புதிய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள பத்து அம்சங்கள் நாடு சிறந்த பாதையில் செல்ல வழிவகுக்கும் என ஐஏஎஸ் அதி காரிகள் கருத்து கூறி உள்ளனர்.
இது குறித்து தி இந்துவிடம் ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரம் கூறியதாவது: நாட்டில் சட்டங் களை இயற்றுவது அரசியல் வாதிகள் என்றாலும் அதை அமல்படுத்துவது அதிகாரிகள் தான். சில பிரச்சினைகளில் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து அதிகாரிகளும் சிக்கிக் கொள் கிறார்கள். இதனால் அரசியல் வாதிகளிடம் இருந்து விலகி இருந்து பணியாற்றவே அதிகாரி கள் வட்டம் விரும்புகிறது. இதற்கு முடிவுகட்டும் பொருட்டு மோடி அறிவித்த 10 அம்சங்களில் முதல் இரண்டு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
அதிகாரிகளிடம் நம்பிக்கை
பின்விளைவுகள் குறித்த அச்சம் இல்லாத வகையில் அதிகாரிகள் வட்டாரத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பது மிகச் சிறந்த முடிவு. தற்போதைய நிலையில் அமைச்சர் சொல்வதை கேட்கும் அதிகாரிகளே அந்தந்த துறைகளில் பணியாற்ற முடியும்.
உதாரணமாக ஒரு கோப்பை அனுப்புவதற்கு முன்பாகவே அதை என்ன செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுவிடும். இதற்கு ஏதுவாகத்தான் இணைச்செய லாளர் மற்றும் செயலாளர் களை பணியில் அமர்த்துவார்கள். இப்படி அமர்த்தப்படும் அதிகாரி கள் சுதந்திரமாகப் பணியாற்ற முடியாது. இதுதான், 2ஜி அலைக் கற்றை, நிலக்கரிச் சுரங்கம் போன்ற ஊழல்கள் பெருக முக்கியக் காரணம்.
புதிய யோசனைகள் வரவேற்பு
அடுத்து புதிய யோசனைகள் வரவேற்கப்படுவதாகவும் அதை செயல்படுத்த அதிகாரிகளுக்கு முழுசுதந்திரம் அளிக்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார். இது முதல் அறிவிப்புடன் சம்பந்தப் பட்ட அம்சமாகும். எப்படி எனில் மத்திய அரசில் உள்ள அதிகாரிகள் ஒரே மாதிரியான விஷயத்தை செய்ய பழகி விடுகிறார்கள். ஒரு புதிய சிந்தனை இல்லாமல் ஐந்து வருடகாலத்தை எப்படி பிரச்சனை இன்றி முடிப்பது என்பதில் அவர் களது கவனம் இருந்து விடுகிறது. எனவேதான் நரேகா போன்ற சிறந்த திட்டங்கள் சரியாக செயல் படுத்தப்படவில்லை. இது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே மாதிரியான சிந்தனையில் அமைக் கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக வளர்ந்த தென் மாநிலங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட திட்டம் வளர்ச்சி அடையாத பிஹார் போன்ற வட மாநிலங்களில் பிரச் சினை வருகிறது. இதன் காரணங் களைக் கண்டுபிடித்து புதிய முறைகளை மாநிலங்களுக்கு ஏற்றவகையில் செயல்படுத்தி இருக்க வேண்டும்.
இப்படி சிறந்தமுறைகளில் அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருது வழங்கி உற் சாகப்படுத்த வேண்டும். ஆனால், அரசுக்கும், ஆளும் அரசியல்வாதி களுக்கும் ஆதரவாக செயல்படும் அதிகாரிகளுக்கே புதிய பொறுப்பு களும் விரைவான பதவி உயர்வும் கிடைப்பது வழக்கமாக உள்ளது.
இ-டெண்டர் முறை
மூன்றாவதாக நாட்டு மக்களின் முக்கியப் பிரச்சினைகளான கல்வி, சுகாதாரம், குடிநீர், எரிசக்தி மற்றும் சாலைவசதிகள் முக்கியம் எனவும் பிரதமர் கூறியுள்ளார். இதை தீர்த்து விட்டால் அரசுக்கு ஐம்பது சதவிகித வெற்றி உறுதி. இதற்காக, இலவசத்திட்டங்களை தவிர்த்து இரண்டு மடங்கு பட்ஜெட் ஒதுக்கப்படுவது அவசியம்.
நான்காவதாக இணைய தளத்தில் டெண்டர் விடும் முறை ஊழலை ஒழிக்கும் முக்கிய அம்சமாகும். தற்போது நிலவும் முறையில் பின்தேதியிட்டவை நுழைகின்றன, குறைவாகக் குறிப்பிடப்பட்ட டெண்டர்களின் தொகை தெரிந்து விடுகிறது, சொந்தங்களும் கட்சிக்காரர்களும் டெண்டர் பெறுகிறார்கள். மோடி அறிவித்துள்ளதில் அப்படி பெற முடியாது. ஆனால் அதன் ’பாஸ்வேர்ட்’களை ரகசியமாக பாதுகாப்பது அவசியம். அதற்காக நேர்மையான, நம்பிக்கையான அதிகாரிகளிடம் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும்.
அமைச்சக ஒருங்கிணைப்பு
ஐந்தாவதாக அமைச்சகங்களுக்கு இடையே கிளம்பும் பிரச்சினை களை ஒழிக்க அதன் உள் ஒற்றுமை அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படிதான் மோடியின் புதிய அமைச்சகங்கள் பல ஒன்றிணைக் கப்பட்டுள்ளன. தற்போது வெளியில் என்ன நடக்கிறது எனத் தெரியாமலே பல திட்டங்கள் அமைச்சகங்களில் அறிமுகப்படுத் தப்படுகிறது. உதாரணமாக விவ சாயத் துறையில் அமலாக்கப்படும் திட்டங்கள், விளைச்சலின் ஏற்று மதியைப் பொறுத்து முடிவு செய்யப்பட வேண்டும். இல்லை யெனில் விலைவாசி உயர்வு, பண வீக்கம் போன்ற பிரச்சினைகள் நாட்டில் ஏற்படக் காரணமாகிவிடும்.
ஆறாவது அம்சமாக அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடி பலனை அளிப்பதாகவே இருக்க வேண்டும். இது தொலை நோக்குப் பார்வைகளில் நாட்டின் மக்கள் நலன் காக்கும் வகையில் அமைய வேண்டியதை குறிப் பிடுகிறது. மத்திய அரசின் பல திட்டங்கள் மாநிலங்களில் குறைபாடாக உள்ளது. உதாரண மாக குறிப்பிட்ட நாட்களில் அரசு சான்றிதழ்கள் பெறுவது, குடிநீர் போன்ற பிரச்சினைகளை தீர்ப்பது போன்றன சில மாநிலங்களில் மட்டுமே உள்ளது. இதனால் மக்கள் குறைகள் தீராமல் அதிகரித்து வருகிறது.
இதை ஒழிக்க பிஹாரில் “பொதுச்சேவை உரிமை” திட்டம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்து குறிப்பிட்ட நாட்களில் தராவிட்டால், சம்பந்தப் பட்ட அதிகாரிக்கு ரூ.5,000வரை அபராதத் தொகை விதிக்கப்படும். இதன் வெற்றியை பார்த்து மத்தியப் பிரதேசத்திலும் இத்திட்டம் அறி முகப்படுத்தப்பட்டது. எனவே இந்த மோடியின் திட்டத்தால் கடைநிலை ஊழியர் முதல் அதிகாரிகள் வரை முறையாக செயல்படத் தொடங்கி விடுவார்கள். இந்த அம்சத்தை உண்மையிலேயே பயன்படுத்தினால் நாட்டுக்கு மிகவும் நல்லது.
பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை
ஏழாவது அம்சமான பொருளாதாரத்தின் மீது கவனம் செலுத்தினால் நாட்டில் பணவீக்கம் குறைந்து ஏற்றுமதி அதிகரிக்கும். இதற்கு உதாரணமாக சீனாவின் பட்டாசுகள் சிவகாசியைவிட சிறப்பானது. ஆனால் அதன் இறக்குமதியை அனுமதித்தால் சிவகாசியில் பட்டாசு தொழில் படுத்துவிடும்.
இந்த அம்சத்தை அமல்படுத்துவது மோடிக்கு ஒரு பெரிய சவாலாகும். இதை அவர் எப்படி கையாளப் போகிறார் என்பதை பொறுத்து நாடு சிறக்கும். ஏனெனில் நரேகா, உணவு மற்றும் உரங்களுக்கான மானியங்களுக்கு அரசு ரூபாய் இரண்டு லட்சம் கோடி வரை செலவு செய்கிறது. இதை உலகப் பொருளாதாரத்தின் அடிப்படையில் அளித்திருந்தால் நாட்டில் வேலை வாய்ப்பும், விவசாயிகள் தற்கொலைகளும் தொடராது.
அந்நிய முதலீடு ஈர்ப்பு
எட்டாவதாக உள்கட்டமைப்பு மற்றும் தொழில் முதலீடுகளின் சீர்திருத்தம் மிகவும் முக்கியமான அம்சமாகும். நம் நாட்டை விட சிறியதான சிங்கப்பூர் மற்றும் தென் கொரியாவில் இந்தியாவைவிட வெளிநாட்டு முதலீடுகள் பல மடங்கு அதிகம். இதற்கு உள்கட்டமைப்பு ஒரு முக்கியக் காரணம். சிங்கப்பூரின் விமான நிலையம் மற்றும் துறைமுகம் உலகிலேயே மிகச் சிறந்ததாக விளங்குகின்றன. இத்தனைக்கும் உலகில் சிறந்ததாகக் கருதப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் நம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் பயிற்சி பெற்று சென்றதாகும்.
அந்நிய முதலீடுகள் நம் நாட்டிற்கு வர அதன் முறைகள் மிகவும் விரைவாகவும் எளிதாகவும் இருக்க வேண்டும். குஜராத்தில் ஒற்றைச் சாளர முறை இருப்பதனால்தான் அங்கு அந்நிய முதலீடுகள் அதிகம் என்பதை மோடி கருத்தில் கொண்டிருக்கிறார்.
ஒன்பதாவதாக அமல்படுத்தப்படும் திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்கு என வரையறுக்கும்போது அதை செயல்படுத்தும் முறைகளையும் மனதில் கொள்ள வேண்டும். உதாரணமாக ‘சர்வ சிக்சா அபியான்’எனும் அனைவருக்கும் கல்வி திட்டம் 2015 என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இன்னும் ஒரு வருடம் மட்டும் உள்ள நிலையில் பாதி பேர் கல்வி பெறாத நிலை உள்ளது. இதுபோன்ற திட்டங்களை வரையறுக்கும் அதிகாரிகள் நல்ல அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பது அவசியம்.
நிலையான முதலீடு
கடைசியாக அரசுக் கொள்கைகள் நிலையான தன்மையும், பயன்படக்கூடிய வகையிலும் இருத்தல் அவசியம். இந்த அம்சத்தை தொலைநோக்குப் பார்வையில் வகுக்க வேண்டும். பத்து வருடங்கள் முன்பு மத்திய அரசு, ‘ஸ்வர்ண ஜெயந்தி கிராம் ஸ்வராஜ் யோஜ்னா” என கிராமப்புற பெண்களுக்கான சுயஉதவி குழுக்களுக்கான கடன் வசதியை அமல்படுத்தியது. இதில் ஒரு குடும்பத்திற்கு தேவையான அடிப்படை பிரச்சனைகள் மனதில் கொள்ளப்படவில்லை. ஆனால், இதேபோல் ஆந்திரா அரசு உலகவங்கி உதவியுடன் அறிமுகப்படுத்திய எஸ்.இ.ஆர்.பி. திட்டத்தில் முதலில் குடும்பத்தின் அடிப்படை தேவைக்காகவும் பிறகு தொழிலுக்காகவும் என கடன் வசதி செய்தது. அதை பார்த்த மத்திய அரசு தனது திட்டத்தைக் கைவிட்டு ஆந்திராவின் வெற்றி பெற்ற திட்டத்தை மேற்கொண்டு விட்டது.
எனவே எந்த ஒரு திட்டத்தையும் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அந்த மாதிரியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமல்படுத்தி பார்க்க வேண்டும். இதை மோடி சரியாக செய்தால் நாட்டுக்கு நல்லது என அதிகாரிகள் தரப்பில் கூறினார்கள்.
No comments:
Post a Comment