உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின்
துளி மீசை கொண்டிருந்த இருவர் உலகை ஆட்டிப்படைத்தார்கள். ஒருவர் ஹிட்லர், இன்னொருவர் சாப்ளின். ஒருவர் பத்தாண்டுகளில் காணாமல் போய்விட்டார். இன்னொருவர் காலங்களைக்கடந்து கண்கலங்க வைப்பார்.
அப்பாவும் அம்மாவும் பிரிந்த பொழுது பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு அம்மாவிடம் வந்து சேர்ந்தது .க்ளப்களில் திருமணத்துக்கு முன் பாடிக்கொண்டிருந்த அவர் மீண்டும் பாடப்போன பொழுது குரலே பண்ணிய குறும்புகள் எல்லாரையும் கவர்ந்துவிட்டன. காசுகளை அவர்கள்வீசிய பொழுது அள்ளிக்கொள்ள குனிந்த அந்த நாயகனை வாழ்க்கை தொடர்ந்து குட்டிக்கொண்டு தான் இருந்தது பிரிந்த பெற்றோர்,துரத்திய வறுமை ,பசி ,தோற்ற காதல்கள் ,மனநலம் குன்றி நின்ற தாய்,கல்வியே கிடைக்காத வாழ்க்கை இவ்வளவும் இருந்தும் அதன் ஒரு சாயல் கூட இல்லாமல் ஸ்க்ரீனில் ரசிகனை சிரிக்க வைத்த நாயகன் அவர் .
மார்க் சென்னெட்டிடம் நடிக்க சேர்ந்து வேகமான படம் எடுத்துக்கொண்டு இருந்தவரிடம் நிதானமான தன் பாணியை காப்பாற்றி கொண்ட இவரின் தனித்துவம்;அன்றைய ஹாலிவூட் நடிகர்களில் அதிக பணம் பெற்ற பொழுதும் ஒற்றை அறையில் வாழ்ந்த எளிமை ,ஒரே வருடத்தில் பன்னிரெண்டு படங்கள் எடுத்து எல்லாவற்றிலும் சமூகத்தின் வலியை சொன்ன சினிமா போராளி !
ஹைட்டியுடன் நிறைவேறாத காதல் ,உலகமே கொண்டாடியும் மனநலம் குன்றிய அம்மாவுக்கு தான் புகழின் உச்சத்தில் இருப்பதை புரிய வைக்க முடியாமல் கதறி அழுத பொழுது அவரின் மனநிலையை நீங்கள் யூகித்து கொள்ளலாம் .
பேசும் படங்கள் உலகை முற்றுகையிட்ட பொழுது மவுனமாக ரசிகனிடம் மவுனப்படங்களின் மூலம் சாதிக்க முடியும் என சவால் விட்டார் .ஒரு அரங்கு கூட கிடைக்காமல் தடுத்தார்கள் .எப்பொழுதும் நிரம்பாத ஹென்றி சி. கோவன் அரங்கு தான் கிடைத்தது ;சிட்டி லைட்ஸ் திரையிடப்பட்டது கூட்டம் அரங்கை தாண்டி அலைமோதியது ; அவரின் மாஸ்டர் பீஸ் என உலகம் கொண்டாடியது . அரசுகள் கலையின் மூலம் குரல் கொடுக்கும் கலைஞர்களை எதிரியாகவே பார்த்திருக்கின்றன. அதிலும் சாப்ளின் எனும் மகா கலைஞனுக்கு அமெரிக்கா,பிரிட்டன் என்று அவரை நாடுகள் துரத்திக்கொண்டே இருந்தன
வாழ்க்கை முழுக்க அழுகையால் அவரின் அகவாழ்வு நிரம்பி இருந்தது. ஸ்க்ரீன் முன் தோன்றிவிட்டால் அது எதையும் காட்டாமல் சாப்ளின் மட்டுமே தெரிவார். ""நான் மழையில் தான் நடக்கிறேன் ;நான் அழுவது உலகுக்கு அப்பொழுது தான் தெரியாது" என்று சொன்னார் அவர்.
பசி என்றால் என்னவென்று சாப்ளினுக்கு தெரியும், வறுமை என்பது என்னவென்று அனுபவித்து உணர்ந்தவர் அவர். எப்படி ஒரு நாயை போல தொழிலாளியின் வாழ்க்கை கழிகிறது என்று ஒரு படத்தில் காட்டினார் என்றால் உலகின் தலைசிறந்த மேதைகள் என கொண்டாடப்பட்ட மக்கள் எழுத்தாளர்களின் எழுத்துக்களை விடாமல் வாசித்தார். அவற்றை திரைக்கு கடத்தினார் அவர்.
தொழிலாளிகளுக்கு நேரும் அநீதிகளை படத்தில் காட்டினார். முதலாளிகளை கிண்டலடித்து மாடர்ன் டைம்ஸ் எடுத்தார் அவர். அதில் எல்லாரும் பேசுவார்கள். சாப்ளின் மவுனமாகவே திரையில் தோன்றுவார். சொந்த மகனின் இறப்பின் வலியைக்கூட திரைப்படமாக எடுக்கும் வித்தை அவரிடம் இருந்தது. அரசாங்கங்களை அவரின் படங்கள் உலுக்கி எடுத்தன. அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து இருந்தாலும் அவர் பிரிட்டன் குடிமகனாகவே இருந்தார். நம்புங்கள் இன்றைக்கும் ஹவுஸ்புல்லாக ஓடும் அவரின் படங்கள் ஊமைப்படங்கள் அவை பேசிய கதைகள் தான் எக்கச்சக்கம. ஹிட்லரை தி கிரேட் டிக்டேடர் படத்தில் நொறுக்கி எடுத்தார்.
ஹிட்லர் ரஷ்யா மீது பாய்ந்த பொழுது ஜனநாயகம் ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது ; எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் அமெரிக்கா உதவிக்கு போக வேண்டும் என்றார் மனிதர். அப்பொழுதே சந்தேக விதை விழுந்தது. கோர்ட்டில் வழக்கு போட்டு பத்து வருடங்கள் அலைய விட்டார்கள். அடுத்தது அவரின் படங்கள் வேறு அவர் ஏழைகளுக்கு ஆதரானவர் கம்யூனிஸ்ட் என்கிற எண்ணத்தை தீவிரமாக்கின.
அமெரிக்கா நாற்பது வருடங்கள் அவர்கள் தேசத்தில் வாழ்ந்து இருந்தாலும் அவரை மீண்டும் தன் மண்ணுக்குள் அனுமதிக்க மறுத்தது . அப்பொழுது அவரின் ,"அறச்சிந்தனை களங்கப்பட்டு இருப்பதாகவும் ,அவர் அரசியல் சாய்வு தன்மை உள்ளவர் ""என்றும் அமெரிக்கஅரசு தெரிவித்தது. சாப்ளின் ,"நான் புரட்சியாளன் இல்லை !மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே !"என்றார். பின் ஏசுவே ஆண்டாளும் அமெரிக்கா போக மாட்டேன் என அவர்
தெரிவித்து விட்டு சுவிட்சர்லாந்து தேசத்தில் தங்கிவிட்டார்.
அவரின் ஐரோப்பியாவில் இருந்து தயாரித்த முதல் படத்தை அமெரிக்காவில் வெளியிடவே முடியாத அளவுக்கு அவரை வில்லனாக்கி இருந்தார்கள் ! இறுதியில் இறப்பதற்கு 6 வருடங்கள் முன்பு அவருக்கு சிறப்பு ஆஸ்கர் வழங்கி தன் தவறை ஓரளவிற்கு சரி செய்துகொண்டது அமெரிக்கா. அப்பொழுது அங்கே அரங்கில் இருந்தவர்கள் எழுந்து நின்று பன்னிரெண்டு நிமிடங்கள் கைதட்டினார்கள்.
தி கிரேட் டிக்டேடர் படத்தில் அவர் எத்தகைய உலகத்தை கனவு கண்டார் என்று பேசியிருப்பார் :
ஹான்னா ! நான் பேசுவது உனக்கு கேட்கும் என்று நினைக்கிறேன். மேகங்கள் விலகி சூரியன் இருட்டை விரட்டும் பேரொளியோடு உதிக்கும் அந்த புத்துலகு. வெறுப்பு,பேராசை,மிருகத்தனங்களை கடந்து மனிதர் எழப்போகும் கருணை உலகம் அது. ஒவ்வொரு ஆன்மாவுக்கு சிறகு முளைக்கட்டும். அவன் பறக்கட்டும் . அவன் வானவில்லை நோக்கிச் செல்வான். அந்தப் பயணம் அவனை நம்பிக்கையின் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும். ஒளிமயமான மாட்சிமை மிகுந்த எதிர்காலம் உனக்கும் எனக்கும் நமக்கும் உரியதாகும்
thanks:v
|
No comments:
Post a Comment