Sunday, 20 April 2014

எல்.ஐ.சி.யின் புதிய டேர்ம் இன்ஷூரன்ஸ்: பிரீமியம் குறைந்தது!

கடந்த வருடங்களில் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் டேர்ம் பாலிசிக்கான பிரீமியத்தைவிட எல்.ஐ.சி.யின் டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியம் மிக அதிகமாக இருந்தது. இதற்கு காரணம் எல்.ஐ.சி நிறுவனம், பழைய இறப்பு விகித அட்டவணையைப் பயன்படுத்தி பிரீமியம் கணக்கிடுகிறது 
இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பான ஐஆர்டிஏ இன்ஷூரன்ஸ் பாலிசிகளை நெறிமுறைப்படுத்தி புதிய விதிமுறை களை சமீபத்தில் அறிவித்தபின், எல்ஐசி தன் டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் பல மாற்றங்களை செய்து புதிய பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் பாலிசிதாரருக்கு என்ன கூடுதல் பலன் என்று பார்ப்போம்.
எல்ஐசியில் ஏற்கெனவே அன்மோல் ஜீவன், அமுல்யா ஜீவன் என இரண்டு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் இருந்தன. அவை இப்போது மாற்றியமைக்கப்பட்டு அன்மோல் ஜீவன் மிமி , அமுல்யா ஜீவன் மிமி என  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அன்மோல் ஜீவன் பாலிசியில் 25 லட்சம் ரூபாய் வரைக்கும், அமுல்யா ஜீவன் பாலிசியில் 25 லட்சம் ரூபாய்க்கு மேலும் கவரேஜ் பெறலாம். இந்த பாலிசிகளில் 5 வருடம் முதல் அதிகபட்சமாக 35 வருடம் வரை கவரேஜ் பெற முடியும். இந்த பாலிசியில்  சிங்கிள் பிரீமியம் செலுத்தும்முறையை நீக்கிவிட்டார்கள்.
எல்ஐசி கடந்த ஜனவரிக்கு முன் 1994-96ம் வருட இறப்பு விகித அட்டவணையைப் பின்பற்றி வந்தது. தற்போது 2006-08ம் வருட இறப்பு விகித அட்டவணையைப்  பின்பற்றுவதால் டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியம் சுமார் 33 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
இந்த பாலிசிகளுக்கு பிரீமியம் செலுத்துவதற்கான கிரேஸ் பீரியடு 15 நாட்களிலிருந்து 30 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்ஐசியின் டேர்ம் பாலிசியில் பிரீமியம் செலுத்த தவறிய இரண்டு வருடங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் பாலிசியை 9.5 சதவிகிதம் அபராதத் தொகை செலுத்தி புதுப்பித்து கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் கிளைம் கிடைக்காது என்பதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
25 வயதுடையவருக்கு 20 வருடத்துக்கு 1 கோடி ரூபாய் கவரேஜுக்கு முன்பு 21,810 ரூபாயாக இருந்த ஆண்டு பிரீமியம் தற்போது 12,700 ரூபாயாக குறைந்துள்ளது.
ஆனால், தனியார் நிறுவனங்களின் ஆன்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியம் என்பது இதைவிட குறைவாக உள்ளது. அதாவது, 30 வயதுள்ளவர், 30 வருடத்துக்கு, ஒரு கோடி ரூபாய் கவரேஜுக்கு பாலிசி எடுத்தால், குறைந்தபட்சம் சுமார் 7,500 ரூபாய் முதல் அதிகபட்சம் 17,000 ரூபாய் வரைதான் பிரீமியம் உள்ளது.
இதுகுறித்து எல்ஐசியின் சென்னை மண்டல மேலாளர் டி.சித்தார்த்தனிடம் கேட்டோம்.
''எல்ஐசி என்பது பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம். எங்களின் கிளைம் செட்டில்மென்ட் என்பது நன்றாக இருக்கிறது. ஆனால், தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் கிளைம் செட்டில்மென்ட் சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.
அதேபோல தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசி எடுத்தவர் ஓரிரு ஆண்டுகளில் இறந்துவிட்டால், கவரேஜ் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதத்தைதான் செட்டில் செய்கின்றன. மேலும், சின்னச் சின்ன காரணங்களுக்காக தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கிளைமை நிராகரித்துவிடுவார்கள். ஆனால், எல்ஐசியில் அப்படி செய்ய மாட்டோம்'' என்றார்.
தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், கவரேஜ் தொகையை குறைத்து வழங்க முடியுமா எனப் பார்தி ஆக்ஸா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி சீனிவாசனிடம் கேட்டோம். ''எல்.ஐ.சி. கூறுவதுபோல, கிளைம் தொகையைக் குறைத்து கொடுப்பதற்கான வாய்ப்பே இல்லை. ஏனெனில், இப்படி செய்யும் போது பாலிசிதரார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர முடியும். அதாவது, நுகர்வோர் நீதிமன்றம், சிவில் நீதிமன்றம், இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன் எனப் பல இடங்களில் புகார் அளிக்க முடியும். புகார் நிரூபிக்கப்பட்டால் ஐஆர்டிஏ அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். எனவே, இது முற்றிலும் தவறான தகவல்'' என்றார்.
'ஏற்கெனவே எல்ஐசியில் டேர்ம் இன்ஷூரன்ஸ் வைத்திருப்பவர் அந்த பாலிசியை விட்டுவிட்டு குறைந்த பிரீமியம் கொண்டுள்ள புதிய பாலிசியை எடுக்க முடியுமா?’ என்று சித்தார்த்தனிடம் கேட்டோம்.
''இதற்கு வாய்ப்பு குறைவு. ஏனெனில், எல்ஐசியில் புதிதாக ஒரு பாலிசி எடுக்கும்போது ஏற்கெனவே இருக்கும் பாலிசி குறித்த விவரங்களைக் தரவேண்டியிருக்கும். அப்போது பிரீமியம் குறைவாக இருப்பதால் புதிய பாலிசி எடுக்கிறேன் என்று கூறினால் பாலிசியை தரமாட்டோம். ஒருவேளை அந்த பாலிசி காலாவதியாகி இருந்தால், புதிய பாலிசி வழங்குவோம்'' என்றார்.
எப்படி என்றாலும், இது ஒரு நல்ல தொடக்கம்!
thanks:v

No comments:

Post a Comment