Sunday 20 April 2014

திண்டுக்கல் பிரியாணி ருசி ரகசியம்


இந்தியாவில் முகலாய மன்னர்கள் ஆட்சி செய்த இடங்களில் எல்லாம் பிரியாணி வாசனை பரவியது. ஆனால் பாரசீக முறையில் இருந்து இந்திய பிரியாணி தயாரிப்பு முறை மாறுபட்டது. இது ஐதராபாத்தில் புது வடிவம் பெற்றது. ஐதராபாத் நிஜாம் அரண்மனையில் மீன், இறால்,  மான், முயல் என்று 49 வகைளில் பிரியாணி சமைக்கப்பட்டதாக செய்திகளில் அறியலாம்.  
ஐதராபாத்தில் புதுவடிவம் பெற்ற பிரியாணி அங்கிருந்து, திண்டுக்கல்லுக்கும் வந்தது. இன்று தமிழகத்தில் திண்டுக்கல் பிரியாணிக்கு என்று தனி அடையாளம் உள்ளது. இதன் சுவை ரகசியம் என்ன?
பொதுவாக பிரியாணி என்றால் நீளமான பாசுமதி அரிசியில் தான் தயாரிப்பார்கள். ஆனால்,  திண்டுக்கல்லில் மிகவும் சிறிய அளவில் இருக்கும் சீரக சம்பா அரிசியை தான் பிரியாணிக்கு  அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இந்த சீரக சம்பா அரிசியில் இருக்கும் ஒருவித மணம்  பிரியாணிக்கு கூடுதல் சுவையை சேர்க்கும்.  
இந்த சீரக சம்பா அரிசி, மசாலா பொருட்களின் சுவையை அப்படியே உள்வாங்கி கொள்கிறது.  பிரியாணியின் ஒவ்வொரு சாதத்திலும் மசாலா சாறு ஏறி சுவைக்க வைக்கிறது. மேலும்  திண்டுக்கல்லில் பிரியாணியை சமைக்க ஆத்தூர் காமராஜர் அணை தண்ணீரை  பயன்படுத்துவார்கள். மலை ஆறுகளில் இருந்து வந்து சேரும் ஆத்தூர் அணை தண்ணீர்  இயற்கையாகவே சுவை நிறைந்தது. இதில் சமைக்கப்படும் பிரியாணிக்கும் தனி சுவை கிடைக்கும். இதனால் திண்டுக்கல் பிரியாணி தனித்தன்மை வாய்ந்ததாக திகழ்கிறது.
சீரக சம்பா அரிசியுடன், குறும்பாட்டு இறைச்சி அல்லது புதிதாக அறுக்கப்பட்ட கோழி  இறைச்சியை சேர்த்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய், புதினா, கொத்தமல்லி என நறுமண  பொருட்களுடன், இஞ்சி, பூண்டு, மிளகாய், வெங்காயம் மசாலா பொருட்களும் சரிவிகிதத்தில்  சேர தயாராகும் திண்டுக்கல் பிரியாணி காற்று வீசும் திசையெங்கும் அசைவ பிரியர்களை  கவர்ந்து இழுத்து விடுகிறது. பிரியாணி  சிவப்பாக தோன்ற வேண்டும் என்பதற்காக கலர் பொடியை சேர்க்கிறார்கள். திண்டுக்கல்லில்  அப்படி கலர் பொடி எதுவும் சேர்ப்பது இல்லை. மாறாக மசாலா பொருட்கள் கலவையால்  பழுப்பு நிறத்தில் திண்டுக்கல் பிரியாணி இருக்கும்.
திண்டுக்கல் பிரியாணியுடன்  தாழ்சா என்ற கூட்டு கொடுப்பார்கள். அது பருப்பு, கத்தரிக்காய் கலந்த சாம்பார் போல் இருந்தாலும்  அதற்குள் இறைச்சி எலும்புகள் சேர்க்கப்படுகின்றன.
பிரியமான பிரியாணியை இலையில் நடுவே வைத்து, அதன் ஒரு ஓரத்தில் தாழ்சாவை ஊற்றி,  அருகில் தயிர் பச்சடியை வைத்து தொட்டுக் கொண்டே சாப்பிட படு அமர்க்களமாக இருக்கும்.  இந்த தாழ்சாவில் இறைச்சி எலும்புகள் சேர்க்கப்படுவதால், புதுவித சுவையை கொடுப்பதோடு,  பிரியாணி சாப்பிடும் போது தெவிட்டாது. அங்கும் இங்குமாக திண்டுக்கல்லை தொடுகிறவர்கள் இந்த பிரியாணியையும் தொட்டுவிட்டே செல்கிறார்கள். இங்கு 30 விதமான பிரியாணி தயாராகிறது.
சமீபகாலமாக திண்டுக்கல் பிரியாணி விமானத்திலும் பறக்கிறது.
ஆம், திண்டுக்கல்லில் இருந்து அரேபிய நாடுகளுக்கு வியாபார விஷயமாக முக்கிய பிரமுகர்கள்  சென்று வருகின்றனர். இவர்கள் காலை 7 மணிக்கு கம,கமக்கும் பிரியாணியை வாங்கி கொண்டு  காரில் திருச்சி செல்கின்றனர். பின் அங்கிருந்து விமானம் மூலம் அரேபிய நாடுகளுக்கு செல்லும்  அவர்கள் நண்பர்களுக்கு திண்டுக்கல் பிரியாணியை அன்றே கொடுத்து மகிழ்கிறார் கள்.
திண்டுக்கல்லில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை கெட்டி தயிரில் ஊறவைத்து, அதில்  மிளகாயை சிறு,சிறு துண்டுகளாக்கி அதனுடன் உப்பும், சிறிதளவு சர்க்கரையும் (சீனி)  சேர்க்கிறார்கள். இந்த தயிர் பச்சடியை தொட்டுகொண்டால், பிரியாணியை கூடுதலாக ஒரு பிடி, பிடிக்க தோன்றும்.
பிரியாணியில் பலவித மசாலா பொருட்கள் சேர்கின்றன. அதனுடன் இறைச்சியும் சேர்வதால்  ஜீரணம் ஆவதில் தாமதம் ஏற்படும். இதனால் நெஞ்சு எரிச்சல், வயிறு பொறுமல் போன்ற உபாதைகள் உருவாகும். இதை சரிசெய்யவே இஞ்சி, பூண்டு சேர்க்கிறார்கள்.  ஆனால், எண்ணெய் மற்றும் டால்டா அதிகமாக சேரும்போது வயிற்று தொந்தரவு ஏற்பட்டு விடும்.  அதை தவிர்க்க டால்டாவிற்கு பதில் நெய் சேர்க்க வேண்டும்.
பிரியாணி சாப்பிட்டால் தாகம் எடுக்கக் கூடாது. பிரியாணியில் எண்ணெய், டால்டா சேர்த்தால்  அதிகமாக தாகம் எடுத்து கொண்டே இருக்கும். இதனால் பலர் தண்ணீர், டீ, குளிர்பானம் என்று  குடித்து கொண்டே இருப்பார்கள். எனவே, நெய் சேர்த்து சமைக்க வேண்டும்.
சிக்கன் பிரியாணியை மிகவும் எளிமையாக செய்யும் முறை குறித்து திண்டுக்கல் நாகல்நகர்  பிரியா சிவக்குமார், தனது மகள் விபூஷ்ணா மற்றும் தோழியுடன் இணைந்து செயல்முறை  விளக்கம் அளித்தார்.
தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி     –    1 கிலோ
சிக்கன்     –    1 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது    –  4 கரண்டி
பட்டை     –     10 கிராம்
கிராம்பு     –     10 கிராம்
ஏலக்காய்     –     10 கிராம்
பிரிஞ்சி இலை     –     10 கிராம்
ஜாதிபத்திரி     –     10 கிராம்
பச்சை மிளகாய்     –     10
காய்ந்த மிளகாய் (வற்றல்) – 10
தக்காளி    –    2 பெரியது
பெரிய வெங்காயம் –     2 பெரியது
சின்ன வெங்காயம் –     25 கிராம்
புதினா     –     2 கப்
கொத்தமல்லி     –     2 கப்
முந்திரி     –    தேவையான             அளவு
எண்ணெய்     –     100 மி.லி.
நெய்     –     100 மி.லி.
தயிர்     –     1 கப்
செய்முறை
அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பட்டை, கிராம்பு, ஏலக்காய்,  ஜாதிபத்திரி ஆகியவற்றை அரைத்து பொடியாக்க வேண்டும். பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய்  ஆகியவற்றை தனியாகவும், கொத்தமல்லி மற்றும் புதினாவை தலா ஒரு கப்புகள் எடுத்து சேர்த்து  தனித்தனியாக அரைத்து விழுதாக தயாரிக்க வேண்டும். அதேபோல் சின்ன வெங்காயத்தை  விழுதாக அரைத்து, தக்காளி, பெரிய வெங்காயத்தை தனித்தனியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய்யை ஊற்றி நன்கு காய வைக்க வேண்டும்.  அதில் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு பொன்னிறமாக மாறும்வரை கிளறி, பின்னர் பட்டை,  கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி பொடி, பிரிஞ்சி இலை ஆகியவற்றை போட்டு கிளற வேண்டும்.  அதையடுத்து சின்ன வெங்காய விழுது, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, மிளகாய்  விழுது, கொத்தமல்லி, புதினா விழுது என்று ஒவ்வொன்றாக வரிசையாக போட்டு நன்கு கிளற  வேண்டும்.
பின்னர் கழுவி சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை எடுத்து அதில் போட்டு கிளறிவிட வேண்டும். அப்போது அடுப்பில் தீ நன்றாக எரிய வேண்டும். இறைச்சியில் மசாலா  சேர்ந்ததும் தேவையான அளவு தயிர், கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள், உப்பு போட்டு  தண்ணீரை ஊற்ற வேண்டும். (அரிசி 5 கப்என்றால் தண்ணீர் 8 கப் இருக்க  வேண்டும்) நன்றாக கொதிக்க விட வேண்டும். தண்ணீர் குமிழ்விட்டு கொதித்ததும் அரிசியை அதில் போட்டு மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் வற்றத் தொடங்கியதும் குக்கர் மூடியை மூடிவிட வேண்டும். மூடியில் குண்டு (விசில்) போடக்கூடாது. 5  நிமிடங்கள் கழித்து குக்கர் மூடியை திறந்து நெய்விட்டு கிளறி மூடி, குண்டு போட வேண்டும். 5  நிமிடங்கள் தீயை மிகவும் குறைத்து வைத்து அணைத்து விடவும். மீண்டும் 5  நிமிடங்கள் கழித்து குக்கரை திறக்கும் போது மணக்கும் திண்டுக்கல் சிக்கன் பிரியாணி தயாராக இருக்கும்.

No comments:

Post a Comment