Friday 30 May 2014

பிரதமர் இல்லத்தில் மாற்றம் கோராத மோடி; அதிகாரிகள் வியப்பு!

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று 7, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறினார்.

சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 5 பங்களாக்களை கொண்ட பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் நரேந்திர மோடி தனி நபராக குடியேறும் முதல் பிரதமர் ஆகிறார். இதுவரை இங்கு குடியேறிய 14 பிரதமர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தான்  குடியேறினர்.

கடந்தவாரம்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் இல்லத்தை காலி செய்தார். வழக்கமாக முன்னாள் பிரதமர் காலிசெய்துவிட்டு போனபின்னர், புதிதாக அங்கு வரும் பிரதமரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே, வீட்டில் பலமாற்றங்களை செய்யுமாறு கூறுவதும், புதிதாக பர்னிச்சர்கள், ஆடம்பர அலங்கார விளக்குகள், வண்ணம் பூசுவது என லட்சக்கணக்கான ரூபாய்க்கு செலவு வைத்துவிடுவார்கள்.

பிரதமர் குடும்பத்தினர் இவ்வாறு என்றால், அமைச்சர்களாக பொறுப்பேற்பவர்களும், அவர்களது குடும்பத்தினர்கள் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இருக்காது.

ஆனால் மோடி அதுபோன்ற எதுவும் செய்யுமாறு கோரவில்லை. அவர் வருவதற்கு  பிரதமர் பங்களாவில்புதிதாக பெயிண்ட் மட்டுமே அடிக்கப்பட்டதாகவும், கட்டில் சோபாக்கள் போன்ற பர்னிச்சர்கள் எதுவும் மாற்றப்படவில்லை என்றும், அவற்றை சுத்தப்படுத்த மட்டுமே செய்ததாகவும், மோடியின் இந்த அணுகுமுறை கடந்த கால பிரதமர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் அணுகுமுறையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் தங்களுக்கு வியப்பை தருவதாக மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோடியின் இந்த எளிமைக்கு அவர் தனது குடும்பத்தினர் யாரையும் அழைத்து வராமல் பிரம்மச்சாரியாகவே குடியேறியதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

வழக்கமாக புதிய பிரதமர் குடியேறுவதற்கு முன்னர் அங்கு செய்யப்பட வேண்டிய அலங்கார மற்றும் ஓவியங்கள் குறித்த யோசனைகளை கேட்டு டெல்லி 'நேஷனல் கேலரி ஆப் மார்டன் ஆர்ட்' டை சேர்ந்த அதிகாரிகளுக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து ஓலை வரும். ஆனால் இந்த முறை தங்களுக்கு அப்படி எதுவும் வேண்டுகோள் கடிதம் வரவில்லை என்கிறார்கள் அவர்கள்.

மோடியை பொறுத்தவரை அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோதும், முதல்வர் இல்லத்தில் அவர் இதேப்போன்ற எளிமையுடன்தான் வசித்தார். காந்திநகரில் மாநில கவர்னர் மாளிகையின் சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்திருக்கும் அந்த இல்லத்தில் மோடி வசித்தபோது லிவிங் ரூம் எனப்படும் முன்னறையில் வருபவர்கள் அமர 4 நாற்காலிகளும், அதன் மத்தியில் ஒரு மேஜை மட்டுமே போடப்பட்டிருந்தன. அதே எளிமையைத்தான் மோடி தற்போது பிரதமர் ஆன பின்னரும் பின்பற்றுவதாக மோடிக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். 

No comments:

Post a Comment