ஜெ. 'பிரதமர்'!
கழுகார் வந்து குதிக்கும்போது அவரது சிறகுகளுக்குள் இருந்து கால்குலேட்டரும் விழுந்தது.
''நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மே 16-ம் தேதிதான் வரப்போகிறது. காங்கிரஸ் கட்சியே ஆட்சியைத் தக்கவைக்குமா, பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்குமா அல்லது இரண்டு பேருமே ஆட்சி அமைக்கும் பலத்தை அடையாமல் போக... மூன்றாவது அணி முன்னுக்கு வருமா என்பது எல்லாம் ரிசல்ட் நாள் அன்று இரவுதான் லேசாகத் தெரிய வரும். அதற்குப் பிறகுதான் சாணக்கியபுரியான டெல்லியில் அரசியல் சதுரங்க ஆட்டம் சரசரவெனத் தொடங்கும். ஆனால், கடந்த ஒரு வாரமாகவே காங்கிரஸ் மேலிடத்தில் இதற்கான முஸ்தீபுகள் தொடங்க ஆரம்பித்து இருப்பதுதான் ஆச்சர்யமும் அதிர்ச்சியுமான விஷயங்கள்!''
''என்ன செய்யத் தொடங்கியிருக்கிறதாம் காங்கிரஸ்?''
''மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாம் காங்கிரஸ் மேலிடம். இந்தியா முழுக்க எடுக்கப்பட்ட பல்வேறு சர்வேக்களும் 110 இடங்களை காங்கிரஸ் தாண்டும் என நம்பிக்கையைக்கூடத் தரவில்லையாம். 100 இடங்களை தாண்டினாலே பெரிய விஷயம் என்றுதான் சொல்கிறதாம். ஜோசியர்கள் சிலர் 65 முதல் 73 தொகுதிகள்தான் காங்கிரஸுக்குக் கிடைக்கும் என்று சொல்லி பதற்றத்தை அதிகப்படுத்துகிறார்கள். எனவே, காங்கிரஸின் நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. முதலில் ராகுல் மட்டுமே பிரசாரம் செய்தால் போதும் என்று நினைத்தார்கள். சோனியா, அவரது தொகுதியை மட்டும் பார்த்துக்கொண்டால் போதும் என்றார்கள். சோனியா உடல்நிலையும் அவ்வளவாக சரியில்லை. ஆனாலும் தேர்தல் சூழ்நிலை சரியில்லை என்றதும் சோனியாவும் பல மாநிலங்களுக்கும் போக வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து பலவீனமான சர்வேக்களே வெளியான நிலையில், பிரியங்காவும் வீட்டை விட்டு வெளியேறி வர வேண்டிய நிலை உருவானது. இவர்கள் மூவரும்தான் இந்தியாவை வலம்வர வேண்டி உள்ளது. இதுகூட காங்கிரஸின் மரியாதையைக் காப்பாற்றுமே தவிர, ஆட்சிக்குக் கொண்டுவரும் பலத்தைக் கொடுக்காது என்ற நிலையில்தான், சோனியா தனது மேல்மட்டப் பிரதிநிதிகளோடு ஆலோசனை நடத்தினார்!''
''என்ன பேசினார்களாம் அதில்?''
''காங்கிரஸ் கட்சிக்கு ஏன் இந்தப் பின்னடைவு என்று காரணங்களை அடுக்கியிருக்கிறார்கள். இவை எல்லாம் அனைவரும் அறிந்த சமாசாரங்கள்தான். அதனை விட்டுவிட்டு அடுத்த கட்ட ஆலோசனைகளை மட்டும் சொல்கிறேன். 'ராகுல் பெயரை பிரதமர் வேட்பாளராக நாம் அறிவித்திருக்க வேண்டும்’ என்றார்களாம் சிலர். 'இது காலம் கடந்த யோசனை’ என்றாராம் சோனியா. 'மூன்று மாதத்துக்கு முன் ராகுல் பெயரை அறிவித்திருந்தால், அதுவே நெகடிவ் ஆனது என்றும் சிலர் சொல்லியிருப்பார்கள்’ என்றாராம் சோனியா. அடுத்து சொல்லப்பட்டதுதான் முக்கியமானது. 'காங்கிரஸ் ஆட்சிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. பி.ஜே.பி-யை வரவிடக் கூடாது. பி.ஜே.பி. வந்து உட்கார்ந்தால் 10 ஆண்டு காலத்துக்கு அவர்கள்தான் ஆட்சியில் இருப்பார்கள். இரண்டு தடவை தொடர்ச்சியாக பிரதமராக நரேந்திர மோடி இருந்துவிடுவார். 10 ஆண்டு காலம் ஆட்சியில் காங்கிரஸ் இல்லாமல் போனால், இந்தியா முழுமைக்கும் காங்கிரஸின் கட்டமைப்பைக் காப்பாற்றுவது கஷ்டம். பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியும் இல்லை. அதனால் மாநில காங்கிரஸை ஒருங்கிணைப்பதும் முடியாது. எனவே, ஏதாவது குழப்பான சூழ்நிலையை உருவாக்கி இரண்டு வருட காலம் பி.ஜே.பி. இல்லாத காங்கிரஸ் பின்னிருந்து இயக்கும் கூட்டணி ஆட்சி வந்தால்கூட பரவாயில்லை’ என்று அந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது!''
''அப்படியா?''
''உடனேயே கால்குலேட்டர் புலிகள் தங்களது கூட்டல் கழித்தலைப் போட ஆரம்பித்தார்கள். காங்கிரஸ், பி.ஜே.பி-க்கு வெளியில் இருக்கும் கட்சிகளில் இருந்து மொத்தம் எத்தனை எம்.பி-க்கள் வருவார்கள் என்று இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. முலாயம்சிங் யாதவ், மாயாவதி, நிதிஷ்குமார், ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ் ஆகிய ஒன்பது பேர் பெயர் எழுதப்பட்டு ஒவ்வொருவருக்கும் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்றும் தோராயக் கணக்கு போட்டுள்ளார்கள். இவர்களுக்கு அவர்களின் பழைய செல்வாக்கு ஓரளவு தக்க வைக்கப்பட்டாலே மொத்தம் 120 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என்று சொல்லப்பட்டதாம். 'இதில் யாராவது ஒருவரை பிரதமராக முன்மொழிந்து அந்த ஆட்சிக்கு காங்கிரஸ் கூட்டணி பின்னால் இருந்து ஆதரித்தால் என்ன? நமக்கு பி.ஜே.பி. வரக் கூடாது, மற்றபடி யார் வந்தால் என்ன?’ என்று ஆலோசிக்கப்பட்டது. இதில் முலாயம்சிங், ஜெயலலிதா ஆகிய இருவரும் பிரதமர் ஆசையை அரசல்புரசலாக வெளிப்படுத்தியவர்கள். ஜெயலலிதா பிரதமர் ஆக, மம்தா தனது விருப்பத்தைச் சொல்லிவிட்டார். முலாயம் சிங்கை தடுக்க வேண்டுமானால் ஜெயலலிதாவை ஆதரிக்க மாயாவதி தயங்க மாட்டார். நவீன் பட்நாயக், எப்போதும் ஜெயலலிதாவின் விசிறி. 'தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆக என்னுடைய ஆதரவு உண்டு’ என்று ஜெகன்மோகனும், சந்திரசேகர ராவும் முன்வரலாம். இப்படி பல்வேறு சூழ்நிலை ஜெயலலிதாவை நோக்கி கனிந்து வந்ததை காங்கிரஸ் யோசித்தது. இதைத் தொடர்ந்து தனது தூதர் ஒருவரை பெங்களூரில் இருந்து கார்டனுக்கு அனுப்பியதாம் காங்கிரஸ்!''
''யாராம் அவர்?''
''பெங்களூரைச் சேர்ந்த, முன்னாள் முதல்வராகவும் முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவருக்கு நெருக்கமான பெண்மணி அவர். ஜெயலலிதாவுக்கும் அவர் ஆரம்பகாலத் தோழி. காங்கிரஸின் விருப்பங்கள் ஜெயலலிதாவுக்கு சொல்லப்பட்டன. எதிர்க்காற்று தான் போகும் திசைக்கு சாதகமாக அடிக்க ஆரம்பிக்கும் என்று ஜெயலலிதா நினைக்கவில்லை. காங்கிரஸ் கசப்பை விலக்கி வைத்துவிட்டு, பி.ஜே.பி. வெறுப்பை அன்று முதல் அகலமாக்கிக்கொண்டார் ஜெயலலிதா. அவரின் இறுதிக்கட்ட சென்னைப் பிரசாரப் பேச்சுக்களைக் கவனித்தால் இது புரியும்!''
''ம்! சொல்லும்!''
''தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து, 'காங்கிரஸை வீட்டுக்கு அனுப்புவதே என் வேலை’ என்று பிரசாரம் செய்துவந்த ஜெயலலிதா, காங்கிரஸை விலக்கிவிட்டு, 'இது மோடியா... இந்த லேடியா என்று முடிவெடுக்கிற தேர்தல்’ என்று சொல்ல ஆரம்பித்தது இதனால்தான் என்கிறார்கள். ஜெயலலிதா இப்படி சென்னையில் பேசிக்கொண்டு இருக்கும்போது, ராமநாதபுரத்தில் இருந்தார் ராகுல். 'குஜராத்தைவிட தமிழ்நாடு முன்னேறிய மாநிலம்’ என்று அவர் சொன்னார். 'குஜராத்தை மோடியும் தமிழ்நாட்டை ஜெயலலிதாவும் மோசமாக ஆள்கிறார்கள்’ என்றுதானே ராகுல் பேசியிருக்க வேண்டும்? அவர் ஏன் மோடியைவிட ஜெயலலிதா ஆட்சி சூப்பர் என்று மறைமுக ஆதரவைத் தரவேண்டும்? இங்குதான் இருக்கிறது சூட்சுமம். 'பி.ஜே.பி. வரக் கூடாது’ என்பதற்கான ஒன்றுபட்ட சிந்தனை ராகுலுக்கும் வந்துவிட்டது. ஜெயலலிதாவுக்கும் வந்துவிட்டது. அதனால்தான் மோடியை அதிகமாக விமர்சிக்கத் தொடங்கினார். ஜெயலலிதா ஆட்சியை மறைமுகமாக ராகுல் பாராட்டினார் என்றும் சொல்கிறார்கள்!''
''அப்படிப் போகிறதா விஷயம்?''
''பெங்களூரு தூதுவைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து இன்னொருவரும் வந்துள்ளார். மத்திய அரசின் பிரதிநிதியாக இங்கே இருப்பவரை 'மாளிகை’யில் சந்தித்துள்ளார். அவர் அ.தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு முன்பு முயற்சித்தவர் என்பதால், பேச்சு சுமூகமாகப் போனதாம். ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் பாசம் ஏற்பட அந்த 'ஐயா’ பயன்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, சில வாரங்களாக அமுங்கியிருந்த பிரதமர் ஆசை மீண்டும் ஜெயலலிதாவுக்குத் துளிர்த்துள்ளதாகச் சொல்கிறார்கள். அவரது நினைப்பு ஒன்றுதான், காங்கிரஸ், பி.ஜே.பி. இல்லாத மூன்றாவது அணி சார்பில் போட்டியிடும் கட்சிகளில் அ.தி.மு.க. அதிகமான எம்.பி-களை வைத்திருக்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் துடிப்பாக இருக்கிறதாம். இன்றைய சூழ்நிலையில் மம்தா 30 எம்.பி-க்களை தாண்டக் கூடும். ஆனாலும், அவர் டெல்லி வர மாட்டார். உ.பி-யில் இருந்து வரும் தகவல்கள் முலாயம்சிங் யாதவுக்கு அவ்வளவு இடம் கிடைக்காது என்றே சொல்கிறதாம். ஒருவேளை மாயாவதிக்குக் கிடைக்கலாம். எனவே இந்தக் கட்சிகளின் வரிசையில் 30 இடங்களுக்கு மேல் பிடிக்கும் கட்சியாக அ.தி.மு.க. இருந்தால், மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக தான் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று ஜெயலலிதா நினைக்கிறார். யார் அதிக எம்.பி-களை வைத்துள்ளார்களோ அவர்களையே மூன்றாவது அணி பிரதமர் வேட்பாளாராக அறிவிக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டு அந்த இடத்தை ஜெயலலிதா பிடிப்பார் என்கிறார்கள். முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஜெயலலிதாவை முன்மொழிய இப்போதே தயாராகிவிட்டார். காங்கிரஸ் கட்சியும் மனதளவில் தயாராகிவிட்டது என்பதற்கான அறிகுறியே டெல்லி, பெங்களூரு தூதுவர்கள்!''
''பெரிய மாற்றமாக இருக்கிறதே?''
''மனதளவில் காங்கிரஸ் தயாராகிவிட்டது என்பதற்கு உதாரணம்தான் அமைச்சர் சல்மான் குர்ஷித் பேச்சு. தனது சொந்த மாநிலமான உ.பி. சென்ற குர்ஷித், 'தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு ஆட்சி அமைப்பதற்கு, தேவைப்பட்டால் மூன்றாவது அணி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தருவது குறித்து காங்கிரஸ் பரிசீலிக்கும். அதுமட்டுமல்லாமல், ஆட்சியமைக்க மூன்றாவது அணியிடம் இருந்து ஆதரவைப் பெறுவது பற்றி காங்கிரஸ் கட்சி யோசிக்கும்’ என்று குர்ஷித் சொல்லியிருக்கிறார். மூன்றாவது அணியில் இருக்கும் தலைவர்கள் இப்போதே டெல்லிக்கு கிளம்பத் தயாராகிவிட்டார்கள்!''
''அதில் ஜெயலலிதாவும் ஒருவரா?''
''ம்! குர்ஷித் சொன்ன அதே நாள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் அபிஷேக் மனு சிங்வி கொல்கத்தாவில் இருந்தார். அவரும், 'தேர்தலுக்குப் பிறகு யாருக்கு எத்தனை இடங்கள் என்ற எண்ணிக்கைதான் ஆட்சியைத் தீர்மானிக்கிறது. எனவே, தேர்தல் முடிவுக்குப் பிந்தைய சூழ்நிலையைப் பொறுத்து தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை மற்றும் அனைவருக்குமான வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் கூட்டணி அமைப்பது பற்றி காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும்’ என்று அபிஷேக் மனு சிங்வி சொல்லியிருக்கிறார். இதே நாளில் மும்பையில் நிருபர்களைச் சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் பிருத்விராஜ் சவாண், 'மூன்றாவது அணியுடன் இணைந்து ஆட்சி அமைப்போம்’ என்று சொல்லியிருக்கிறார். குர்ஷித், சிங்வி, சவாண் ஆகிய மூவரும் சோனியா, ராகுல் குரலை மட்டுமே வழிமொழியக் கூடியவர்கள். எனவேதான் அவர்களது பேச்சு உன்னிப்பாகக் கவனிக்கத்தக்கது என்று டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன.''
''இது சாத்தியமா?''
''பி.ஜே.பி-யும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 272 தொகுதிகளை எட்டிவிட்டால் இந்த வாதப்பிரதிவாதங்களுக்கே அவசியம் இல்லை. அது வராமல் போனால்தான் சிக்கலே! பி.ஜே.பி-யை முலாயம் சிங், மாயாவதி, ஜெயலலிதா, நவீன் பட்நாயக் ஆகிய தலைவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் நம்புகிறது. மோடியை நிதிஷ்குமார் ஆதரிக்கமாட்டார் என்று காங்கிரஸ் நினைக்கிறது. மம்தா, ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ் ஆகிய மூவரும் ஒருவேளை பி.ஜே.பி-யை ஆதரிக்கலாம். காங்கிரஸின் இந்த மூவ் தெரிந்ததால்தான் மோடி, 'ஜெயலலிதா, மம்தா, மாயாவதி ஆகியோர் தயவு தேவைப்படாத அளவுக்கு அறுதிப் பெரும்பான்மையை பி.ஜே.பி. பெறும் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இப்படி ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் பச்சைக்கொடி காட்ட ஆரம்பித்திருப்பதை அறிந்த மாயாவதியும், 'நான் பிரதமர் வேட்பாளர்தான்’ என்று திடீரெனச் சொல்ல ஆரம்பித்துள்ளார். முலாயம்சிங் தனது பிரதமர் கனவை வெளிப்படுத்தி இரண்டு மாதங்கள் ஆகிறது. முலாயம் எதைச் சொன்னாலும் உடனடியாக ரியாக்ஷன் காட்டக் கூடிய மாயாவதி இதுநாள் வரை அமைதியாக இருந்துவிட்டு, இப்போது தனது பிரதமர் கனவை வெளிப்படுத்த ஆரம்பித்திருப்பதன் பின்னணியும் இதுதான் என்கிறார்கள்!''
''முதல்வர் கொடநாடு சென்று விட்டாரே?''
''ஏப்ரல் 27-ம் தேதி கொடநாடு கிளம்பிவிட்டார். 'அங்கிருந்தபடியே அரசு பணிகளை சில நாட்கள் கவனிப்பார்’ என்று தமிழக அரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. தேர்தல் வேலைகள் முடிந்துவிட்டதால், அமைச்சர்கள் கோட்டைக்கு வந்து செல்கிறார்கள். ஆனால், அவர்களைப் பார்க்க பொதுமக்கள் வராததால் கோட்டை வெறிச்சோடியே காணப்படுகிறது. சனி, ஞாயிறுகளில் அமைச்சர்கள், சொந்த மாவட்டத்தில் இருக்க உத்தரவு போடப்பட்டு உள்ளது. கொடநாட்டில் இருக்கும் முதல்வர், மே 9-ம் தேதி, சென்னை திரும்புவார் என்கிறார்கள். அன்றைய தினம் 12-ம் வகுப்பு ரிசல்ட் வெளியாகிறது. முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் முதல்வரைச் சந்திக்கவும் திட்டம் இருக்கிறது.''
''தேர்தல் ரிசல்ட் வரை அங்கு இருப்பார் என்கிறார்களே?''
''மே 9-ம் தேதி வராவிட்டால், 12-ம் தேதிக்கு மேல் வருவார் என்கிறார்கள்!'' என்று சொல்லிவிட்டு சிறகை விரிக்கத் தயாரானவர், ''அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் முடிந்ததும் 26-ம் தேதி திடீர் மூச்சுத்திணறலால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். மறுநாள் முதல்வர் கொடநாடு புறப்பட்டபோது ஆஸ்பத்திரியில் இருந்த ஓ.பி.எஸ். விமானநிலையத்திற்கு போய் வழியனுப்பிவிட்டு, மீண்டும் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார்'' என்றபடி பறந்தார்.
அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன்
கொண்டுபோனவர்கள் யார்?
சென்னையில் இருந்து எல்லாத் தொகுதிக்கும் எப்படி பணம் கொண்டுசெல்லப்பட்டது என்பதை மத்திய உளவுத் துறை கண்டுபிடிக்கத் தொடங்கியிருக்கிறதாம். அரசியல்வாதிகளைப் பயன்படுத்தாமல் வர்த்தகப் பிரமுகர்களை இதில் பயன்படுத்தினார்களாம். அவர்கள்தான் வருடம் முழுவதும் பணத்தைப் பக்குவமாகக் கொண்டுசெல்பவர்கள் என்பதால், அவர்களைத் தேர்வு செய்தார்களாம். ஒரு துணிக் கடை அதிபர், இரண்டு ஹோட்டல் முதலாளிகள், ஒரு ஸ்டீல் கம்பெனி, ரெட்டி அடை மொழி கொண்ட இருவர், ராவ் அடைமொழி கொண்ட ஒருவர் என்று பெயர் திரட்டி உள்ளதாம் மத்திய உளவுத் துறை!
ஆளுக்கு 10 தொகுதி!
தேர்தல் செலவுகளை ஒழுங்காகப் பார்க்காத வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் யார் எவர் என்பதைக் கண்டுபிடித்து விசாரிக்க ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆளுக்கு 10 தொகுதியை கண்காணிக்கச் சொல்லியிருக்கிறாராம் முதல்வர். சென்னை தலைமைக் கழகத்தில் புகார்கள் குவிகிறதாம்.
''இதெல்லாம் காரணமாய்யா?''
தி.மு.க. வேட்பாளர்கள் ஒருவர் பின் ஒருவராக கருணாநிதியைச் சந்தித்துப் பேசி வருகிறார்கள். தங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கியதற்கு இவர்கள் நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். 'உங்க தொகுதியில என்ன நிலவரம்? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பீங்க?’ என்று இவர்களிடம் கேட்கிறாராம் கருணாநிதி. தி.மு.க-தான் உறுதியாக ஜெயிக்கும் என்று சிலர் சொன்னார்களாம். இன்னும் சிலரோ, 'கடைசி நேரத்தில் ஆளுங்கட்சி பணம் கொடுத்துவிட்டது’ என்றார்களாம். 'இதெல்லாம் ஒரு காரணமாய்யா... ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்லக் கூடாது’ என்று கடுகடுத்தாராம் கருணாநிதி.
தி.மு.க. கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வந்தது பற்றியும், ஸ்டாலின் பிரசாரம் பற்றியும் சிலர் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். ''கூட்டத்தை வைத்து எல்லாம் ஜெயிக்கும்னு சொல்ல முடியாது. இதுமாதிரி கூட்டத்தை 50 வருஷமா நான் பார்க்கிறேன்’ என்றாராம்!
thanks:v
No comments:
Post a Comment