Friday 25 April 2014

இயற்கைக்கு 'ஹலோ’... நோய்களுக்கு 'குட்பை’!

''வெளிப்புறத் தோற்றத்துக்கு அதிகளவு அக்கறை எடுத்துக்கொள்ளும் நாம், ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் பெரிதாக மெனக்கெடுவதில்லை!''
- முதல் வரியிலேயே சாடுகிறார், சென்னை, அண்ணாநகர், 'இயற்கைப் பிரியன்’ இரத்தினசக்திவேல்.
''இன்றைய அவசர உலகத்தில், இயற்கை மருத்துவத்துக்கு நேரம் ஒதுக்குவதென்பது, பலருக்கும் சிரமமானதாக இருக்கும். ஆனால், இயற்கை உணவைப் பழக்கப்படுத்துவது நிச்சயம் எளிதானதே!'' எனும் இரத்தினசக்திவேல்... இயற்கை உணவு வகைகள், உடற் பிரச்னைகளுக்கான இயற்கை உணவுப் பழக்க தீர்வுகள் பற்றி, இதுவரை எண்பத்தைந்து புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார். இங்கே, அவற்றின் சாரம் தந்தார் நமக்கு.
இயன்றவரை இயற்கை உணவு!
''நாம் உண்ணும் உணவுதான், ஆரோக்கியத்தை ஆதரிப்பதும், எதிர்ப்பதும். மேலைநாட்டினரின் உணவுப் பழக்கத்தைப் பின்பற்றினால், நம் ஆரோக்கியத்துக்கு நாமே எதிரியாவோம். நாம் வாழும் இடம், இங்கே விளையும் பொருட்கள், இதன் காலச்சூழல் என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து, அனுபவத்தின் வாயிலாக உருவாக்கப்பட்டதுதான்... நம்முடைய உணவு முறை. அதைத்தான் முன்னோர் கடைப்பிடித்து வந்தனர். அவர்களின் உணவுப் பழக்கத்தைப் பின்பற்றினால், ஆரோக்கியம் எப்போதும் நம்முடன் இருக்கும்.
இயன்றவரை இயற்கை உணவு, இயலாதபோது சமையல் உணவு என என் வாழ்க்கையை மாற்றிக்கொண்ட பின், கண் பிரச்னை, மூச்சுத் திணறல், மலச்சிக்கல், அல்சர் என என்னைப் பிடித்திருந்த பல பிரச்னைகளிலிருந்தும் நான் விடுபட்டது உண்மை.

ஒரு நாளின் மூன்று வேளை உணவை இப்படிப் பிரித்துக் கொள்ளலாம்.

ஒரு வேளை சமைக்காத உணவு,
ஒரு வேளை அரிசி, சர்க்கரை, உப்பு சேர்க்காத உணவு,
ஒரு வேளை எண்ணெய் போன்றவை சேர்க்காமல் ஆவியில் வெந்த உணவு.
இதனால் செலவும் குறையும், குறைவில்லாத வாழ்வும் நிலைக்கும்.
வெள்ளை உணவுகளை விலக்குங்கள்!
வெண்மையாக, 'பளிச்’ என்று கவரும் எந்த உணவையும் உட்கொள்ளக் கூடாது என்று சபதம் எடுப்பது மிகச்சிறந்தது. உதாரணமாக, அரிசி, மைதா, உப்பு, சர்க்கரை (ஜீனி), பால் போன்றவை. இவையாவும் நம் உடலின் புரதச்சத்தை அதிகரிக்கச் செய்து, உடல் பருமனையும், இன்னும் பிற பிரச்னைகளையும் கொடுக்கும். பச்சையாக இருக்கும் கீரை வகைகளும், கேரட், பீட்ரூட், தக்காளி போன்ற வண்ணமான காய்கறிகளும் நோயற்ற வாழ்வைக் கொடுக்கும்.
இன்று பெரும்பாலானவர்கள், குறிப்பாக இளம்வயதினர் மூட்டுவலி, உடல் எடை அதிகரித்தல், தலைமுடி உதிர்வது, ஹார்மோன் சமச்சீரின்மை என்று குறிப்பிட்ட நோய்களுக்கு அதிகம் இலக்காகிறார்கள். ஆனால், 'நோய் ஒன்றே... பல அல்ல' என்பது இயற்கை மருத்துவக் கோட்பாடு. அதாவது, ஆங்கில மருத்துவத்தைப் பொறுத்தவரை, ரத்த சூட்டின் தன்மையை வைத்து, நோய் காரணிகளைக் கண்டறிவார்கள். ஆனால், இயற்கை மருத்துவத்தில் ரத்த சுத்தத்தை வைத்துக் கண்டறிவார்கள். அதனால், ரத்தம்தான் நோய்க்கான முதல் காரணி. இயற்கை மருத்துவத்தில் சிலசமயம் ஒரே மருந்துகூட, பல பிரச்னைகளைத் தீர்க்கும். இத்தகைய பிரச்னைகளுக்கெல்லாம் காரணம், உணவைச் சரியான பதத்தில் எடுத்துக்கொள்வதில்லை என்பதுதான்.
பெரும்பாலும் மேலைநாட்டு உணவுக் கலாசாரத்தையே சிரத்தை எடுத்து பின்தொடர்கிறோம். காய்கறிகளைக் கழுவி நறுக்க வேண்டும்;
நறுக்கிய பின் கழுவினால், அந்த உணவின் பலன் நீரோடு சென்றுவிடும்.
அதேபோல வெள்ளரி, கேரட், ஆப்பிள் போன்றவற்றை கழுவியவுடன் கடித்துச் சாப்பிட வேண்டும், நறுக்கக் கூடாது.
புரதக்குறைவே பொடுகுக்குக் காரணம்!
பெண்களின் தலையாய பிரச்னை, தலைமுடி. குளித்தபின்பு கேசத்தை 30 நிமிடங்கள் நன்றாக விரித்து உலரவிட வேண்டும். ஆள்காட்டி விரலை கேசத்தின் வேர்ப்பகுதியில் நன்கு அழுத்தி எடுத்துப் பார்க்கையில், ஈரப்பசை இன்றி நன்றாக காய்ந்திருந்தால் மட்டுமே தலைமுடியை பின்னல் இடவேண்டும்.
குளிக்கும்போதும், எண்ணெய் தேய்க்கும்போதும் கைவிரல்களை எதிரும் புதிருமாக தேய்த்து மசாஜ் கொடுக்கலாம். கறிவேப்பிலை, நெல்லி, கரிசலாங்கண்ணி போன்றவற்றை சேர்த்து, அரைத்து, வடிகட்டி, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயோடு கலக்க வேண்டும். இதை சூரிய வெப்பத்தில், பத்து நாட்களுக்கு தினமும் சுமார் 8 மணி நேரம் வைத்து சூடேற்ற வேண்டும். அல்லது சிம்னி விளக்கில் லேசான பதத்தில் சூடாக்கலாம். பிறகு, தினமும் தலைக்குத் தேய்த்துக்கொள்ளலாம்.
பொதுவாக பொடுகு, தலைசூடு, தலைபாரம், தலைவலி, தும்மல், சளி, இருமல், மூக்கில் நீர்வடிதல், மூச்சு விடுவதில் சிரமம் இப்படி பலதரப்பட்ட பிரச்னைகளுக்கு உண்மை காரணம்... நம் உடலில் இயற்கை புரதக்குறைவு ஏற்படுவதே.

கறிவேப்பிலையை சாறு, கீர், சூப், துவையல் என உணவில் ஏதாவது ஒரு வகையில் அதிகம் சேர்க்க வேண்டும்.
காளான், தேங்காய், முளைகட்டிய தானியம் எடுத்துக்கொள்வதும் புரதம் கிடைக்கச் செய்யும்.
குட்பை சொல்லுங்கள்... காபி - டீக்கு!
தாதுக்களும், விட்டமின்களும் உன்னத உடல் மாளிகையின் உறுதியான தூண்கள். அவற்றின் இருப்பிடம்... கனிச்சாறுகளே. ஆனால், வெள்ளையர்கள் வெளியேறினாலும்... அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற காபி, டீயின் அடிமைகளாக இருக்கிறோம் நாம். காலையில் காபி, டீ அருந்துவது, மிகத்தவறான உணவுப் பழக்கம். இரவில் பிற உறுப்புகள் இயங்காமல் வயிறு, ஜீரண உறுப்புகள் மட்டும் இயங்கும். எனவே, காலையில் வயிற்றுப் பகுதியானது, பிற பகுதிகளைவிட அதிக சூடாக இருக்கும். அப்போது சூடாக காபி, டீ குடித்தால், அது நரம்பு மண்டல செயல்பாடுகளை சீர்குலைக்கும்.
எனவேதான் நம் பாட்டனும், பூட்டனும் காலையில் எழுந்தவுடன் வயிற்றுக்கு குளுகுளுவென 'நீச்சத்தண்ணி’ (நீராகாரம்) குடித்தார்கள். நாம் பச்சைத் தண்ணீராவது குடிப்போம்... தினமும் காலை வெறும் வயிற்றில்! இதுதான் அமிர்தம். கூடவே, பழச்சாறுகளை நாடலாம். அதிலும் இந்த வெயிலுக்கு, மிக நல்லது. கோடையில் 'சூடு’ பிடித்துக்கொள்வதால் குழந்தைகள் பெரிதும் அவதிப்படுவார்கள். ஒரு காட்டன் துணியை குளிர்ந்த நீரில் நனைத்து, குழந்தையின் அடிவயிற்றில் வைத்திருந்தாலே போதும்... சூடு சட்டென்று விலகி ஓடிவிடும்.
thanks:v

No comments:

Post a Comment