Saturday, 29 March 2014

ரஜினி என்னும் மாயமான்


அது என்னமோ தெரியலை தலைவரைப் பற்றி எழுதாமல் தூக்கம் வருவதில்லை. கோச்சடையான் வெளியாகிறது என்றதும் திருப்பதிக்கு முடி தானம் செய்ய ஒரு குரூப் கிளம்பியது. பழனிக்கு பாத யாத்திரை, காவடி தூக்குதல் என்று எட்டு திக்கும் திணறுகின்றன. இந்த நேரத்தில் நாம் மட்டும் வேடிக்கைப் பார்த்தால் எப்படி?

தலைவரைப் பற்றி பேசும் எழுதும் அனைவரும் குறிப்பிடும் சில விஷயங்கள் இவை. தலைவரைப் போல் வள்ளல் யார்? அவரைப் போல் தன்னலம் கருதா தலைவன் யார்? அவரைப் போல் எளிமை உண்டா?

இந்த கேள்விகளையெல்லாம் சீரியஸாக எடுத்து ஆராய்ந்தால் தலைவர் அப்படியெல்லாம் எந்த வரமும் தமிழகத்துக்கோ, அவரின் ரசிகர்களுக்கோ தந்ததில்லை என்பது தெரிய வரும்.

அவரின் ராகவேந்திரா மண்டபம் இருக்கும் இடம் குறித்து சர்ச்சை கிளம்பிய போது, என்னுடைய சம்பாத்தியத்தில் பெரும்பகுதியான இந்த மண்டபத்தை தமிழ் மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று அறிவித்தார்.

அதனை அன்று எல்லா பத்திரிகைகளும் கொண்டாடி எழுதின. தலைவர் தமிழக மக்களுக்கு மண்டபத்தை அர்ப்பணித்ததாக அறிவித்து பல பத்து வருடங்கள் ஓடிவிட்டது. தமிழக மக்களுக்கு அந்த மண்டபம் எந்தவகையிலாவது பயன்பட்டிருக்கிறதா? அதை இன்றும் ஆண்டு அனுபவிப்பது யார்? தலைவரை வள்ளல் என்று ஓயாமல் பரப்புரை செய்யும் பக்தர்கள் இது பற்றி எப்போதாவது கேட்டிருக்கிறார்களா? சிந்தித்திருப்பார்களா?

தனது படம் வெளியாகும் போது மட்டுமே தலைவருக்கு பக்தர்களின் நினைவு வரும். கடமையை செய் பலனை எதிர்பார் என்பார். என்ன கடமை? போஸ்டர் ஒட்டி ஆர்ப்பாட்டமாக அவரின் படத்தை அதிகமுறை பார்ப்பது. பக்தர்கள் அதனை கச்சிதமாக செய்வார்கள். பலன்?

ராகவேந்திரா மண்டபத்தில் கடமையை செய் பலனை எதிர்பார் பேனருடன் தலைவர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பிறகு பத்திரிகைகளுக்கு பேட்டி தந்த நிர்வாகிகள், தலைவர் அரசியலுக்கு வருவார், அதைத்தான் பலனை எதிர்பார் என்று சொல்கிறார் என்றனர். தலைவரும் அப்படியொரு அர்த்தத்தில் பக்தர்களை டெம்ப்ட் செய்யவே அந்த பேனரை வைத்தார். படம் ஓடியது, கல்லா நிறைந்தது. பலன்? எந்த பக்தராவது தலைவரிடம் அதுபற்றி கேட்டிருக்கிறார்களா?

தலைவரின் மகளின் திருமணத்துக்கு பக்தர்களுக்கு அழைப்பில்லை. போகட்டும். ட்ராபிக் ஜாம் ஆகிவிடும் அந்தப் பக்கம் வராதீங்க என்று அறிவிக்க வேண்டுமா? அதேநேரம் பாபா படப்பெட்டியை கடத்திய விவகாரத்தில் பக்தர்களை புரட்டி எடுத்த பாமக தலைவர்களை வீடு தேடிச் சென்று அழைப்பிதழ் தந்து அழைத்தார் தலைவர். பக்தர்களில் யாராவது ஏன் என்று கேட்டார்களா? சில பத்திரிகைகள் இதனை கோடிட்டு காட்டியதும், ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைப்பேன் என்றார். குஸ்காகூட இன்னும் வந்து சேரவில்லை.

இவ்வளவுக்குப் பிறகும் கோச்சடையான் பாடல்கள் வெளியீட்டு நிகழ்வில், படத்தின் வெற்றி விழாவில் ரசிகர்களை சந்திப்பேன் என்று அதே பழைய துருப்பிடித்த தூண்டிலைதான் தலைவர் வீசுகிறார். பக்தர்களும் படத்தை வெற்றிபெற வைக்கும் நேர்த்திக்கடனுடன் வெங்கடாசலபதிக்கு முடி தானம் செய்ய கிளம்பிவிட்டனர்.

தலைவரைப் பொறுத்தவரை பக்தர்களுக்கு பிரியாணியெல்லாம் போட வேண்டியதில்லை, வீண் செலவு. வெற்றி விழாவில் சந்திப்பேன், பிரியாணி போடுவேன் என்று வாய் வார்த்தையில் அடித்துவிட்டாலே போதும். அப்புறம் கவிப்பேரரசை வைத்து தமிழ்ப்பால், வியர்வை, ஒரு பவுன் தங்கக் காசு என்று இரண்டு வரி. பக்தர்கள் பணால். தமாஷ் என்னவென்றால் தலைவரைப் போன்ற வெள்ளந்தி மனிதருக்கு சாக்கடை அரசியல் செட்டாகாது என்று கமெண்ட். ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகள் தந்து நிறைவேற்றாமல் எஸ்ஸாகும் கட்சிக்காரனைப் போலத்தானே, ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் ஏதாவது வாக்குறுதி தந்து எஸ்ஸாகும் தலைவரும்.

தனிப்பட்ட முறையில் தலைவர் பலருக்கு உதவியிருக்கிறார். தனக்கு படம் தந்தவர்கள், கைதூக்கிவிட்டவர்கள், நண்பர்கள்... இதெல்லாம் எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெய்சங்கர் தொடங்கி விஜய் சேதுபதிவரை செய்கிற, செய்து வருகிற தனிப்பட்ட விஷயங்கள். அதில் தலைவரை மட்டும் தனித்துவப்படுத்தி பேச எதுவுமில்லை.

இதற்கு மேலும் மண் சோறு தின்பதும், அலகு குத்தி காவடி எடுப்பதும் பக்தர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் எங்க தலைவரைப் போல வள்ளல் உண்டா, தன்னலம் கருதா தலைவர் உண்டா என்று மட்டும் கோஷமிடாதீர்கள். காதில் தேள் வந்து பாயுற மாதிரி இருக்கு.

No comments:

Post a Comment