Monday, 16 December 2013


விஸ்வநாதன் ஆனந்த்


அவனை வீட்டில் எல்லாரும் 'விஷி’னு கூப்பிடுவாங்க. வீட்டில் அவன்தான் கடைக்குட்டி. அதாம்பா... கடைசிக் குழந்தை. அவனோட அண்ணா பேரு சிவக்குமார். அக்கா, அனுராதா. அவன் பிறந்தது தஞ்சாவூர் பக்கம் மயிலாடுதுறை. அது அவனோட அம்மா ஊரு. அப்பா இந்திய ரயில்வேயில் பெரிய பதவியில் இருந்தார். அவர் பேரு விஸ்வநாதன். சென்னையில் ரயில்வே தலைமை அலுவலகம் இருந்ததால் அங்கேதான் குடும்பமும் இருந்தது.
விஷியோட குட்டி வயசுல அவனோட பொழுதெல்லாம் அம்மாவோடுதான் போச்சு. சுசீலா அம்மாவுக்கு தீபா ராமகிருஷ்ணன் என்ற தோழி இருந்தாங்க. அவங்க அடிக்கடி வீட்டுக்கு வருவாங்க. விஷியின் அண்ணனும் அக்காவும் ஸ்கூலுக்குப் போய்டுவாங்க. அப்பா வேலை விஷயமா அடிக்கடி டூர் போயிருவார். விஷி என்ன பண்ணுவான்! டி.வி-யில் ஆர்வம் கிடையாது. அதனால் அம்மாவும் அவர் தோழியும் பொழுதுபோக்க என்ன செய்தாங்களோ அதையே தானும் செய்தான். அதுதான் செஸ் விளையாட்டு!
பக்கத்தில் இருந்த டான் பாஸ்கோ பள்ளியில் சேர்க்கலாம்னு பார்த்தால், அந்த நேரம் பார்த்து அப்பாவை வேலை விஷயமா ஒரு வருஷம் ஃபிலிப்பைன்ஸுக்கு மாத்திட்டாங்க. பாவம் விஷி. புது நாடு... ஊரு... அவனுக்கு எல்லாமே புதிரா இருந்தது. அங்கேதான் அவன் முதன்முதலில் பள்ளிக்குப் போனான். மாலையில் சீக்கிரம் வீட்டுக்கு வந்துருவான். வந்ததும் அம்மாவோடு செஸ் ஆட உட்காருவான். அவனோட நண்பர்களுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் இல்லை. அம்மா அவனோடு விதம் விதமா செஸ் விளையாடுவாங்க.

அப்போது விஷிக்கு ஆறு வயசு. ஃபிலிப்பைன்ஸ் டி.வி-யில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை புதிர் நிகழ்ச்சி ஒன்றுவரும். ஒரு விடுமுறை நாளில் அந்த நிகழ்ச்சியில் கேட்ட எல்லாப் புதிர்களுக்கும் டாண்... டாண்னு விஷி விடை சொன்னதையும், அதில் அவனுக்கு இருந்த ஆர்வத்தையும் பார்த்த அம்மா, அவனுக்கு உதவ கோதாவில் இறங்கினாங்க.
தினமும் மதியம் நிகழ்ச்சியைப் பார்த்து அதில் கேட்கப்பட்ட படப் புதிர், கணிதப் புதிர், வார்த்தைப் புதிர், கட்டப் புதிர் என எல்லாத்தையும் எழுதிவெச்சுருவாங்க. விஷி ஸ்கூலில் இருந்து வந்ததுமே ரெண்டு பேருமா உட்கார்ந்து அதற்கான விடையைத் தேடுவாங்க. விஷி விடையைச் சுலபமாச் சொல்லிடுவான்.

அதோடு கதை முடியலை. அவனோட அம்மா, விடைகளை எழுதி விஷி பேரில் அந்த டி.வி-க்கு அனுப்பினாங்க. முதல் பரிசு கிடைச்சது. அழகான புத்தகம் ஒன்று பரிசாக வந்தது. அது 'செஸ்’ விளையாட்டுப் பற்றிய புத்தகம். விஷிக்கு உற்சாகத்துக்கு கேட்கணுமா! அடுத்தடுத்து வந்த எல்லாப் புதிர்களுக்கும் விடை எழுதி நிறையப் பரிசுகளை வாங்கினான்.
ஒருமுறை பரிசுக்குப் பதிலாக அந்த டி.வி. நிலையத்தில் இருந்து ஒரு தபால் வந்தது 'எங்கள் டி.வி. நிலையத்துக்கு வந்து எந்தப் புத்தகம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளவும். ஆனால், இனி விடை அனுப்ப வேண்டாம். நீங்கள் இந்தப் புதிர் போட்டியின் நிரந்தர 'சாம்பியன்’ என்ற அந்தஸ்து பெறுகிறீர்கள்.’ என்று எழுதியிருந்தார்கள்.
அந்த விஷி பின்னாளில் செஸ்ஸில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர், உலகச் சாம்பியன் எனப் பல சாதனைகளைப் படைத்து, விஸ்வநாதன் ஆனந்த் என்ற தனது பெயரை உலகம் முழுக்க பதிவுசெய்தார்.
thanks :v

No comments:

Post a Comment