Saturday, 29 March 2014

ஞாபகசக்தியைப் பெருக்க வழிகள்

மூளையானது மனித உடலின் மொத்த எடையில் 2.5 சதவீதம்தான் என்றாலும், அது மனிதனின் சக்தி மூலத்தில் 20 சதவீதத்தைப் பயன்படுத்துகிறது. ஆகவே நாம் நமது ஞாபகசக்தியையும், மூளைத்திறனையும் பெருக்க மூளையை சரிவரக் கவனித்து, அதற்கு போதுமான போஷாக்கை அளிக்க வேண்டும்.
சிலவேளைகளில் மூளைக்கு மருந்து கொடுப்பதும் அவசியமாகலாம். மூளைத்தளர்ச்சி என்ற நாள்பட்ட நோய் பாதிப்புக்கு மருந்து கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. குளூக்கோஸ், மூளைக்கு முக்கியமாக போஷாக்கு அளிக்கும். மூளை களைப்பு அடைவதைத் தடுக்க சில அமினோ அமிலங்களும் அவசியம்.
மூளை வேலையின்போது வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கு சில பொருட்கள் அவசியம். குளுடாமினிக் அமிலம், மெதியனைன், வைட்டமின் பி-1, பி-2, பி-6 ஆகியவை அந்தப் பொருட்களாகும். மத்திய நரம்பு மண்டலத்தை நல்ல நிலையில் வைத்திருப்பதற்கு சரியான உழைப்பு முறையும், உள்ளத் தூண்டல்களும்கூட அவசியமாகும்.
ஒருவரைப் பெரிதும் களைப்படையவும், சோர்வடையவும் செய்வது அதிக உழைப்பு அல்ல, குறைவான உழைப்பே என்பது உண்மை. இரவு நேரத்தில், குறிப்பாக அதிகாலை 2 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் மனிதனின் நினைவாற்றல் மிகவும் பலவீனமாக உள்ளது.
அவனது இயக்கங்களும் மிகவும் மந்தமடைகின்றன. அந்த நேரத்தில் கணிதப் பணியில் அவன் ஈடுபட்டால் பல தவறுகள் நேரக்கூடும். அதேபோன்று பகலிலும் மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை பலவீனமான நேரம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
காலை 8 மணியில் இருந்து 12 மணி வரையும், மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணி வரையும் மனிதனின் திறமைகள் மிக உயர்ந்த நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூளை உழைப்பின் தீவிரமும் வேலை நேரத்தில் மாற்றமடையக் கூடும்.
ஆரம்பத்தில் 20 நிமிடங்களில் இருந்து 60 நிமிடங்கள் வரை மனிதன் தான் செய்ய வேண்டிய வேலைக்கு ஏற்பத்தன்னை தகவமைத்துக்கொள்கிறான். மிகத் தீவிரமான உழைப்புக்குப் பிறகு சோர்வு தட்டுப்படத் தொடங்குகிறது. தீவிரமான வேகத்துடன் மூளையால் எந்த நேரத்தில் பணிபுரிய முடிகிறதோ, அந்த நேரத்தை நாம் அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அந்த நேரம் அதிகம் கிடைப்பதில்லை. எனவே அந்நேரத்தில் நமது கவனத்தை அங்குமிங்கும் அலைய விடக்கூடாது. அப்போது வேறு வேலையையும் மேற்கொள்ளக்கூடாது. சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதன் மூலம் ஒரு மனிதனின் திறனை அதிகரிக்க முடியும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
இசை, பல்வேறு வண்ணங்கள் போன்ற தூண்டல்கள் இதமளிக்கக்கூடும். சிலருக்கு எரிச்சலூட்டவும் கூடும். சிலருக்கு வேலையில் ஈடுபாடு கொள்ளத் தூண்டும் அவை, வேறு சிலருக்கு கவனக்குறைவை ஏற்படுத்தக்கூடும். அவை, அந்தந்த நபரின் தனிப்பண்புகளைப் பொறுத்தவை.
இதெல்லாம் தனிப்பட்ட நபரின் ரசனை சார்ந்தது என்பதால் நம்மால் பொதுவாக எதுவும் கூற முடியாது. எரிச்சல் ஏற்படும் சூழ்நிலையில் உங்களை இதப்படுத்த இசை அல்லது வண்ணங்கள் அல்லது வேறு என்ன தேவை என்று நீங்களே அறிந்து கொள்ள வேண்டும்.
மூளையும் உடம்பும் களைத்திருக்கும் போது உற்சாகமூட்டும் இசைப் பாடல்கள் அல்லது சிவப்பு சார்ந்த வண்ணங்கள் பயனளிக்கும். மீண்டும் நினைவுகூர்தல் அல்லது கற்றலே ஞாபகசக்தியின் அடிப்படை.
அன்றாடம் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்களை படுக்கைக்குப் போகும் முன்பும், படுக்கையிலிருந்து எழுந்தபின்பும் ஞாபகப்படுத்திப் பார்ப்பது பலனளிக்கும். அதோடு, நினைவில் கொள்ள வேண்டிய விஷயத்தோடு அது தொடர்பான இன்னொன்றை ஞாபகத்தில் இருத்துவது நல்ல பலன் கொடுக்கும்.

No comments:

Post a Comment