கழிப்பறையை சுத்தம் செய்த நாசர்
ஷகிலாவும், சன்னி லியோனும்
பாலியல் தொழிலாளி, பாலியலை தூண்டும் படங்களில் நடிக்கும் நடிகை என யாராக இருப்பினும் அவர்களின் சமூக அந்தஸ்து அவர்கள் புழங்கும் இடங்கள், பண பலம், வர்க்க பலம் ஆகியற்றை முன்னிட்டே கட்டமைக்கப்படுகிறது.
ஷகிலா பாலியலை தூண்டும் படங்களில் நடித்தவர். விரும்பி அல்ல, ஆரம்பகால நிர்ப்பந்தங்களால். ஆனால் நீலப்படம் அளவுக்கு அவள் கீழிறங்கவில்லை. ஷகிலாவின் இன்றைய சமூக அந்தஸ்து எப்படிப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். படங்களிலும் அவரை பாலியல் நகைச்சுவைக்கு பயன்படும் போகப் பொருளாகவே பயன்படுத்துகிறார்கள். தூள், பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவரை சினிமா விழாக்களுக்கு அழைப்பதற்குக்கூட இங்கு ஆளில்லை. எனில் சினிமா தாண்டிய நிகழ்வுகளில் பார்வையாளராகக்கூட அவரை கற்பனை செய்ய முடியாது. இதுதான் இன்றைய தேதியில் ஷகிலாவின் சமூக அந்தஸ்து.
சன்னி லியோனை எடுத்துக் கொண்டால் அவர் நீலப்பட உலகில் பிரவேசித்தது ஏழ்மையாலோ, நிர்ப்பந்தத்தாலே அல்ல. அவரே விரும்பி அந்தத் துறைக்குள் நுழைகிறார். அப்பட்டமான நீலப்படங்களில் நடித்து அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறார். இன்று அவரது சமூக அந்தஸ்து பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்திப் படவுலகின் சூப்பர் ஸ்டார்கள் சல்மான், ஷாருக், அமீர்கான் குறித்து சன்னி லியோனிடம் கருத்து கேட்கிறார்கள். விழாக்களுக்கு தலைமையேற்க அழைக்கிறார்கள். அவரை ஒரு ரோல் மாடலாக மாற்றுகிற அனைத்தும் நடந்து வருகிறது.
ஷகிலாவுக்கும், சன்னி லியோனுக்கும் சமூக அந்தஸ்தில் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகள்? சன்னி லியோன் புழங்கியது மேட்டுக்குடியினரிடம். ஷகிலா ஊருக்கு வெளியே இருக்கும் திரையரங்குகளின் நாயகி. பாலியல் தொழிலாளியோ, பாலியல் படங்களில் நடிக்கும் நடிகையோ... யாராக இருப்பினும் மேட்டுக்குடி என்றால் அது தனி அந்தஸ்து. நிர்வாணப் படங்களால் விற்கக் கூடியது என்றாலும் ப்ளே பாய்க்கு இருக்கும் மரியாதை சாதாரண தமிழ் செக்ஸ் புத்தகங்களுக்கு இருப்பதில்லை.
இதனை கரகாட்டம் - பரதநாட்டியம், கிராமிய பாடல்கள் - கர்நாடக சங்கீதம் என்று வேறுபல துறைகளுக்கும் நீட்டித்துக் கொள்ளலாம்.
ஒருவரின் சமூக அந்தஸ்து அவர்கள் செய்யும் தொழிலால், அவர்களின் குணத்தால் ஏற்படுவதில்லை. அவர்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதாலேயே கட்டமைக்கப்படுகிறது.
இந்த இடத்தில்தான் கார்ல் மார்க்ஸ் இன்னும் அதிகமாக தேவைப்படுகிறார்.
கழிப்பறையை சுத்தம் செய்த நாசர்
நடிகர் நாசர் சென்னை அரசு திரைப்படக் கல்லூரியின் மாணவர். அவர் மட்டுமில்லை. ரஜினிகாந்த் போன்ற பெரிய பிரபலங்களும் இந்தக் கல்லூரியில் படித்தவர்கள். இன்று கல்லுnரியின் நிலை சொல்லும்படி இல்லை. கல்லூரிக்கு சொந்தமான நிலம் வேறு துறைகளுக்கு பிரித்துக் கொடுத்தது போக சின்ன ஒண்டுக் குடித்தனம்தான் இப்போது எஞ்சியுள்ளது. அதுவும் பாழடைந்துபோய்.
தான் படித்த கல்லூரிக்கு மார்ச் இறுதியில் ஒருநாள் நாசர் வந்திருக்கிறார். மாணவர்கள், ஆசிரியர்கள் என சகலரையும் கோபித்துக் கொண்டதாக தெரிகிறது. பிறகு ஆவேசத்துடன் அங்கிருந்த கழிப்பறையை துடைப்பத்தால் சுத்தம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். நாம பயன்படுத்துற கழிப்பறையையே சுத்தமாக வச்சுக்கத் தெரியலைன்னா எப்படி வெளியே வந்து நல்ல சினிமா எடுப்பீங்க என்று கேட்டுக் கொண்டே சுத்தம் செய்திருக்கிறார். மாணவர்களும், ஆசிரியர்களும் பதறிப்போய், நாங்களே செய்துக்கிறோம் என்றதை நாசர் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லையாம். கடைசியில் எப்படியோ கெஞ்சி கூத்தாடி துடைப்பத்தை அவரிடமிருந்து கைப்பற்றியிருக்கிறார்கள்.
நாசர் இதனை நிச்சயம் விளம்பரத்துக்காக செய்யவில்லை. எந்த ஊடகத்திலும் இது வெளிவரவில்லை என்பதுடன், திட்டிவாசல் இணையப் பக்கத்தை எதேச்சையாக பார்க்காமல் போயிருந்தால் நமக்கும் இது தெரியவந்திருக்காது.
நல்ல சினிமா என்பது சினிமா சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. சினிமா என்றில்லை அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையது. ஒரு பொருளை உருவாக்குகிறோம் என்றால் அது உருவாகிவரும் ஒவ்வொரு படிநிலையிலும் அதன் தரம் பரிசோதிக்கப்பட வேண்டும். என்றால் மட்டுமே முழுமையடைந்த பொருள் தரமாக இருக்கும். ஆனால் நாம் அனைத்திலும் பொறுப்பில்லாமல் செயல்பட்டுவிட்டு இறுதி வடிவத்தில் மட்டும் தரத்தை எதிர்பார்க்கிறோம்.
பொருள்முதல்வாதம் இங்கேயும் தேவைப்படுகிறது.
மேலும், சிதிலமடைந்த தங்களின் பள்ளிக்கூடங்களை முன்னாள் மாணவர்கள் சரி செய்து தருகிற செய்தியை அவ்வப்போது படிக்கிறோம். அரசு திரைப்படக் கல்லூரி என்பதால் அப்படியொரு மாணவன் இந்த கல்லூரிக்கு கிடைக்காமல் போனது கல்லூரியின் துரதிர்ஷ்டம்
No comments:
Post a Comment