Wednesday 2 April 2014

வலி நிவாரண மாத்திரைகளால் ஆபத்து!


எந்த ஒரு பிரச்னைக்கும் மருத்துவரின் ஆலோசனையின்றி நீங்களாகவே சுய மருத்துவம் செய்வது தவறானது. குறிப்பாக வலிகளை விரட்ட  நீங்களாகவே வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்வது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்…’’ எச்சரிக்கிற உதாரணங்களுடன்  ஆரம்பிக்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார். வலி நிவாரண மாத்திரைகளின் பின்னணியில் மறைந்திருக்கிற பேராபத்துக்களைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர்.
‘‘இந்தியாவில் மருத்துவரின் ஆலோசனையின்றி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்கிற மக்கள் 35 சதவிகிதம் பேர். அவர்களில் பாதி பேர்  படித்தவர்கள், வசதியானவர்கள். 70 சதவிகித மக்கள் வலி நிவாரண மாத்திரைகளைப் பற்றித் தெரிந்தும், 30 சதவிகிதத்தினர் அவற்றைப் பற்றித்  தெரியாமலும் எடுத்துக் கொள்பவர்கள். இவர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மருத்துவரின் பழைய மருந்துச்சீட்டை வைத்துக் கொண்டு, வருடக்  கணக்காக மாத்திரைகள் எடுப்பவர்கள். இன்னும் ஒரு பிரிவினர், தெரிந்தவர்கள் சொல்வதைக் கேட்டு மாத்திரைகள் எடுப்பவர்கள்.

இப்படி சுய மருத்துவம் செய்வதால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?
- நோயின் ஆரம்பக் கட்ட அறிகுறி அப்படியே அமுக்கப்படும்.
- நோய் சரியாகத் தீர்க்கப் படாமல் முற்றிப் போகலாம்.
- நோயும் சரியாகாமல், அறிகுறிகளும் மறைக்கப்படுவதால், நீண்ட காலமாக எடுத்துக் கொள்கிற மருந்துகளின் பக்க விளைவுகள் ஒரு பக்கம் பாதிக்க  ஆரம்பிக்கும். பண விரயமும் அதிகமாகும்.

ஒரு முறை எடுத்துக் கொள்கிற மாத்திரை வலியைக் குறைப்பதால், அடுத்தடுத்த முறைகளும் அதையே தொடர்ந்து எடுத்துக் கொள்ளப் பழகுவார்கள்.  பிரச்னைக்கான உண்மையான காரணம் அறியாமல், தவறான மருந்தை, தவறான அளவுகளில் எடுத்துக் கொள்வதன் மூலம் வலிக்கான காரணம்  உடம்புக்குள் ஒரு பக்கம் தீவிரமடைவதுடன், மருந்துகளின் பக்க விளைவுகளும் இன்னொரு பக்கம் மறைமுகமாகத் தீவிரமடையும். சாதாரண  வலிதானே, இதற்குப் போய் மருத்துவரைப் பார்ப்பதா என்கிற அலட்சியம் வேண்டாம்.


மருத்துவரிடம் போனால் ஏதேனும் வியாதியைச் சொல்லி பயமுறுத்துவாரோ என்கிற எண்ணமும் பலருக்கு உண்டு. மருத்துவரால் மட்டுமே  வலிக்கான காரணத்துக்கேற்ப, நோயாளியின் வயது, உடல்நலம், ஏற்கனவே உள்ள பிரச்னைகள் போன்றவற்றைப் பார்த்து சரியான மருந்தைப்  பரிந்துரைக்க முடியும். யாருக்கு, என்ன மருந்துகளைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் மருத்துவரால் மட்டுமே கணிக்க முடியும்.

இவற்றையெல்லாம் தவிர்த்து, எல்லா வலிகளுக்கும் தாமாக சுய மருத்துவம் செய்வதும், வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதும், உயிருக்கே  ஆபத்தாக முடியலாம். ரத்த அணுக்களைக் குறைப்பது, குடல் புண்களை ஏற்படுத்துவது போன்ற சின்னச் சின்ன பிரச்னைகளில் தொடங்கி, சிறுநீரக  பாதிப்பு, கல்லீரல் பழுது வரை பெரிய பயங்கரங்களுக்கும் அது காரணமாகலாம்…’’
ht2378

No comments:

Post a Comment