெந்தயம் - 1/4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வரகரிசி, கேழ்வரகு ஆகியவற்றைத் தனியாகவும் உளுந்து, வெந்தயம் ஆகியவற்றைத் தனியாகவும் 3 முதல் 4 மணி நேரம் வரை ஊற வைத்து, தனித்தனியே அரைத்து ஒன்றாகக் கலந்து... தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி, நான்கு மணி நேரம் வைத்திருந்து இட்லியாக அவிக்கவும்.

தினை - முள்முருங்கை தோசை!
தேவையான பொருட்கள்:

ஆய்ந்த முள்முருங்கைக் கீரை (கல்யாண முருங்கைக் கீரை) - ஒரு கைப்பிடி
தினை - 200 கிராம்
அரிசி - 200 கிராம்
உளுந்து - 100 கிராம்
செய்முறை:
தினை, அரிசி இரண்டையும் ஊற வைத்து, அவற்றுடன் உளுந்தைச் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும். முள்முருங்கைக் கீரையைத் தனியாக அரைத்து, மாவில் கலந்து தோசையாகச் சுட்டெடுத்தால் மணக்கும் முள்முருங்கைக் கீரை தோசை தயார்.

முடக்கற்றான் கீரை-சோள தோசை!
தேவையான பொருட்கள்:
ஆய்ந்த முடக்கற்றான் கீரை - ஒரு கைப்பிடி
நாட்டுச் சோளம் - 1 கிலோ
உளுந்து - 200 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
நாட்டுச் சோளத்தையும் உளுந்தையும் எட்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து, நைஸாக அரைக்கவும். பிறகு, முடக்கற்றான் கீரையைச் சேர்த்து நன்கு கலந்து, தோசைக் கல்லில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஊற்றி எடுத்தால், மூட்டுவலிகளை விரட்டும் முடக்கற்றான் கீரை தோசை தயார்.

No comments:

Post a Comment