Tuesday, 13 May 2014

பணத்தைச் சேமிக்க சிறந்த 10 வழிகள்

சிலர், நிறையச் சம்பாதித்தாலும், 'கையில் எதுவுமே இல்லை' என்பார்கள். சிலரோ, குறைவான வருவாய் பெற்றிருந்தாலும், குறிப்பிட்ட காலத்தில் ஓரளவு வசதியான நிலையை எட்டியிருப்பார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? சிலருக்கு பணத்தைச் சேமிப்பது, செலவுகளைக் குறைப்பது இயல்பான பழக்கம் ஆகியிருக்கிறது. 

சிலருக்கு அக்கலை கைவருவதில்லை. சேமிப்பின் தாரக மந்திரமே சிக்கனம் தான். நீங்கள் நீண்டகால பண சேமிப்புத் திட்டத்தில் சேருவதைவிட, தினமும் சிறு தொகையை சிக்கனம் பிடிப்பதே பெரிய பலன் தரக்கூடியதாகும். 

முதலில் நீங்கள் பணத்தை எந்த வழியில் செலவு செய்கிறீர்கள் என்பதைக் கவனித்து, தவிர்க்க வேண்டியதை தவிருங்கள். பிறகு தானாக செல்வம் பெருகத் தொடங்கும். பணத்தைச் சேமிப்பதற்கான 10 வழிகள் இதோ... 

1. செல்போன் அழைப்புகளை அவசியமான நேரத்தில் மட்டும் பேசுங்கள். கண்டிப்பாக குறிப்பிட்ட தொகை மிஞ்சும். 

2. பணிபுரிபவர்கள் அன்றாடம் தவறாமல் பானங்களுக்குச் செலவு செய்கிறார்கள். ஒருநாளில் பலமுறை காபி குடிப்பவராக இருந்தால் பிளாஸ்க்கில் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். 

3. சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பணத்தைச் சேமிப்பது நல்ல வழி. வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் சிறு தொகையை சேமிப்புக் கணக்கில் போடலாம். அது 'சிறு துளி பெருவெள்ளம்' எனும் பொன்மொழிக்கேற்ப பெருகி வளரும். 

4. பணம் வீணாகும் வழியை செலவுக் கணக்கு மூலம் தெளிவாகக் கண்டுபிடிக்கலாம். சேமிக்க முடியாமல் போனதற்கான காரணத்தையும் கண்டறிந்து விடலாம். பின்னாளில் நீங்கள் மனநிம்மதியுடன் வாழ, இப்போதே நீங்கள் வீட்டுச் செலவை எழுத வேண்டும். நேற்று வரை இந்த பழக்கம் இல்லாதிருந்தால், இன்றிலிருந்தாவது வரவு- செலவைக் குறிக்கப் பழகுங்கள். 

5. வீட்டு மளிகைச் சாமான்களை மொத்தமாக வாங்கி விடுவதும் பணத்தைச் சேமிக்கும் சிறந்த வழியே.

6. அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது, உங்கள் பணத்தைக் காலியாக்கி விடும். வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது பணத்தைச் சேமிக்கும் சிறந்த சக்தியாகும். இதனால் உடல்நலமும் பாதுகாக்கப்படும். 

7. திடீர் பணத்தேவைகளுக்குக் கடன் வாங்காமல் இருக்க, அதற்கென ஒரு சிறுதொகையை தனியாக மாதந்தோறும் சேமித்து வருவது நல்ல விஷயம். 

8. வியாபாரத் தள்ளுபடி, சலுகை அறிவிப்புகளில் மயங்கி தேவையற்றதை வாங்கிச் சேர்க்காதீர்கள். அவையெல்லாம் வியாபாரத் தந்திரம் என்று உணருங்கள். 

9. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களை 'செகண்ட் ஹாண்டாக' வாங்குவது பணத்தை சேமிக்க ஒரு வழி. ஒரு பொருள் சிறந்ததா என்பதை அறிய 'செகண்ட் ஹாண்ட்' பொருட்கள்தான் சரி. 

10. வீட்டில் தேவைக்கேற்ப மின் சாதனங்களைப் பயன்படுத்துவதும், அதற்கு குழந்தைகளைப் பழக்கப்படுத்துவதும் மின் கட்டணத்தில் 'வெட்டு' விழ வைக்கும். 

வாழ்வில் சிலவற்றை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும், சிலவற்றை குறைவாக பயன்படுத்த வேண்டும், இன்னும் சிலவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த மூன்றையும் சரியாகச் செய்தாலே செலவுகள் பெருமளவு குறைந்து விடும்.

No comments:

Post a Comment