Monday, 5 May 2014

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்!
VAO முதல் IAS வரை!

 ரூபாய்  1. ஏன் இந்தத் தொடர்?
கல்லூரியில் படித்து முடித்தவுடன் அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதுவதில் இன்றைய இளைஞர்கள் காட்டும் ஈடுபாடு உண்மையிலேயே வியக்கவைக்கிறது. வி.ஏ.ஓ குரூப் IV தேர்வுகள் தொடங்கி, வங்கி வேலை, டி.என்.பி.எஸ்.சி குரூப் I, குரூப் II தேர்வுகள் உள்பட ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் வரை அவர்கள் எழுதத் தயாராகும் போட்டித் தேர்வுகள் (Competitive Exams) பல.
இந்தப் போட்டித் தேர்வு களை எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த அறிவு அவசியம் தேவை. அவர்களுக்கு அறிவியலும் தெரிந்திருக்க வேண்டும்; அரசியல் அமைப்பை யும் அறிந்திருக்க வேண்டும். புவியியலும் தெரிந்திருக்க வேண்டும். பொருளாதாரமும் புரிந்திருக்க வேண்டும்.
வரலாறு, புவியியல் போன்ற பாடங்கள் பள்ளியிலேயே சொல்லித்தரப்படுகின்றன. ஆனால், பொருளாதாரப் பாடம் உயர்நிலைப் பள்ளிகளி லிருந்துதான் கற்றுத்தரப்படுகிறது. மற்ற பாடங்களைப்போல இல்லாமல், பொருளாதார பாடத்தில் சொல்லப்படும் கருத்தாக்கங்களை விரிவா கவும் எளிமையாகவும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு வழியில்லாததாலேயே பொருளாதாரப் பாடம் பலருக் கும் ஒரு சவாலாக இருக்கிறது.  
வி.ஏ.ஓ. தேர்வு தொடங்கி ஐ.ஏ.எஸ். தேர்வு வரை அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் இந்தியப் பொருளாதாரம் குறித்த கேள்விகள் உண்டு. தேர்வின் தகுதிக்கேற்ப வினாக்களின் தரம்தான் வேறுபடும்.
ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளில் பொருளாதாரப் பாடத்திலிருந்து மட்டும் 10-20%  என்கிற அளவில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தெரிந்துகொண்டு எழுதுபவர்கள், அந்தத் தேர்வில் நிச்சயம் அதிக மதிப்பெண்களை பெற்று வெற்றி பெறுவார்கள்.
கல்லூரியில் நீங்கள் எந்தப் பாடம் படித்திருந்தாலும் பொருளாதாரப் பாடத்தில் நீங்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்குண்டான வழிவகை களை செய்து தருவதுதான் இந்தத் தொடரின் முக்கிய நோக்கம்.
போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு மட்டும்தான் இந்தத் தொடரா என மற்றவர்கள் நினைக்க வேண்டாம். விலைவாசி உயர்வு, வட்டிவிகிதம் உயர்வு என தினசரி வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஆயிரமாயிரம் பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம், பொருளாதாரமே. இந்தத் தொடரில் சொல்லப்படும் விஷயங்கள் அனைத்துமே பொருளாதாரம் பற்றிய எல்லாத் தரப்பினர்களின் அடிப்படை அறிவை நிச்சயம் உயர்த்துவதாகவே இருக்கும்!  
ரூபாய் 2. மாதிரித் தேர்வு!
போட்டித் தேர்வுகளில் இந்தியப் பொருளாதாரம் குறித்துக் கேட்கப்பட்ட / கேட்கப்படும் இரண்டு  கேள்விகள் கீழே தந்திருக்கிறேன்.  முதலில் உங்கள் விடை எது எனக் குறித்துக்கொள்ளுங்கள்.  பின்னர் சரியான விடை எது என்பதற்கான விளக்கத்தைப் படியுங்கள்.
1. Which of the following is called ‘National Income’?

a) Gross Domestic Product

b) Gross National Product

c) Net Domestic Product

d) Net National Product
பின்வருவனவற்றில் தேசிய வருமானம் என்பது யாது?
2. In Every year, ‘Economic Survey’ is released in India by

a) Reserve Bank of India

b) Ministry of Finance

c) Central Statistical organization

d) Planning commission.
ஆண்டுதோறும் இந்தியாவில் 'பொருளாதார ஆய்வறிக்கை’யை வெளியிடுவது
A) மத்திய ரிசர்வ் வங்கி
B) நிதி அமைச்சகம்
C) மத்திய புள்ளியியல் நிறுவனம்
D) திட்டக் குழு
சரியான விடைகளை குறித்து முடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் விடை சரியா என்பதைத் தெரிந்துகொள்ள கீழ்வரும் விளக்கத்தைப் படியுங்கள்.  
1. முதல் கேள்விக்கான சரியான விடை (D) நிகர தேசிய உற்பத்தி  என்பதாகும். இந்தக் கேள்வி 1997-ம் ஆண்டு ஐ.எ.எஸ் தேர்வில் கேட்கப்பட்டது.
தேசிய வருமானம் என்றவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது ஜி.டி.பி (GDP)  என்ற சொற்றொடர்தான். Gross Domestic Product (GDP) எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பாகும். அதைத் தேசிய வருமானம் என்று குறிப்பிடுவதில்லை.
இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் நிகர வருமானத்தையும் (Net Factor Income from Abroad) கூட்ட கிடைப்பது மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product) ஆகும். இந்த மொத்த தேசிய உற்பத்தியில் இருந்து உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட காரணிகளின் தேய்மான மதிப்பை (Depreciation) கழிக்கக் கிடைப்பது நிகர தேசிய உற்பத்தி (Net National Product) ஆகும். இந்த நிகர தேசிய உற்பத்தியைத்தான் தேசிய வருமானம் (National Income) என்கிறோம்.
தேசிய வருமானம் கணக்கிடுவது பற்றிய விவரங்களையும், இதுகுறித்துக் கேட்கப்படும் பல்வேறு கேள்விகளையும் வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
2. இரண்டாம் கேள்விக்கான சரியான விடை (B) நிதி அமைச்சகம் என்பதாகும். 1998-ல் நடைபெற்ற ஐ.ஏ.எஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி இது.
இந்தியாவில் அரசு சார்ந்த பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளைக் கவனிப்பதற்குப் பல்வேறு அமைப்புகள் உள்ளன. அவற்றின் பணிகள் அதிகார வரம்புகள் அவற்றின் பணிகளுக்கு இடையேயான வேறுபாடு ஆகியவற்றைக் குறித்த கேள்விகள் ஐ.ஏ.எஸ் தேர்வில் அடிக்கடி இடம்பெறும். இந்தக் கேள்வியும் அந்த ரகத்தைச் சேர்ந்ததுதான்.
ஆண்டுதோறும் பட்ஜெட் வெளியிடுவதற்கு முந்தைய நாள் நிதி அமைச்சகம் கடந்த ஆண்டில் பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட வருமானம் மற்றும் செலவினங்கள் எவ்வளவு தூரம் எட்டப்பட்டன என்பது குறித்த பொருளாதார ஆய்வு அறிக்கையை வெளியிடுகிறது.
இந்தப் பொருளாதார ஆய்வு அறிக்கையை வெளியிடுவது, பட்ஜெட் தயார் செய்வது அரசின் செலவுகளுக்காக இந்திய திரள் நிதியிலிருந்து (Consolidated Fund of India) பணம் பெறுவது, ஐந்தாண்டு திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்குத் திட்டக் குழுவின் பரிந்துரைப்படி நிதி ஒதுக்கீடு செய்வது, நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநில அரசுகளுக்கு இந்திய வரி வருவாயிலிருந்து நிதியை பகிர்ந்து அளிப்பது போன்ற பொருளாதார விஷயங்கள் நிதி கொள்கையின் கீழ் வருகின்றன. இதை ஆங்கிலத்தில் Fiscal Policy என்பார்கள்.
நிதிக் கொள்கை சார்ந்த விஷயங்கள் இந்திய நிதி அமைச்சகத்தால் கையாளப் படுகிறது.
ஆனால், Monetary Policy எனப்படும் பணக் கொள்கை ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும். வங்கிகளுக்குக் கடன் கொடுப்பது, வங்கிகளிலிருந்து முதலீட்டைப் பெறுவது, வங்கிகளின் பண இருப்பை நிர்ணயிப்பது, கடன்களுக்கான வட்டி விகிதத்தை மறைமுகமாகக் கட்டுப்படுத்துவது, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறுவகையான நடவடிக்கை கள் எடுப்பது போன்றவை பணக் கொள்கையின் கீழ் வருகின்றன.
நாட்டின் தேசிய வருமானத்தைக் கணக்கிடும் பொறுப்பு மத்திய புள்ளியியல் நிறுவனத்திடம் உள்ளது. ஐந்தாண்டுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வது திட்டக் குழுவின் தலையாய பணி. இந்தியாவில் அரசு பொருளாதார நடவடிக்கை சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அவை களின் பணியாற்றுதலுக்கு இடையேயான சமநிலை குறித்த கேள்விகள் பற்றிய பல்வேறு சுவையான விஷயங்களை இந்தத் தொடரில் பார்க்க இருக்கிறோம்.


 ஆசிரியர் பற்றி...
டாக்டர் சங்கர சரவணன், உத்தரபிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் பயின்று முதுநிலை பட்டம் பெற்றவர். பதினைந்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக போட்டித் தேர்வுகள் குறித்த ஆய்வாளராகவும், பயிற்சியாளராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்ட போட்டித் தேர்வு - பொது அறிவு நூல்களான கையளவு களஞ்சியம், பொது அறிவுக் களஞ்சியம், வி.ஏ.ஓ. தேர்வுக் களஞ்சியம் போன்ற பல நூல்கள் விற்பனையில் சாதனை படைத்து, போட்டித் தேர்வுக்கு பயிலும் தமிழக மாணவர்களுக்கு உதவியாக இருக்கின்றன. இவரது வழிகாட்டுதலில் வெற்றி பெற்ற மாணவர்கள் பலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக உள்ளனர்.
thanks:v

No comments:

Post a Comment