ராம் ஜெத்மலானியின் கறுப்புப் பண வேட்டை!
இந்தத் தேர்தலில் தேசியக் கட்சிகள் எல்லாம் சொல்லும் ஒரு வாக்குறுதி, கறுப்புப் பணத்தை மீட்போம் என்பதுதான். இதனைக் கையில் எடுத்து போராடி வருகிறார் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ராம் ஜெத்மலானி. இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தேகத்துக்கு உரிய சில வேட்பாளர்கள் குறித்து ராம் ஜெத்மலானி இந்திய தேர்தல் கமிஷனிடமும் புகார் கூறியுள்ளார். இவர் நரேந்திர மோடியின் ஆதரவாளராக அறியப்பட்டாலும், பி.ஜே.பி-யில் இருந்து நீக்கப்பட்டவர். ராம் ஜெத்மலானியை டெல்லியில் சந்தித்தோம்.
''அரசியல்வாதிகள் மற்றும் முக்கியப் புள்ளிகளின் கறுப்புப் பணம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்ததில், என்ன உண்மைகள் வெளியாகி உள்ளன?''
''இந்தியாவுக்கு வெளியே இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்கும் விவகாரம் சம்பந்தமாக 2009-ல் உச்ச நீதிமன்றத்தை அணுகினேன். சுவிஸ் வங்கிகளில் கணக்குக் காட்டாமல் பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் விவரங்களை ஜெர்மனி அரசு ரகசியமாகப் பெற்றது. 'இந்தத் தகவல்களை எந்தவித நிபந்தனையோ, ஆதாயமோ இன்றி பரிமாறிக்கொள்ளத் தயார்’ என்றது ஜெர்மனி. இதில் இந்தியர்களின் பெயர்களும் இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. ஜெர்மன் இப்படி சொல்லியும், இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை. இந்த சமயத்தில் நானோ அல்லது நரேந்திர மோடியோ பிரதமராக இருந்திருந்தால், இரவோடு இரவாகச் சென்று இந்தப் பெயர்களைப் பெற்று நாடு திரும்பியிருப்போம். ஆனால், காங்கிரஸ் அரசு அலட்சியமாக இருந்தது.
இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி சம்பந்தப்பட்டவர்களும் குறிப்பாக சோனியா காந்தியும் சம்பந்தப்பட்டு இருப்பதால், இதைக் கண்டுபிடிப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்தனர். இதனால் உச்ச நீதிமன்றத்தில் மனுவைப் போட்டு இரண்டு வருடங்களாக வாதாடி வந்தோம். இறுதியில் 2011 ஜூலையில் நீதிமன்றம் தனது கோபத்தைத் தீர்ப்பில் வெளிப்படுத்தியது. கிட்டதட்ட 90 லட்சம் கோடி ரூபாய் சுவிஸ் வங்கிகளில் குவிந்து கிடக்கிறது. இதை மீட்டுக் கொண்டுவந்தால் இந்தியாவில் ஒரு குடும்பத்துக்கு மூன்று லட்ச ரூபாய் கிடைக்கும். மத்திய அரசு மீது நம்பிக்கை இழந்த நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதிகள் இருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து உத்தரவு போட்டது.''
''இந்த கறுப்புப் பண முதலைகளின் பெயர்களையாவது மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கொடுத்ததா?''
''இல்லை! மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சில பெயர்களை ஜெர்மன் அரசிடம் இருந்து பெற்றதாகவும், ஆனால் ஜெர்மன் இந்தப் பெயர்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கொடுத்ததாகவும் கூறினர். இது முற்றியிலும் பொய். இதில் எது உண்மை என்று சமீபத்தில் நான் ஜெர்மன் சென்று அறிந்துவந்தேன். அவர்கள் அப்படி எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. 'இந்தப் பெயர்களை ராம் ஜெத்மலானியிடம் காட்டுங்கள்’ என்றே உச்ச நீதிமன்றமும் உத்தரவு போட்டது. ஆனால், மத்திய அரசு இந்த உத்தரவுகளை மதிக்கவில்லை. அதோடு, அட்டர்னி ஜெனரலை இந்த வழக்கில் ஆஜர்படுத்தி, நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரியும் மனு போட்டது. மார்ச் 26-ம் தேதிதான் இந்த மறுபரிசீலனை மனுவை தள்ளுபடி செய்ய வைத்தோம்.''
''நீங்கள் ஜெர்மன் சென்றபோது ஏதாவது தகவல் கிடைத்ததா?''
''அங்குள்ள ஆட்சியாளர்களை சந்தித்தபோது, 'உங்கள் அரசு இந்தப் பெயர்களை எல்லாம் கேட்கவில்லை. அவர்கள் தர வேண்டாம் என்கின்றனர். ஆனால், எதிர்க்கட்சியில் இருக்கும் நீங்கள், அந்தப் பெயர்களைக் கேட்கிறீர்கள். பொறுப்பானவர்களிடம் இருந்து கடிதம் தந்தால், நாங்கள் தரத் தயார். அதிலும் பிரதமர் வேட்பாளராக இருக்கிற நரேந்திர மோடி கடிதம் தந்தால், எதிர்க்கட்சிகளுக்கு இதில் உள்ள விருப்பத்தை அறிய முடியும்’ என்றனர். அந்த நல்ல செய்தியுடன் இந்தியா திரும்பினேன்!''
''நரேந்திர மோடி கடிதம் கொடுத்தாரா? அதை அனுப்பிவிட்டீர்களா?''
''ஆமாம். மோடியிடம் கடிதத்தைப் பெற்று அனுப்பிவிட்டேன். நாங்கள் நிச்சயமாக கறுப்புப் பண முதலைகளின் பெயர்களைப் பெறுவோம்''
''காங்கிரஸ் அரசு இந்தப் பெயர்களை வெளியிடாததற்கு என்ன காரணம்?''
''அனுமானத்தின் அடிப்படையில் சொல்கிறேன். 1991-ல் ராஜீவ் காந்தி மறைந்தார். அதற்குப் பின்னர் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையான
Schweizer Illustrierte 1991 நவம்பர் மாதம் சில தகவல்களை வெளியிட்டது. 14 அரசியல்வாதிகள் தாங்கள் கொள்ளையடித்த ஊழல் பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கிவைத்துள்ள விவரங்கள் அந்தப் பத்திரிகையில் வெளியானது. இதில் ராஜீவ் காந்தியின் பெயர் 12-வது இடத்தில் இருந்தது. அவர் பெயரில் 2.2 பில்லியன் டாலர் பணம் இருப்பதாகச் சொன்னது. இப்போது அமெரிக்க, இங்கிலாந்து பத்திரிகைகளும் சோனியா பற்றி எழுதியது. இவை பொய் என்றால், நிச்சயமாக சோனியா காந்தி இந்தப் பத்திரிகைகள் மீது வழக்குத் தொடர்ந்திருப்பார். அப்படிச் செய்யவில்லை. ஏன் தயங்குகிறார்கள் என்று இதில் இருந்தே தெரியவில்லையா?''
''இந்தத் தேர்தலிலும் இந்தக் கறுப்புப் பணப் புள்ளிகள் போட்டியிடுகிறார்களா?''
''அந்தப் பெயர்கள் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், நிச்சயமாக ஜெர்மன் அரசு இந்தப் பெயர்களை இந்தியாவிடம் கொடுத்துள்ளது. நீதிமன்றமும் இந்தப் பெயர்களை வெளியிடக் கூறியது ஆனால், வெளியிடாது வைத்துள்ளனர். வெளியிட்டு இருந்தால், இந்த நபர்கள் காட்டும் சொத்துவிவரங்கள் வெளிச்சத்துக்கு வரும். இந்தப் பெயர்கள் வெளிவராத பட்சத்தில் இப்படிப்பட்டவர்கள் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரங்கள் எல்லாம் மோசடியாகத்தான் இருக்கும். இதனால்தான் நான் தேர்தல் கமிஷனுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.''
''ப.சிதம்பரம் மீது நீங்கள் கொடுத்த புகாருக்கு பதில் கிடைத்ததா?''
''நான் என்னுடைய கட்சிக்காரருக்காக இந்தக் கடிதத்தை அனுப்பினேன். குற்றம்சாட்டிய நபருக்கே இந்தக் குற்றச்சாட்டுகளை என் கட்சிக்காரர் அனுப்பியதற்கு, எந்தவிதமான கட்டாயமோ நிர்பந்தமோ இல்லை. நேரடியாக நீதிமன்றத்தை அணுகி இருக்கலாம்தான். ப.சிதம்பரம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு சட்ட நிபுணர். அதனால், இந்த வாய்ப்பை அவருக்குக் கொடுத்தேன். உண்மை விரைவில் வெளியில் வரும்.''
''ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது உங்களது குற்றச்சாட்டுகள் என்ன?''
''நிதி அமைச்சரின் மகனுக்கு இந்தச் சொத்துக்கள் எல்லாம் எங்கே இருந்து வந்தது என்பதுதான் நான் கேட்கும் கேள்வி. 'இது எல்லாம் தவறான தகவல், என்னுடைய எதிரிகள் கிளப்பும் வதந்திகள்’ என்று ப.சிதம்பரம் பதில் தந்தார். அவருடைய பதிலை என் கட்சிக்காரிடம் ஒப்படைத்துவிட்டேன். மே 16-ம் தேதி வெளியாகும் மக்கள் தீர்ப்புக்குப் பின்னரே திசைகள் மாறும்!''
- சரோஜ் கண்பத்
5 ஆயிரம் கோடி வெளியான கதை!
வருமானவரித் துறை கூடுதல் கமிஷனர் ஒருவர், ஒரு தனியார் தொலைக்காட்சியின் கணக்குகளைச் சரிபார்க்கிறார். அப்போது அந்த நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து ஏராளமான நிதிகள் வந்துள்ள விவரங்கள் கிடைக்கின்றன. லண்டன் உட்பட பல நிதி மார்க்கெட் பகுதிகளில் இருந்து இந்தத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு முதலீடுகள் வருகின்றன. சுமார் 21 நிறுவனங்கள் மூலம் இந்த நிதிகள் வந்துள்ளன. இந்த நிறுவனங்கள் முறையானவையா என்பது அவருக்குத் தெரியவில்லை. ஆனால், வெளிநாட்டில் உருவானவை. வந்த தொகை சுமார் 5 ஆயிரம் கோடி. இந்த நிதியை வெளிநாட்டில் இருந்தபடி யார் முதலீடு செய்தனர், வெளிநாட்டில் இருக்கும் இந்த கம்பெனிகள் யாருடையவை... என்று வருமானவரித் துறை அதிகாரிகள் துருவித் துருவி விசாரித்துள்ளனர். ஒருவேளை இந்தத் தொலைக்காட்சியினரே தங்களைக் காப்பாற்றிக்கொள்ள உண்மையைச் சொன்னார்களோ தெரியாது.
பின்னர் இந்த வருமானவரித் துறை அதிகாரிக்கு சமாதானத் தூதுகள் போயின. ஆனால், அதற்கு அவர் ஒத்துழைக்கவில்லை. அதனால் அந்த வருமானவரித் துறை அதிகாரிக்கு, பல சோதனைகள் ஏற்பட்டது. இதுவே இப்போது இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வைத்துவிட்டது. அந்த அதிகாரியின் பெயர் எஸ்.கே.ஸ்ரீவத்ஸவா. சிவகங்கைக்கு வந்து கார்த்தி சிதம்பரத்தின் மனுவைத் தள்ளுபடி செய்ய மனுகொடுத்தவர்தான் இவர்.
''இவர், துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டவர். அந்தக் கோபத்தில் இப்படிச் செய்கிறார்'' என்று ப.சிதம்பரம் பதில் அளித்தார். இந்த விவகாரத்தைத்தான் ராம் ஜெத்மலானி கையில் எடுத்துள்ளார்.
ஸ்ரீவத்ஸவா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் போடப்பட்டு, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ''இவை ஜோடிக்கப்பட்ட வழக்குகள்'' என்று அவர் நடுவர் நீதிமன்றத்துக்குப் போனார். உயர் நீதிமன்றம் போனார். புகார் சொன்ன பெண்ணே புகாரை வாபஸ் வாங்கினார். இன்னொரு வழக்கில் இவரது மனு டிஸ்மிஸ் ஆனது. இப்படி அதில் பல்வேறு கிளைக் கதைகள் உண்டு.
இப்படிப்பட்ட ஸ்ரீவத்ஸவாதான் இப்போது ப.சிதம்பரத்துக்கு எதிராக கச்சைக் கட்டிக்கொண்டு நிற்கிறார். அவரது வழக்கறிஞராகத்தான், ராம்ஜெத்மலானி இந்த விஷயங்களைக் கையில் எடுத்துள்ளார்.
thanks:v
No comments:
Post a Comment