சமாதானத்தின் தூதுவன்!
''ஒரு
மனிதன் தன் மொழி, இனம், பொருளாதாரப் பாகுபாடுகளைக்கூட மறைத்து வாழலாம்.
ஆனால் உடலின் நிறத்தை மறைத்து வாழ முடியாது. நாங்கள் பிறப்பால் அவ்வளவு
இழிவுகளையும் அசிங்கங்களையும் வேதனைகளோடு சுமந்து வாழ்ந்தவர்கள். எம்
கறுப்பின மக்கள் இனி யாருக்கும் அடிமை இல்லை. அடிமைச் சங்கிலி
உடைக்கப்படுகிறது. இனி அவர்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக உலா வரலாம்.
பேசலாம், பாடலாம், சமமாகப் பயணிக்கலாம், சமமாக சாப்பிடலாம். இந்த பரந்த
வெளியில் இனி நிலவப்போவது சமாதானமே'' - தென்னாப்பிரிக்காவில் ஜனாதிபதியாகப்
பதவியேற்றபோது நெல்சன் மண்டேலா சொன்ன வார்த்தைகளே இவை.
கடந்த டிசம்பர் 5-ம் தேதி நெல்சன் இறந்தபோது உலக நாடுகள் துக்கத்தில் ஆழ்ந்தது.
ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நெல்சன்
மண்டேலாவின் படத்தைப் பிரசுரிக்க அனைத்து ஊடகங்களுக்கும்
தடைவிதித்திருந்தார்கள். இன்று உலகத்தில் உள்ள அனைத்துப் பத்திரிகைகளிலும்
தலைப்புச் செய்தியே நெல்சன் மண்டேலாவின் இறப்பு செய்திதான். ஓர் இனத்தின்
தலைவன் இந்த அளவுக்குப் போற்றப்படுவதும் கொண்டாடப்படுவதும் வேறு எந்த
நாட்டுக்கும் இனத்துக்கும் கிடைக்கவில்லை. பிரிட்டிஷ் நாடாளுமன்ற
வளாகத்தில் அவர் உயிருடன் இருந்தபோதே அவருடைய வெண்கலச் சிலை வைத்ததுதான்
மண்டேலாவுக்கான தனிச்சிறப்பு.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் டீமில் இனவேறுபாடுகள்
இருந்ததாக இரண்டு விளையாட்டு வீரர்களை நீக்கிய சம்பவம் சமீபத்தில் நடந்தது.
இப்போதே இப்படி என்றால் இரண்டு தலைமுறைகளுக்கு முன் கறுப்பின மக்களின்
எதிர்கொண்ட துயரச் சம்பவங்கள் சொல்லி மாளாது. ஆப்பிரிக்கச் சேரிகளில்
வாழ்பவர்களின் துயரங்களை மட்டும் அல்ல; உலகத்தில் அனைத்து நாடுகளிலும்
வாழும் கறுப்பின மக்களின் இழிவைத் துடைத்தவர் நெல்சன் மண்டேலா. 'எனது நாடு
மிகப் பெரிய மகனை இழந்துவிட்டது’ என்று கண்ணீர் மல்க தென்னாப்பிரிக்கா
ஜனாதிபதி ஜேக்கப் ஜீமா, மண்டேலாவின் இறப்பு செய்தியை உறுதிப்படுத்தி
சொல்லும்போது உலகமே சோகத்தில் ஆழ்ந்தது.
இன்று அமைதியின் தூதுவனாக அறியப்படும் நெல்சன் மண்டேலா,
முன்னொரு காலத்தில் கறுப்பின மக்களின் விடுதலைக்காக எத்தியோப்பியா சென்று
ஆயுதம் செய்யவும் குண்டுகள் தயாரிக்கவும் பயின்றவர். கெரில்லா
பயிற்சியையும் கற்றுக்கொண்டவர்.
அதனால் தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக்
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டபோதே மண்டேலா, 'அனைவரின்
சமத்துவத்துக்குக்காக, சமூக நல்லிணக்கத்துக்காக, ஜனநாயத்துக்காகப்
போராடினேன். இது குற்றம் என்றால் என்னை இப்போதே கொல்லலாம்’ என்றார்.
நீதிமன்றம் அவருக்கு 27 ஆண்டு சிறைத் தண்டனையைப் பரிசாகக் கொடுத்தது.
இருண்ட சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தாலும் அவர் விதைத்த
ஒருமைப்பாட்டு வெளிச்சம் மங்கிவிடவில்லை.
நீண்டநெடிய காலம் சிறையில் இருந்த தலைவர் என்ற பெயரோடு
வெளியேறி வந்து, கறுப்பின மக்களின் முதல் ஜனாதிபதி ஆனார். அடுத்த ஜனாதிபதி
தேர்தலிலும் மக்கள் அவரை முன்மொழிந்தபோது, 'இது எனக்கான நிரந்தர இடமில்லை.
எனக்குப் பின்னால் திறமையானவர்கள் இருக்கிறார்கள். புதிய தலைவர்கள் வளர
முட்டுக்கட்டையாக நான் ஒருபோதும் இருக்க மாட்டேன்’ என்று ஜனாதிபதி பதவியைத்
தூக்கி எறிந்தார்.
'தோலின் நிறம், பிறப்பின் காரணமாக ஒரு நபர்
வெறுக்கப்படுகிறார் என்றால் அங்கே அன்பு எப்படி பிறக்கும்? அன்பு இயல்பாக
வர வேண்டும். அது மனித இதயத்தில் இருந்து புறப்பட வேண்டும். அதைத்தான்
எதிர்பார்க்கிறோம்’ என்பதே அவருடைய வாழ்நாள் வேண்டுகோளாக இருந்தது.
மண்டேலாவின் மரணம் உலகத்தை உலுக்கினாலும் ஓர் இனத்தின்
அணையாத விளக்கு, இந்த உலகம் முழுவதும் ஒவ்வொரு கறுப்பின மக்களின்
வீட்டிலும் நல்லிணக்கம் விரும்பும் வெள்ளையரின் வீட்டிலும் பிரகாசமாக
எரிந்துகொண்டே இருக்கும்
thanks:v
No comments:
Post a Comment